கவிஞர் பசீர் சேகு தாவூத் அவர்களுக்கு நன்றிகள்


Friday, September 12, 2014

அதீதத்தின் ருசி


புகார்கள்
ஒன்றுமில்லை

எல்லாமே
சிறிதளவு அளிக்கப்பட்டிருக்கின்றன

கொஞ்சம் விளையாட்டு
கொஞ்சம் அரவரணைப்பு
கொஞ்சம் படிப்பு
கொஞ்சம் ஆரோக்கியம்
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் பணம்
கொஞ்சம் புகழ்
கொஞ்சம் காதல்கள்
கொஞ்சம் பயணம்
கொஞ்சம் புணர்ச்சிகள்
கொஞ்சம் வாதைகள்
கொஞ்சம் திறமைகள்
கொஞ்சம் அவமதிப்புகள்
கொஞ்சம் நண்பர்கள்
கொஞ்சம் குழைந்தைமை
கொஞ்சம் கேளிக்கைகள்
கொஞ்சம் புறக்கணிப்புகள்
கொஞ்சம் கருணைகள்

கடவுள்
என் முறை வரும்போது மட்டும்
கொஞ்சமாகவே தன் கைகளைத் திறக்கிறார்

என்னை முத்தமிடும்போது மட்டும்
பாதியே அணைத்துக்கொள்கிறார் 

எனக்குத் தேவைப்படுவதும்
அவ்வளவே
என்றபோதும்
எப்போதாவது
ஏதேனும் ஒன்று
நிறைய கிடைத்தால்
நல்லதுதான்

அதீதத்தை எப்படி
எதி்ர்கொள்வது என்று
சோதிப்பதற்காக

அதன் ரத்த ருசியை
ஒரு கணம் அறிவதற்காக

#மனுஷய புத்திரனின் அதீதத்தின் ருசியில் இருந்து

நேர்காணல் - காலச்சுவடு


“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான்
சந்திப்பு: தேவிபாரதி

 எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மரபான இலக்கியத்திலும் இலக்கணத்திலும் புலமைகொண்ட அவர் நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றி எழுதியும் விவாதித்தும் வருகிறார். தமிழில் கால்கொண்ட அமைப்பியல், பின்அமைப்பியல் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. தமிழ்மொழியோடு ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளையும் பயின்று தனது விமர்சனச் செயற்பாட்டை அமைத்துக்கொண்டவர். ஆங்கிலத்திலிருந்து பாலஸ்தீனக் கவிதைகள் உள்ளிட்டவற்றை மொழிபெயர்த்த இவரின் கவிதைகள், ஆங்கிலம், சிங்களம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர், இணையாசிரியர், பதிப்பாசிரியர், இணைப் பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் 25 நூல்களுக்குமேல் இவர் வெளியிட்டுள்ளார். ஈழத்தின் கடந்த தலைமுறையினரோடு படைப்புப் பணியைத் தொடங்கிய எம்.ஏ. நுஃமான் இளைய தலைமுறைப் படைப்பாளிகளோடும் உறவைப் பேணிவருபவர்.
தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
ஈழ இலக்கியத்துக்குத் தனி அடையாளம் உண்டா?

முதலில் ஈழம் என்னும் சொல்லின் பொருளைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். இன்று தமிழ்நாட்டிலும் தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட இலங்கைத் தமிழர் மத்தியிலும் ஈழம் என்பது தமிழர் தாயகம் எனக் கருதப்படும் வடக்கு-கிழக்குப் பகுதியையே குறிக்கின்றது. தீவிர அரசியல் அர்த்தத்துடன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பண்டைக் காலத்திலிருந்து ஈழம், இலங்கை ஆகிய இரு சொற்களும் ஒரு பொருட்சொற்களாகவே வழங்கி வந்துள்ளன. அவ்வகையில் முழு இலங்கையையும் குறிக்கும் சொல்லாகவே நான் ஈழம் என்பதை இங்கே பயன்படுத்துகிறேன். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கு அதிகமானோர் வடக்கு - கிழக்குக்கு வெளியே வாழ்கிறார்கள் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும். அத்தோடு ஈழத் தமிழர் என்பது இலங்கையில் வாழும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்காது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இனி விசயத்துக்கு வருவோம். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழக இலக்கியத்துக்கும் ஈழத் தமிழ் இலக்கியத்துக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்ததாகக் கூற முடியாது. ஆனால் கலாச்சாரம் சார்ந்த சிற்சில வேறுபாடுகளைக் காண முடியும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனியத்திற்கெதிராக இலங்கையில் அடையாள அரசியல் ஒன்று உருவாயிற்று. பிரித்தானிய அரசின் ஆதரவு பெற்ற கிறிஸ்தவத்திற்கு எதிராக ஆறுமுக நாவலர் இந்து அல்லது சைவ அடையாளம் பற்றியும் சித்தி லெப்பை இஸ்லாமிய அடையாளம் பற்றியும் அநகாரிக தர்மபால போன்றோர் பௌத்த அடையாளம் பற்றியும் பேசத் தொடங்கினார்கள். இவற்றைச் சமய மறுமலர்ச்சி இயக்கங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இந்தக் காலகட்டத்தில் இந்து அல்லது சைவ வேளாள, இஸ்லாமிய, சிங்கள அடையாளங்கள் இலங்கையில் வலுப்பெற்றுவிட்டன. அரசியல் நலன் சார்ந்து உருவான இந்த அடையாளங்களும் அவற்றின் பிரச்சினைகளும் மெல்ல மெல்ல இலக்கியத்திலும் இடம்பெறத் தொடங்கின. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகுதான் அது கூர்மை அடைந்தது.


