Monday, March 26, 2012


கட்டுரை
ஆசிரியர் மொழி அதிகாரம்
பெருமாள்முருகன்
சென்னையிலுள்ள ஆங்கிலோ இந்தியத் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியர் உமா மகேஸ்வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் தமிழ்ச் சமூகத்தின் பொதுமனத்தில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்துத் தலையங்கம், தலைப்புக் கட்டுரை, புலனாய்வுக் கட்டுரை எனப் பத்திரிகைகள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகள் அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என ‘நடந்தது என்ன?’ என்று துப்புத்துலக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன.
இந்த ஊடகங்கள் அனைத்தும் மொத்தமாக இப்போது கட்டமைத்திருக்கும் சித்திரம் இதுதான்: ஆசிரியர் உமா மகேஸ்வரி தமக்குக் கிடைத்த வங்கி வேலையை உதறிவிட்டு ஆசிரியப் பணியில் ஈடுபாட்டோடு சேர்ந்தார். அவர் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர். திறமையானவர். கண்டிப்பு மிக்கவர். அந்த மாணவன் சரியாகப் படிக்காதவன். அதிகம் பேசாதவன். அவனுக்குத் தினசரிச் செலவுக்கு நூறு ரூபாய் வீட்டிலிருந்து கொடுப்பார்கள். அதாவது ஆசிரியர் சரியானவர்; மாணவர் சரியானவரல்ல.
சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர், மாணவர் ஆகிய இருவரைப் பற்றியும் மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சித்திரத்தை வைத்துத் தமிழகத்தில் போதகர்கள் பலர் உருவாகிவிட்டனர். சமூகத்தில் இறை நம்பிக்கை அற்றுப்போனது தான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்கின்றனர் சிலர். நன்னெறிகளையும் ஒழுக்க விதிகளையும் சரியாகப் போதித்தால் இத்தகைய சம்பவம் நடக்காது என்று கருதிப் பள்ளிக் கல்வித் துறை மூலமாக நன்னெறிப் போதனை கட்டாயம் என எல்லாப் பள்ளிகளுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேடைப் பேச்சாளர்கள் எந்தத் தயக்கமும் இன்றிச் சமகால விஷயம் ஒன்றைத் தம் பேச்சில் எடுத்துக் கையாண்டு ‘பண்பை வளர்க்கும் கல்வி அவசியம்’ என்கின்றனர். கம்ப ராமாயணம் பற்றிப் பேசும் கூட்டமாக இருந்தால் ‘எல்லாரும் கம்ப ராமாயணம் படித்தால் இத்தகைய சம்பவம் நடக்காது’ எனவும் சிலப் பதிகாரம் தொடர்பான கூட்டமாக இருந்தால் ‘எல்லாரும் சிலப்பதிகாரம் படித்தால் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது’ என்றும் அவர்கள் கூசாமல் பேசுகிறார்கள்.
நம் சமூகம் எத்தகைய மோசமான சம்பவத்திலிருந்தும் உருப்படியாக எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதற்கும் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ளத் தயாரில்லை என்பதற்கும் இதை ஊடகங்கள் அணுகும் முறையே சான்று. இச்சம்பவம் தமிழ்ச் சூழலில் மிகுந்த அதிர்ச்சி தருவது என்பது மட்டுமல்ல, இவ்விதம் நடைபெறுவது அனேகமாக இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு விருதுநகர் மாவட்டப் பள்ளி ஒன்றில் ‘சென்னையில் செய்ததுபோலக் கொலைசெய்து விடுவோம்’ என்று ஓர் ஆசிரியரை மாணவர்கள் இருவர் மிரட்டியதாகவும் அதைக் கண்டித்து அப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பின் அம்மாணவர்கள்மீது அவ்வாசிரியர் தெரிவித்த புகார் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஒரு செய்தி தெரிவிக்கின்றது. தங்கள் ஊதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர வேறெதற்கும் போராடாத ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்திருப்பதும் இதுதான் முதல்முறை. ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர்கள் முழக்கப் போராட்டங்களையும் நடத்துகின்றனர்.