காலனியக் கிறிஸ்துவத்துக்கு எதிராக உருவான இந்த அடையாளங்களுக்கு இடையில் முரண்பாடு இருந்ததா?

ஆம். அடையாள அரசியல் ஓர் எதிர்வினைக் கருத்துநிலைதான். ஏதாவது ஒன்றுக்கு எதிராகத்தான் அது கட்டமைக்கப்படுகிறது. தன்னைப் பிறவற்றிடமிருந்து அது வேறுபடுத்துகிறது. பிற அடையாளங்களைவிடத் தன்னை மேன்மையாகக் கருதிக்கொள்கிறது. அவ்வகையில் ஒவ்வொரு அடையாளமும் பிற அடையாளங்களுக்கு எதிரானதுதான்.
பௌத்த சிங்கள அடையாளம் பிற அடையாளங்களை வெளி ஒதுக்குவது. சைவத் தமிழ் அடையாளமும் அப்படியே. சைவத் தமிழ் அடையாளம், பௌத்த அடையாளம் ஆகியவற்றுக்கு எதிர்வினையாகத்தான் இஸ்லாமிய அடையாளம் இலங்கையில் உருவாயிற்று. இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை அப்போதைய பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியபோது இலங்கையில் அந்தஸ்துமிக்க தலைவராக விளங்கிய பொன்னம்பலம் இராமநாதன் என்பவர்தான் இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருந்தார். அக்காலகட்டத்தில் வளர்ந்துவந்த இஸ்லா மிய நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கெனத் தனியான பிரதிநிதித்துவம் வேண்டுமென்று விரும்பினார்கள். அரசாங்கத்திடம் அக்கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆனால் அக்கட்டத்தில் இராமநாதன் அதற்கு எதிராகப் பேசினார். இஸ்லாமியர்கள் தனி இனக் குழுவினர் அல்ல. சமயத்தால் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் தமிழர்கள்தாம் என்று அவர் வாதிட்டார். அது தொடர்பாக ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டார். முஸ்லிம்கள் தங்களை அராபியரின் வம்சாவளியினர் எனச் சொல்வதை அவர் மறுத்தார். இக்கருத்தை இஸ்லாமிய உயர்குழாத்தினர் தீவிரமாக எதிர்த்தனர். அவர்கள் தாங்கள் அராபிய வழித்தோன்றல்கள் என்றும் தங்களுடையது தூய அரபு ரத்தம் என்றும் வாதிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்ததால் சில கலாசார ஒற்றுமைகள் இருக்கலாம், ஆனால் தங்களுக்கும் தமிழர்களுக்கும் இனரீதியாக எந்த உறவும் இல்லை என்றனர். வர்த்தகத் தேவைகளுக்காகத் தாங்கள் கடன்வாங்கிய மொழிதான் தாங்கள் பேசும் தமிழ் என்றனர். இத்தகைய கருத்துகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வலுவாகப் பேசப்பட்டன. இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர் மத அடையாளத்தை முதன்மைப்படுத்தித் தாங்கள் தமிழர் அல்ல தனியான இனக் குழுவினர் என்பதை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே உறுதிப்படுத்திக்கொண்டனர். போத்துக்கேயர் காலத்திலிருந்து தம்மீது திணிக்கப்பட்ட விஷீஷீக்ஷீs என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டனர். தமிழில் தங்களைச் சோனகர் என அழைத்தனர். சில அரசியல் காரணங்களுக்காகத் தவிர இலங்கைத் தமிழர்களும் இங்குள்ள முஸ்லிம்களைத் தமிழர் என்று கருதுவதில்லை. பிரித்தானியர் காலத்திலிருந்து அரச ஆவணங்களிலும் முஸ்லிம்கள் தனி இனக் குழுவினராகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். சிங்கள பௌத்த அடையாளத்துக்கு எதிர்வினையாகவும் முஸ்லிம் அடையாளம் இலங்கையில் வலுப்பெற்றது. தீவிர சிங்கள பௌத்த தேசியவாதிகள் வர்த்தகப் போட்டி காரணமாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக நவீன இலங்கையின் முதலாவது மிகப் பெரிய இனக் கலவரம் - சிங்கள ஜ் முஸ்லிம் கலவரம் - 1915இல் வெடித்தது. இதில் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பிரித்தானிய அரசு ராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி அக்கலவரத்தை அடக்கியது. அது தொடர்பாக அன்றைய தமிழ்த் தலைமை சிங்கள தேசியவாதிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டமையும் இந்த இனத்துவ அடையாள இடைவெளியை ஆழமாக்கவே உதவியது.
காரணம் எதுவாயினும், நவீன இலங்கையில் இலங்கையர் என்னும் அடையாளத்துக்குப் பதிலாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற அடையாளங்களே வலுப்பெற்றன. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பினும் தங்களைத் தமிழர் என்று அடையாளப்படுத்துவதில்லை என்பது முக்கியமான அம்சம். தமிழ்நாட்டில் நிலைமை அப்படியல்ல. இங்கு இஸ்லாமியர் ஒருவர் தன்னைத் தமிழர் என்றோ இஸ்லாமியத் தமிழர் என்றோ தமிழ் முஸ்லிம் என்றோ அழைப்பதை ஏற்றுக்கொள்வார். ஆனால் இலங்கையில் அப்படியல்ல.


அப்படியானால் இலங்கையில் அது வெறும் சமய அடையாளம் மட்டுமல்ல?


சமய அடையாளம் அல்ல. அது இனத்துவ அடையாளமாகத்தான் இருக்கிறது. மதம் இங்கு இன அடையாளத்தின் குறியீடாக இருக்கிறது. இது முஸ்லிம்களைப் பொறுத்தவரை மட்டும்தான். சிங்களம் பேசும் கிறிஸ்தவர் தங்களைச் சிங்களவர் என்று அடையாளப்படுத்திக்கொள்வதுபோல் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் தங்களைத் தமிழர்கள் என அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களைத் தமிழர் என அடையாளப்படுத்துவதில்லை. இந்த அடையாள அரசியலுக்கு ஒரு நூற்றாண்டுக்கு அதிகமான வரலாறு உண்டு. அது இலக்கியத்திலும் பிரதிபலிக்கிறது.
ஆக ஈழத் தமிழர்கள் என்று பேசும்போது அது ஒரு தனி அலகு அல்ல என்பதை நாம் மனம்கொள்ள வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அடையாள அரசியலில் இன்னொரு மாற்றம் வருகிறது. இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காகப் பிரித்தானியர் தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் காலப்போக்கில் பத்து லட்சத்திற்கு அதிகமாகப் பெருகி தனி இனக் குழுவாக உருவாகிறார்கள். அவர்கள் தொழிற்சங்கங்களால் வர்க்க அடிப்படையில் ஒன்று திரட்டப்பட்டார்கள். அவர்களுக்கு வர்க்க அடையாளமும் இனத்துவ அடையாளமும் படிப்படியாக உருவாயின. அவர்கள்தான் மலையகத் தமிழர்கள் என்று இப்போது அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் பெரிய ஒட்டுறவு இல்லை. அவர்களுடைய சமூக, அரசியல், பொருளாதார நலன்கள் இவர்களுடையதிலிருந்து வேறுபட்டவை. மலையகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்மீது - குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்மீது - கொஞ்சம் எதிர்ப்புணர்வோடுதான் இருந்தார்கள். ஏனென்றால், மலையகத்தில் கிளார்க்குகளாகவோ ஆசிரியர்களாகவோ டாக்டர்களாகவோ நிருவாகப் பதவிகளில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்களே. மலையகத் தமிழர்கள் இவர்களைத் தங்கள்மீது ஆதிக்கம் செலுத்த வந்தவர்களாகவே கருதினார்கள். மலையகத் தமிழர்களின் பிரச்சினை முற்றிலும் வேறானது. இலங்கையில் மிக மோசமான ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் அவர்கள்தான். அவர்கள் மிக மோசமாகச் சுரண்டப்பட்டவர்கள். அதனாலேயே தொழிற்சங்கங்கள் அவர்களை ஒன்று திரட்டுவது இலகுவாக இருந்தது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. 1920-30களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் முக்கியமான, வலிமையான சக்தியாக உருவாகியிருந்தனர். இதில் தொழிற்சங்கவாதியான கோ. நடேசையர் போன்றோரின் பங்கு முக்கியமானது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர் இலங்கை அரசாங்க சபையில் உறுப்பினராகவும் இருந்தார். அவருடைய மனைவி மீனாட்சியம்மாளும் செயற்பாட்டாளராக மலையகத்தில் பணியாற்றியிருக்கிறார். சுதந்திரத்துக்குப் பின்னர் மலையகத் தமிழர் தமக்கென்று தனித்துவமான அடையாளமுள்ள இனக்குழுவாக உருவாகிவிட்டனர்.


ஈழத் தமிழர் என்பது யாரைக் குறிக்கும்?

ஈழத் தமிழர் என்பது அங்கே நீண்டகால வரலாறு உடைய வடக்கு - கிழக்குத் தமிழர்களைத்தான் குறிக்கும். இந்தியத் தமிழர் அல்லது மலையகத் தமிழர் என்பது மத்திய மலைநாட்டில் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தியத் தமிழர்களின் வம்சாவளியினரைக் குறிக்கும். இவர்களுக்கு சுமார் இருநூறு வருட வரலாறு உண்டு. தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு ஆயிரம் ஆண்டு வரலாறு இருக்கிறது. ஆக இன்று இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகப் பேசும் சமூகத்தினர் மூன்று தனித்துவமான இனக்குழுமங்களாக உள்ளனர். இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் என இவர்கள் இனங்காணப்படுகின்றனர். இலங்கை அரச ஆவணங்களில், குடிசனக் கணக்கெடுப்பில் இந்தப் பிரிவுகள் இடம்பெற்றுவிட்டன. இலங்கையில் தமிழர் என்ற பதம் இம்முப்பிரிவினரையும் உள்ளடக்காது. இலங்கை அரசியலில் தந்தை செல்வா (எஸ். ஜே. வி. செல்வநாயகம்) காலத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் என்னும் பதம் இம்முப்பிரிவினரையும் உள்ளடக்கப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது மொழியியல் கருத்துத்தான். அரசியல் கருத்து அல்ல. இவர்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் நலன்கள் வேறுபட்டவை. சில வகையில் முரண்படுபவை. தமிழகத்தினருக்கு இவ்வேறுபாடு புரிவதில்லை. அதைப் புரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை. ஈழம், ஈழத் தமிழர் என்பதை எவ்வித அரசியல் புரிதலும் இல்லாமல் அவர்கள் பேசுகின்றனர்.

இந்த முரண் தொடக்கத்திலிருந்தே இருக்கிறதா?

இல்லை. நான் முன்னர் குறிப்பிட்டதுபோல 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்துதான் இலங்கையில் இன முரண்பாடும் இன அடையாளங்களும் வளர்ச்சி பெற்றன.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்கள் தங்கள் உரிமைக்காக முன்னெடுத்த போராட்டம் என்பது மலையகத் தமிழர்களையும் இஸ்லாமியத் தமிழர்களையும் விலக்கி வைத்துதான் நடந்ததா?

ஒருவகையில் அப்படித்தான். நான் முன்பு சொன்னதுபோல இவர்களுடைய அரசியல் நலன்கள் வேறாக இருந்தன. எனினும் இவர்கள் எல்லாரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் பேசும் மக்கள் என்னும் சொல்லாடலைத் தந்தை செல்வா முன்வைத்தார். ஆனால் அது அரசியல்ரீதியில் வலுவானதாக இருக்கவில்லை. தமிழர் உரிமைப் போராட்டம் என்பதே மொழி உரிமைப் போராட்டமாகத்தான் தொடங்கியது. இது ஆழமாகப் பார்க்கப்பட வேண்டிய அரசியல். ஆங்கிலத்தின் இடத்தில் சுதேச மொழிகள் - அதாவது சிங்களமும் தமிழும் - ஆட்சிமொழிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1930களின் தொடக்கத்திலேயே அரசாங்க சபையில் முன்வைக்கப்பட்டது. எனினும் சிங்களம் மட்டும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையை 1943இல் ஜே. ஆர் ஜெயவர்த்தனா கொண்டுவந்தார். ஆயினும் தமிழர் முஸ்லிம்கள், சிங்களவர் என்ற பேதமின்றிப் பலரும் அதை எதிர்த்து இருமொழிக் கொள்கையை ஆதரித்தனர். பின்னர் இருமொழிக் கொள்கை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் சுதந்திர இலங்கையில் நிலைமை தலைகீழாக மாறியது. நாடாளுமன்ற சந்தர்ப்பவாதம் வரலாற்றோடு விளையாடியது. இருமொழிக் கொள்கையை ஆதரித்த பண்டாரநாயக்க 24 மணிநேரத்தில் சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்னும் சட்டத்தைக் கொண்டுவருவேன் என்னும் வாக்குறுதியோடு 1956இல் ஆட்சியைக் கைப்பற்றினார். சிங்களம் ஆட்சிமொழியானால் தங்கள் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீண்டுவிடலாம் எனச் சிங்கள மக்கள் நம்பினர். 1956இல் சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக்கப்பட்டது. இன முரண்பாடு கூர்மையடைந்தது. சிங்கள, தமிழ்த் தேசியவாதங்கள் வேரூன்றி வளரத் தொடங்கின.

சிங்களம் ஆட்சிமொழியாக்கப்பட்டதற்கு எதிராகத்தான் தமிழ்த் தேசியவாதம் முன்னெடுக்கப்பட்டதா?

ஆம். ஆரம்பத்தில் அது மொழித் தேசியவாதமாகத் தான் மேற்கிளம்பியது. 1950களில் தமிழ் மக்கள் மத்தியில் மொழியுணர்வு கொழுந்துவிட்டெரிந்தது. தமிழரசுக் கட்சியும் அவர்களது சுதந்திரன் பத்திரிகையும் அதற்கு நெய்யூற்றி வளர்த்தன. தமிழ்க் கவிஞர்கள் ஆர்ப்பாட்டமான போர்ப் பாடல்களைப் பாடினர். தமிழ் உணர்ச்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமிழர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி தனிப்பெரும் அரசியல் சக்தியாக மேற்கிளம்பியது. மொழி உரிமைப் போராட்டத்தை வடகிழக்கு முஸ்லிம்களும் ஆதரித்தனர். ஆனால் தொன்னிலங்கை முஸ்லிம்கள் அதைத் தங்களின் பிரச்சினையாகக் கருதி அதற்கு ஆதரவு அளிக்கவில்லை. அவர்கள் சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசத்தில் வாழ்வதும் சிங்களமும் தமிழும் பேசக்கூடியவர்களாக இருப்பதும் அதற்குக் காரணம் எனலாம்.


இந்த மொழி வேறுபாட்டைச் சிங்கள ஆட்சியாளர்கள் முறையாகக் கையாளாததற்கு அவர்கள் சிங்கள ஆதரவாளர்களாக மட்டும் இருந்ததுதான் காரணமா?


அப்படித்தான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் இருந்தது. தமிழ்நாட்டில் பார்ப்பனர் சிறுபான்மையினராக இருந்தாலும் பிரித்தானிய ஆட்சியில் ஆங்கிலக் கல்வி காரணமாகப் பொருளாதாரரீதியிலும் கல்வியிலும் அவர்களே மேலாதிக்கம் பெற்றிருந்தனர். இதற்கு எதிராகவே 1930களிலிருந்து இடைப்பட்ட சாதியினர் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதை ஒத்த நிலைமை இலங்கையிலும் காணப்பட்டது. பிரித்தானிய ஆட்சியில் ஆங்கிலக் கல்வி வாய்ப்பு அதிகம் பெற்ற யாழ்ப்பாண உயர்சாதி நடுத்தர வர்க்கத்தினர் நிருவாகத் துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். சிங்கள நடுத்தர வர்க்கத்தினர் இதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கியதன் விளைவுதான் சிங்களம் மட்டும் ஆட்சிமொழிச் சட்டம். அதன் பிறிதொரு விளைவுதான் இன ஒதுக்கல். இன்று அரச நிருவாக யந்திரம் முழுமையாகச் சிங்களமயமாக்கப்பட்டுவிட்டது. இன்று மொத்த அரச ஊழியர்களில் தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 8 விழுக்காடுதான் இடம்பெற்றுள்ளனர். இதில் பள்ளி ஆசிரியர்களும் உள்ளடக்கம். இந்தப் புறக்கணிப்பும் பாராபட்சமும்தான் யுத்தத்துக்கும் புலப்பெயர்வுக்கும் இட்டுச்சென்றன.


தமிழரசுக் கட்சி முன்னெடுத்த உரிமைப் போராட்டம் என்பது எதை வலியுறுத்தியது?

அவர்கள் முதலில் மொழி உரிமையைத்தான் வலியுறுத்தினார்கள். தங்கள் மொழிக்குச் சம உரிமை இல்லாத சமூகத்தினர் இரண்டாந்தரக் குடிமக்களாகிவிடுகின்றனர். அதனால் அவர்கள் அதை எதிர்த்தனர். அடுத்து அதிகாரப் பரவலாக்கலை - சமஷ்டி ஆட்சிமுறையைக் கோரினார்கள். தொடக்க காலத்தில் மொழி உரிமைக் கோரிக்கையைச் சில சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்தன. பிரபலமான இடதுசாரித் தலைவர்களுள் ஒருவரான கொல்வின் ஆர். டி. சில்வாவின் புகழ்பெற்ற கூற்று ஒன்று உண்டு. “One language two nations, two languages one nation” ஆனால் 1970களில் இந்த இடதுசாரிகளும் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்துக்கு இரையாகிச் சிங்களப் பேரினவாதத்துடன் சமரசப்பட்டுவிட்டனர்.

வர்க்கரீதியான ஒற்றுமை அங்கே உருவாகவில்லையா?

1960களில் வர்க்கரீதியான ஒற்றுமை ஓரளவு காணப்பட்டது. ஆனால் 70களில் இனவாதம் உக்கிரமடைந்த பிறகு அந்த ஒற்றுமை போய்விட்டது. இடதுசாரிக் கட்சிகளும் தமிழ் எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்ப வேண்டிய நிலைமை உருவாகிவிட்டது. தமிழரசுக் கட்சியின் தீவிர வலதுசாரி நிலைப்பாடும் இதற்கு ஒரு காரணம் எனலாம். ஆயினும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இதற்குள் வரவில்லை.

மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை இவர்கள் பேசவில்லையா?

பேசினார்கள்தான். ஆயினும் மலையகத் தமிழர்களின் அரசியல் பொருளாதார நலன்கள் இவர்களால் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. அவர்கள் பல்வேறு தொழிற்சங்க இயக்கங்களுள் வலுவாகப் பிணைக்கப் பட்டிருந்தனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்தான் அவர்களது பெரிய தொழிற்சங்கமாகவும் அரசியல் கட்சியாகவும் செயல்பட்டது. அதன் தலைவர் தொண்டமான் பலம் மிக்க அரசியல் தலைவராக விளங்கினார். சிங்கள ஆளும் கட்சிகளுடன் இணங்கிச் செயல்பட்டார். தமிழர் பிரச்சினையில் சில சமரசங் களுக்கும் முயன்றார். தமிழர் விடுதலைக் கூட்டணி யிலும் இணைந்தார். ஆயினும் அக்கூட்டு நீடிக்க வில்லை. தமிழ் ஈழக் கோரிக்கை மலையகத்தை உள்ளடக்கவில்லை. அதை உள்ளடக்குவதும் சாத்தியமல்ல. அது அவர்களுடைய கோரிக்கையும் அல்ல. இந்த நிலைப்பாடுதான் இஸ்லாமியர் மத்தியிலும் இருந்தது. ஆயினும் தமிழ் ஈழக் கோரிக்கையால் அவர்கள் இருசாராருமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள்.

மொழிப் பிரச்சினைதான் இந்த இனப் பாகுபாடுகளுக்குக் காரணமா?

மொழிப் பிரச்சினையுடன்தான் இன முரண்பாடு உக்கிரமடைந்தது. ஆரம்பத்திலேயே இது தீர்க்கப்பட்டிருந்தால் மற்ற பிரச்சினைகள் இந்த அளவுக்குத் தலையெடுத்திருக்கமாட்டா. பிரிவினைவாதம்வரை அது சென்றிருக்காது. ஆனால் சிங்கள ஆளும் வர்க்கம் அதற்குத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு அரசியல் தீர்க்கதரிசனம் இருக்கவில்லை. இன முரண்பாட்டை நாடாளுமன்ற ஆசனத்தைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாக அவர்கள் பயன்படுத்தினர். தமிழ்த் தேசியவாதிகளுக்கும் அதுவே வாய்ப்பாக அமைந்தது.

யாழ்ப்பாணத் தமிழர்களின் மேலாதிக்கத்திற்கெதிராகத் தான் சிங்களவர்கள் மத்தியில் தமிழ் எதிர்ப்புணர்வு உருவாகிறது என்கிறீர்கள். இதை யாழ்ப்பாணத் தமிழ் இயக்கங்கள் உணர்ந்திருந்தனவா?

அப்படிச் சொல்ல முடியாது. இந்த மேலாதிக்கம் என்பது திட்டமிட்டு வந்ததல்ல. இயல்பாக அவர்களின் ஆங்கிலக் கல்வி மூலமாக வந்ததுதான். ஆனால் தமிழர்கள் தங்கள் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக்கொண்டதாகச் சிங்களவர்கள் நினைத்தார்கள். சிங்கள மத்தியதர வர்க்கமும் அரசியல்வாதிகளும் அந்தக் கண்ணோட்டத்தைத்தான் கொண்டிருந்தனர். அந்தவகையில் எல்லாத் துறைகளிலும் சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதே சுதந்திரத்துக்குப் பிந்தைய சிங்கள ஆட்சியாளர்களின் செயல்பாடாக
இருந்தது.

நிலம் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறதா?

ஆம். சுதந்திரத்துக்குப் பின் நிலம் ஒரு பிரச்சினையாக வளர்ந்துவிட்டது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எல்லாருக்கும் இப்பிரச்சினை இருக்கிறது. நிலப்பற்றாக்குறை, குடிசனப் பெருக்கம், திட்டமிட்ட குடியேற்றம் என்பவற்றின் விளைவு இது. உதாரணத்துக்கு அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். தமிழர்களும் இஸ்லாமியரும்தான் இங்குப் பெரும்பான்மையினர். இவர்கள் சுமார் அறுபது சதவீதத்தினர். ஆனார் 30 சதவீதத்துக்குக் குறைவான நிலம்தான் இவர்களிடம் இருக்கிறது. இந்த நிலப் பற்றாக்குறை காரணமாகக் கடலுக்கு மிக அருகிலும் வாழ்விடங்கள் உருவாகியுள்ளன. கடற்கரையை அண்டிய குறுகிய நிலப்பகுதியிலேயே இவர்கள் வாழ்கின்றனர். இதனால் சுனாமியின்போது பெரிய உயிரிழப்புகள் இங்குதான் நிகழ்ந்தன. இலங்கையின் மொத்த உயிரிழப்பில் மூன்றில் ஒரு பகுதி, சுமார் பத்தாயிரம்பேர் இங்கு உயிரிழந்தனர். நிலப்பற்றாக்குறை காரணமாகத் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கும் பிறரின் நிலத்தைக் கைப்பற்றுவதற்கும் நடக்கும் முயற்சிகளில் இனங்களுக்கிடையிலான பிரச்சினை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

இந்த நிலப் பிரச்சினைத் தீர்வுக்கு அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது?

சிங்களவரின் நிலப்பிரச்சினையைத் தீர்ப்பதே அரசின் பிரதான குறிக்கோளாக இருந்துவருகிறது. 1950களிலிருந்தே சிங்களக் குடியேற்றங்களைத்தான் தொடர்ந்து செய்கின்றனர். அரசுக்குத் தேசிய நிலப்பங்கீட்டு, குடியேற்றக் கொள்கை என எதுவும் இல்லை. அப்படி ஏதும் இருந்தால் இது சிறுபான்மையினர் அடர்த்தியாக வசிக்கும் பிரதேசங்களில் நிலமற்ற சிங்களவர்களைக் குடியேற்றுவதும் அதன் மூலம் சிறுபான்மையினரின் அடர்த்தியைக் குறைப்பதும்தான் அக்கொள்கை எனக் கூறலாம். இத்திட்டத்தை அவர்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்திவருகிறார்கள். உதாரணமாகத் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்திருப்பதைக் காட்டலாம். வடக்கில் மட்டும்தான் இது குறைவாக இருந்தது. ஆனால் போருக்குப் பிந்தைய அரசின் நடவடிக்கைகள் அங்கும் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரிக்கும் சாத்தியத்தைக் காட்டுகின்றன.

இலங்கை ஜனநாயக நாடு. அதன் அரசியல் சாசனத்திற்குட்பட்டு இப்பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்ததில்லையா? ஆயுதப் போராட்டத்திற்கான தேவை எதனால் ஏற்பட்டது?

ஜனநாயகம் என்பது பொய்மைதான். இந்தியா உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்கிறீர்கள். அது எந்த அடிப்படையில்? இங்கு எல்லா மக்களும் சகல உரிமைகளும் பெற்று வாழ்கிறார்களா? தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டும்தான் ஜனநாயகமா? அப்படியென்றால் இலங்கையும் ஜனநாயக நாடுதான். பெரும்பான்மை ஜ் சிறுபான்மை முரண்பாடு எங்கும் இருக்கிறது. பெரும்பான்மையினர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது அவர்களுக்கு உகந்த முறையில்தான் செயல்படுகிறார்கள். பிரித்தானியர் ஆட்சியைக் கையளித்துச் சென்றபோது அவர்கள் உருவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினருக்கெனச் சில காப்புகள் இருந்தன. அப்படி இருந்தும் அந்த அரசியல் யாப்பின் கீழ்தான் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. சிங்களம் மட்டும் ஆட்சிமொழி ஆக்கப்பட்டது.
ஜனநாயக முறையில் தந்தை செல்வா போன்றவர்கள் போராடினார்கள். ஆனால் அது அரசால் ஒடுக்கப்பட்டது. 1956இல் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆட்சியாளர் வன்முறையைப் பயன்படுத்தி அடக்கினர். அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக வழியிலான எல்லாப் போராட்டங்களும் இவ்வாறுதான் தோல்வியில் முடிந்தன. இதன் விளைவாகத்தான் வேறு வழியில்லாத நிலையில் ஆயுதப் போராட்டம் உருவானதாக ஒரு கருத்து உண்டு. ஆனால் இது முழு உண்மையல்ல. அதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. அதில் முக்கியமானது யாழ்ப்பாண இளைஞர்களின் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது எனலாம். 1972இல் அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தரப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியது. அதுவரை பல்கலைக்கழக அனுமதியில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் யாழ்ப்பாண இளைஞர்கள் முன்னணியில் இருந்தனர். இத்தரப்படுத்தல் முறையால் கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மாணவர்கள் பெரிதும் நன்மை அடைந்தனர் எனினும் யாழ்ப்பாண மாணவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு என்பவற்றில் நம்பிக்கை இழந்த மாணவர்கள் வன்முறை அரசியலில் எளிதாக ஈர்க்கப்பட்டனர். யாழ்ப்பாண இளைஞர்களை வன்முறை அரசியலுக்கு ஆற்றுப்படுத்தியதில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதையும் நாம் மறுக்க முடியாது. அதன் பயனைப் பின்னர் அவர்களே அறுவடை செய்யவும் நேர்ந்தது.
அரசு என்பது வன்முறை நிறுவனம்தான். தனது அதிகாரத்துக்கு எதிரான சாத்வீகப் போராட்டங்களையே அது ஒரு எல்லைக்குமேல் அனுமதிக்காது. வன்முறைப் போராட்டத்தை அது மூர்க்கமான வன்முறையினாலேயே எதிர்கொள்கிறது. வன்முறை வன்முறையையே தூண்டுகிறது. இது நச்சுவட்டச் சுழல்தான். அரசுக்கு எதிரான இளைஞர்களின் ஒவ்வொரு தாக்குதலும் அரசின் மிகமோசமான எதிர்த்தாக்குதலை எதிர்கொண்டது. அரசின் ஒவ்வொரு தாக்குதலும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதையில் தள்ளியது இவ்விதமாகத்தான்.
இந்த இளைஞர்களின் எதிர்ப்பு இயக்கங்கள் அரசியல் கொள்கையோடு செயற்பட்டனவா?

தமிழ்த் தேசியம்தான் அவர்களுடைய கொள்கை எனலாம். தன் இனப் பற்றும் பிற இன வெறுப்பும் இனத் தேசியவாதத்தின் உள்ளார்ந்த அம்சங்கள். தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் எல்லாவற்றினதும் அடிப்படையான கருத்துநிலை இதுதான். இதற்கு மேலாக மார்க்சியக் கொள்கையில் ஆரம்பத்தில் சில இயக்கங்கள் ஆர்வம் காட்டின. இது சில தனிப்பட்டவர்களின் விருப்பார்வமாக இருந்ததே தவிர இயக்க உறுப்பினர்கள் எல்லாரும் இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்டதாகச் சொல்ல முடியாது. தனிநாடுதான் அவர்களது கனவாக இருந்தது. தனிநாடு கிடைத்தால் தாங்கள் சுயாதீனமாக முன்னேறலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.


இந்த எதிர்ப்பு இயக்கத்தினர் தங்களது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் மலையகத் தமிழர்களையும் இசுலாமியத் தமிழர்களையும் இணைத்துக்கொண்டார்களா?

தொடக்க காலத்தில் இவர்களுள் பலர் இந்த இயக்கங்களில் போராளிகளாக இணைந்திருந்தனர். ஆனால் அது பெரிய எண்ணிக்கையில் இல்லை என்று நினைக்கிறேன். தமிழ் பேசும் ஏனைய சிறுபான்மை இனங்களின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களை ஒன்றிணைத்து விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல விடுதலை இயக்கங்கள் தவறிவிட்டன. ராணுவவாதம் அவற்றுள் மேலோங்கி இருந்தது. இன சமத்துவக் கோட்