இச்சூழலில் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி ‘ஆசிரியர்கள்மீது மாணவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?’ என்பதுதான். ஆசிரியர்களை ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்னும் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்திருப்பதும் ‘எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்’ எனப் போற்றுவதும் ‘ஆசிரியப் பணி அறப் பணி’ என விழுமியம் கொண்டிருப்பதும் நம் சமூகம்தான். அதேசமயம் ஆசிரியர்களை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் கேலிசெய்து கொண்டாடுவதும் இச்சமூகமே. தமிழ்த் திரைப்படங்களில் ஆசிரியர்களைக் கேலிசெய்த அளவு பிற துறையினர் எவரையும் கேலிசெய்திருப்பார்களா என்பது சந்தேகமே. உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அங்க சேஷ்டைகள் செய்யும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பல படங்களில் ஆசிரியராக நடித்துள்ளார். மிகச் சில படங்களைத் தவிரப் பெரும்பாலானவற்றில் நகைச்சுவை நடிகர்களே ஆசிரியப் பாத்திரம் ஏற்றிருக்கின்றனர். ஆசிரியர்களைக் கேலி செய்யும் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் இருக்கிறது.
மாணவ நிலையில் இருக்கும்போது ஆசிரியர்களை வெறுக்காதவர்கள் உண்டா? அவர்களுக்குச் சூட்டப்படும் பட்டப்பெயர்கள், அவன்/ள், இவன்/ள் என்னும் ஒருமை விளிகள், முடிந்த அளவு கெட்ட வார்த்தை அர்ச்சனைகள் என்பவை மிகச் சாதாரண நிகழ்வுகள். அதைத் தாண்டிய தாக்குதல் சம்பவங்கள் பலவும் நடந்திருக்கின்றன. முந்தைய தலைமுறையினரைக் கேட்டால் ஆசிரியரை அறைந்துவிட்டு, கல்லால் எறிந்துவிட்டுப் பள்ளியிலிருந்து ஓடிவந்த சம்பவங்களை அவர்கள் சாதாரணமாக நினைவுகூர்வர். அத்தோடு அவர்களின் பள்ளிப் படிப்பு நின்றுபோயிருக்கும். எனக்குத் தெரியவே இப்படிப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.
என் அண்ணன் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சிங்கம் புலியைவிடவும் மாணவர்களை அதிகம் பயமுறுத்திய ஓர் ஆசிரியர் அவனுக்கு வந்து வாய்த்தார். அவரோடு வகுப்பில் சண்டையிட்டுக் கொண்டு ஓடிவந்தவன் அடுத்த நாள் முதல் தினமும் பள்ளிக்குச் செல்வதுபோலப் புறப்பட்டுப் போய் வழியில் ஆலமரம் ஒன்றின் அடியில் மாலைவரை தங்கி விளையாடிப் பொழுதைப் போக்கிவிட்டு மாலையில் வீடு வந்துசேர்வான். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகே இதை என் பெற்றோர் கண்டுபிடித்தனர். அதன் பின்னும் அவன் படிப்பு சொல்லும்படியில்லை. அப்படி இப்படி என இழுத்து ஒன்பதாம் வகுப்போடு நின்றுபோயிற்று. ‘பள்ளிக்கூடம் எனக்குப் பிடிக்கலடா. அந்த ஆலமரம்தான் பிடிச்சதுடா’ என்பான் அவன்.
தனிவகுப்புக்கு வராத மாணவர்களைப் பள்ளியில் பிரம்பால் வெளுத்துக் கட்டிய ஆசிரியர்கள் உண்டு. நான் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பெயர் ‘பஜாஜி’ என்பது. அவருடைய பெயர் எங்களுக்குத் தெரியாது. ‘பஜாஜ்’ ஸ்கூட்டரில் வந்ததால் அவருக்கு இந்தப் பெயர். தனிவகுப்புக்கு வராத மாணவர்களுக்கும் வேறு ஆசிரியரிடம் தனிவகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கும் தினசரி பூஜை நடக்கும். பள்ளி விட்டு ஸ்கூட்டரில் தனியாகப் போய்க் கொண்டிருந்த பஜாஜியின் கவனத்தைத் திசை திருப்பி அவர் மண்டையை நோக்கிப் பெரிய கல்லை எறிந்துவிட்டு ஓடிப்போனான் என் வகுப்புத் தோழன் ஒருவன். காயத்திற்குப் போட்ட பெருங்கட்டோடு அவர் படுத்திருந்த காட்சியைக் கண்டு ரசிக்க எங்கள் வகுப்பு மாணவர்கள் அவர் வீட்டுக்குச் சென்றோம். என் தோழன்மீது எல்லாருக்கும் மதிப்பு கூடத்தான் செய்தது. கல் இன்னும் பலமாக விழுந்து ஆள் காலியாகியிருக்கக் கூடாதா என்று நாங்கள் நினைத்ததும் பேசிக் கொண்டதும் இப்போதும் நினைவில் இருக்கின்றன.
மாணவர்களை அடிக்கக் கூடாது என அரசு விதியே கொண்டுவந்த பிறகும் இன்றும் பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆசிரியர் அடித்துக் கண் ஒழுகியவர்கள், காயம்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என விதவிதமாக வரிசைப்படுத்தலாம். ஆசிரியர்களின் வன்முறையை ஆண்டு இறுதிவரை பொறுத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்ததும் பதில் வன்முறையில் இறங்குகின்றனர். நாமக்கல் மாவட்டத் தனியார் பள்ளிகளில் ஆண்டு முடிவில் மாணவர்கள் நிகழ்த்தும் வன்முறைகள் பற்றி ஒவ்வோர் ஆண்டும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவை பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் வருவதில்லை. தனியார் பள்ளிகள் பற்றிய செய்திகள் எதையும் பத்திரிகைகள் சுயமாக எழுதுவதில்லை. அப்பள்ளி நிர்வாகம் கொடுக்கும் செய்திகளை (தமிழாசிரியரின் வேலைகளில் முக்கியமானது செய்தி எழுதுவது) அப்படியே வெளியிடுகின்றன. மாணவ வன்முறை வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுப்போகும் என்பதால் அதை நிர்வாகம் மூடிமறைத்துவிடுகிறது.
ஜன்னல்களையும் கதவுகளையும் உடைப்பதும் பெஞ்சுகளைத் தூக்கி வீசித் தூளாக்குவதும் மின்விசிறி இறக்கைகளை வளைப்பதும் என மாணவர்களின் வன்முறை கட்டுக்கு அடங்காமல் போகும். விடுதிகளில் மாணவர்கள் நிகழ்த்தும் வன்முறைகள் இன்னும் பல பரிமாணங்களைக் கொண்டவை. பொருட்களைச் சேதப்படுத்துவது மட்டுமல்ல, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துப் பிடித்து வந்து ஓர் அறைக்குள் விட்டு செமத்தியாக உதைக்கும் சம்பவங்கள் பல. அந்த நாளில் ஓடி ஒளியும் ஆசிரியர்களைப் பார்த்தால் பாவமாகத் தானிருக்கும். மாணவர்கள் செய்த செயல்களுக்கு நஷ்டஈடாகப் பெற்றோர்களிடம் இருந்து கூடுதல் பணத்தை வசூலிப்பது தவிரப் பள்ளி நிர்வாகங்கள் வேறொன்றும் செய்வதில்லை. மாணவர்கள்மீது ஏதும் நடவடிக்கை எடுத்தால் அச்செய்தி பரவிப் பள்ளியின் பெயர் கெட்டுப் போகும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறையும் என்பதால் தண்டத்தொகை விதிப்பதோடு சரி. அறைக்குள் அடி வாங்கிய ஆசிரியருக்கு நூறு, இருநூறு ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கும். அவ்வளவுதான்.
மீண்டும் அதே கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். ‘ஆசிரியர்கள்மீது மாணவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?’ இதற்கு எனக்குக் கிடைக்கும் ஒற்றை வரிப் பதில் ‘ஆசிரியர் மொழி அதிகாரம்’ என்பதுதான். ஓர் ஆசிரியர் தன் மாணவரை எப்படி நடத்துகிறார்? ஆசிரியர் என்பவர் எல்லாம் தெரிந்தவர். ஆகவே அவர் சொல்வதுதான் வேதம். மாணவர்கள் அவருக்கு அடிமைகள். அடிமைகளாக வைத்திருக்கக் கையாளும் உத்திகள்தாம் எத்தனை! எத்தனை! எந்த மாணவரையும் மரியாதையாக நடத்துவதில்லை. அடிமையாக இருக்கப் பிரியப்படுபவர்களைத் தட்டிக் கொடுத்துத் தம் பக்கத்தில் வைத்துக் கொள்வதுண்டு. நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களே செல்லப் பிள்ளைகள். படிப்பில் ஆர்வம் இல்லாதவர்கள், படிப்பதில் பிரச்சினை உள்ளவர்கள் குறித்த ஆசிரியரின் அணுகுமுறை எப்போதும் திட்டுதான். அவர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவதும் பலவிதமான மிரட்டல்களை விடுப்பதும் சாதாரணம்.
இன்று நடைமுறையில் இருக்கும் வசைச்சொற்களில் குறிப்பிட்ட சிலவற்றை ஆசிரியர்கள்தாம் உருவாக்கி இருப்பர் என நினைக்கிறேன். ‘உருப்படாதவன்’, ‘முட்டாள்’, ‘தண்டம்’, ‘எருமை’, ‘கழுதை’ முதலிய சொற்கள் பள்ளிகளிலிருந்தே வெளியுலகிற்குப் பரவியிருக்கக்கூடும். ‘உனக்கு இருப்பது மூளையா களிமண்ணா?’ என்பது போன்ற கேள்விகளும் ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்னும் சாபங்களும் ஆசிரியர்கள் உருவாக்கியவைதாம். பள்ளிக்கூடங்கள் தண்டனைக் கூடங்களாகவும் இருந்ததை அறிவோம். வெளியே நிற்கவைத்தல், பெஞ்சுமேல் நிற்கவைத்தல், மணலில் முட்டிபோடுதல், பிரம்படிகள் என எத்தனையோ விதமான தண்டனைகளைப் பள்ளிகள் உருவாக்கியிருக்கின்றன. சாதிக் கொடுமையைத் தம்மளவில் நிறைவேற்றிய ஆசிரியர்களும் பலர். இன்று இவை எல்லாம் பழைய வடிவங்களில் இல்லை.
மாணவர்களை அடிக்கக் கூடாது, தண்டனை தரக் கூடாது என்றெல்லாம் விதிகள் வந்தபின் ஆசிரியர்கள் மென்மையான முறைகளைக் கையாளுகின்றனராம். சரியாகப் படிக்கவில்லை என்று திட்டுவதும் தர வரிசை அட்டையில் சிவப்பு மையால் கோடிட்டு அபாய எச்சரிக்கை காட்டிப் படிக்கவில்லை என எழுதிக் கொடுப்பதும் ‘இந்த வருசம் நீ பெயில்தான்’ என ஆசிர்வாதம் வழங்குவதும்தான் மென்மையான வழிமுறைகளாம். பிறர் முன்னிலையில் ஆசிரியரிடம் திட்டு வாங்கும் மாணவன் கொள்ளும் அவமானம், சிவப்புக் கோடிட்ட தர வரிசை அட்டையை வைத்துக் கொண்டு பெற்றோரிடம் காட்டினால் என்னவாகுமோ என விழி பிதுங்கும் மாணவனின் தவிப்பு, பெற்றோரை அழைத்துவரச் சொல்லி விடுவார்களோ என மாணவன் கொள்ளும் பதற்றம், பெற்றோரைப் பள்ளிக்கு வரவழைக்க அவன் படும் அவஸ்தை என இவை எல்லாம் இந்த மென்மையான அணுகுமுறையால் நேர்பவை. மென்மையான அணுகுமுறைகள் எவ்வளவு நுட்பமான வன்முறைகளாக இருக்கின்றன என்பதை ஆசிரியர்கள் யோசிப்பதேயில்லை. இந்த மென்மையான அணுகுமுறைகள் மகிழ்ச்சியும் குதூகலமும் நிரம்பிய இளம் பருவத்தைப் பெரும் சுமையாக மாற்றி விடுகின்றன. குற்றச்செயல் இழைக்கத் தூண்டுபவையும் இவையே.
நாமக்கல் மாவட்டத் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சம்பவம். காலாண்டுத் தேர்வு முடிந்து ஒருவார விடுமுறையில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். அவர்கள் விடுமுறையையும் மகிழ்ச்சியாக அனுபவித்துவிடக் கூடாது என்பதில் பள்ளி நிர்வாகத்தினர் பெரும் அக்கறைகாட்டுவர். விடுமுறையில் செய்வதற்கு வீட்டுப் பாடங்களைக் கொடுத்து அனுப்புவர். மாணவர்கள் வீட்டில் இருக்கும்போதே அவர்களின் மதிப்பெண்களைப் பெற்றோர் பார்வைக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பர். அந்தப் பள்ளி மாணவர்கள் பத்துப் பேர் சேர்ந்து பள்ளியில் தரும் தரவரிசைப் பட்டியலைப் போலவே போலியாகத் தயாரித்துத் தங்கள் மதிப்பெண்களை விருப்பப்படி நிரப்பி அஞ்சல் வழியாக வீட்டு முகவரிக்கு அனுப்பிவிட்டனர். பள்ளியில் இருந்து வந்த பட்டியலை அஞ்சல்காரரிடம் தாங்களே சென்று வாங்கிப் பெற்றோருக்குத் தெரியாமல் வைத்துக்கொண்டனர். போலித் தரவரிசைப் பட்டியலைப் பார்த்த பெற்றோர் அந்தப் பள்ளியில் சேர்த்ததால் அல்லவா இத்தனை மதிப்பெண் என்று சந்தோசப்பட்டுப் பாராட்டிக் கையொப்பம் போட்டுக் கொடுத்துவிட்டனர். உண்மைப் பட்டியலில் பெற்றோரின் கையொப்பத்தை மாணவர்களே போட்டுப் பள்ளிக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். எல்லாம் நல்லபடியாகவே நடந்தது. பத்துப் பேரில் ஒரு மாணவனின் அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. தன் பையன் ஒருபோதும் இத்தனை மதிப்பெண் வாங்கியவன் அல்லவே, திடீரென்று எப்படி இவ்வளவு வாங்க முடியும் என்பதுதான் சந்தேகம். பள்ளிக்கு வந்து விசாரித்தபின் மாணவர்களின் திட்டம் வெளியாயிற்று. பதினைந்து பதினாறு வயதில் ஒரு பிரச்சினையைச் சமாளிக்க இப்படித் திட்டம் போட்ட மாணவர்களின் அறிவுத்திறன் கூர்மையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அறிவுக்கூர்மை குற்றச் செயலுக்குப் பயன்பட்டுவிட்டது. இதைச் செய்யத் தூண்டியவர்கள் யார்?
மதிப்பெண் வாங்க முடியாமல் உண்டாகும் புற அக நெருக்கடிகளைச் சமாளிக்க மாணவர்கள் கையாளும் வழிமுறைகளும் தந்திரங்களும் இப்படிப் பல. அக நெருக்கடிகள் சமாளிக்க முடியாத உச்சத்தை அடையும்போது மாணவர்கள் எடுக்கும் முடிவுகள் பல. பொய் பேசுதல், ஓடி ஒளிதல், வீட்டைவிட்டு ஓடிவிடுதல் ஆகியவை அம் முடிவுகளில் சில. அத்தோடு சில நேரங்களில் தம் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவையும் எடுக்கின்றனர். தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வருகிறது.
சென்னைக் கொலைச் சம்பவம் நடந்த சமயத்தில்தான் ராசிபுரம் ஹானிமன் ஹோமியோபதிக் கல்லூரி முதலாமாண்டு மாணவி சுகன்யா கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதும் நடந்தது. அனாடமி தேர்வைச் சரியாக எழுதவில்லை என்பதால் பெயில் ஆகிவிடுவாய், அடுத்த ஆண்டுப் படிப்புக்குப் போக முடியாது எனச் சொல்லி ஆசிரியர்கள் கடுமையாகத் திட்டினார்களாம். மனமுடைந்த மாணவி தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். உடு மலைப்பேட்டை ஆர். கே. ஆர். பள்ளியில் அடுத்தடுத்து இரு மாணவர்கள் இறந்திருக்கின்றனர். கிருஷ்ணகுமார் என்னும் மாணவரின் இறப்பில் மர்மம் நிலவுகிறது. ஆசிரியர் அடித்ததால் அவன் இறந்து போனதாகவும் அது தற்கொலை என்று காட்ட விடுதி மாடியிலிருந்து தள்ளிவிட்டதாகவும் பலவிதமான தகவல்கள் வருகின்றன. சென்னைச் சம்பவத்திற்கு முன்னரே ஜனவரி 19இல் நடைபெற்ற இச்சம்பவத்தை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அதே பள்ளியில் அடுத்த சில நாட்களில் அனுராஜ் என்னும் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மூன்று கடிதங்களை எழுதி வைத்துள்ளார். அந்தப் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்துத் துன்புறுத்துவது தொடர்ந்து நடந்துவருகிறதாம். மாணவர்களின் சாவுக்குக் காரணம் என இப்போது பொருளாதார ஆசிரியர் பி. மகேஷ்வரனைக் கைது செய்துள்ளனர். அப்பள்ளியின் தாளாளர் ஆர். கே. ராமசாமி நல்லாசிரியர் விருது பெற்றவராம். தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் ஆண்டுதோறும் ஆசிரியர்களின் ‘மென்மையான’ அணுகுமுறையால் இப்படி இறக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இவையெல்லாம் ஆசிரியர்கள் செய்யும் கொலைகள் அல்லவா?
நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தம் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கும் மாணவர்களிலிருந்து மாறுபட்டுச் சென்னை சிறுவன் ஆசிரியரைக் கொல்ல முடிவெடுத்திருக்கிறான். மாணவர்களின் சாவுகள் பற்றிப் பெரிய அளவு கவனம் குவிக்காத ஊடகங்கள் ஆசிரியர் கொலை பற்றி இவ்வளவு கவனம் கொள்ளக் காரணம் என்ன? தற் கொலைகளை சகஜம் எனக் கடந்து போகும் மனநிலை நம் சமூகத்தில் வந்துவிட்டது. அவற்றில் எதிராளி என ஒருவர் கிடையாது. ஆகவே கதைகளைக் கட்டமைப்பது கடினம். கொலை என்றால் வசதி. கொலையானவரைப் பற்றியும் கொலைசெய்த வரைப் பற்றியும் விதவிதமாகப் பின்னணிகளைத் தேடித் துருவிச் சமூக விழுமியங்களுக்கு ஏற்ற வகையில் முரண்களைக் கட்டமைக்கலாம்.
ஒவ்வொரு மாணவரின் தற் கொலைக்குப் பின்னும் நிச்சயம் ஒவ்வோர் ஆசிரியர் இருப்பார். ஆனால் ஆசிரியர் என்பவர் மாணவனின் மீது தமது சகல அதிகாரங்களையும் பிரயோகிக்க உரிமை படைத்தவர் என்னும் கருத்து இங்கு வலுவாக நிலவுகிறது. ‘கண்ணையும் காதையும் உட்டுட்டு எங்க வேண்ணாலும் அடிங்க’ என்று சொல்லும் பெற்றோர் பலர். ‘அடியாத மாடு படியாது’, ‘அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்’ என்னும் பள்ளிப் பழமொழிகள் நம்மிடம் உண்டு. ஆசிரியருக்கு எத்தனையோ சலுகைகளை நம் சமூகம் வழங்கியிருக்கிறது. மாணவரின் சாவுக்கு ஆசிரியர் காரணமானாலும் ஆசிரியர்மீது குற்றம் சுமத்த நம் சமூக விழுமியங்கள் இடம் தருவதில்லை. ஆனால் மாணவனுக்கு எந்தச் சலுகையும் இல்லை, உரிமையும் கிடையாது. அடிபணிவது மாணவர் கடமை. வழக்கமாக உள்ளூர்ச் செய்தியாக முடிந்துவிடக்கூடியவை கொலைகள். ஆசிரியர் - மாணவர் என விழுமியம் சார்ந்த பொதுக்கருத்தியலை ஒட்டி முரண்களைக் கட்டமைக்க ஏதுவாக இருப்பதுதான் இந்தச் சென்னைக் கொலை பரவலாகக் கவனம் பெறக் காரணம்.
ஆசிரியர்கள் கறுப்புக் கொடி அணிந்து துக்கம் கடைபிடிப்பது, மாணவர்களின் வன்முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது, தங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கச் சொல்லிக் கோரிக்கை வைப்பது எல்லாம் சரிதான். அதிகாரம்சார்ந்த தங்கள் அணுகுமுறையைப் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தம் குழந்தைகளின் மீது எத்தகைய கரிசனம் காட்டுவார்களோ அதையே பிறர் பிள்ளைகள்மீதும் காட்டும் வகையில் அணுகுமுறை அமைய வேண்டும். அதை நோக்கிய விவாதம் தான் இன்றைய தேவை. முடிவில் இன்றைய கல்விமுறைதான் காரணம் எனக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளக் கூடாது.
கல்விமுறையை அரசு உடனடியாக மாற்றப்போவதில்லை. நன்னெறிகளைப் போதியுங்கள் எனச் சுற்றறிக்கை அனுப்பிவிட்டு வேறுவிஷயத்தில் கவனம் செலுத்தப்போய்விடும். நன்னெறிகளைப் போதிக்க வேண்டும் என்பதற்குப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவிக்கவும் செய்வர். ஆகவே இந்தக் கல்விமுறைக்குள்ளேயே ஆசிரியர்களின் அணுகு முறைகளை எப்படியெல்லாம் மாற்றலாம், அதற்குப் பள்ளி நிர்வாகங்களை எவ்வாறெல்லாம் நிர்ப்பந்திக்கலாம் எனச் சிந்திப்பது தற்கொலைகளையும் கொலைகளையும் தவிர்க்கப் பெருமளவு உதவும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

FM

FM





Popular Post

Powered by Blogger.

- Copyright © நிழலின் தடம் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -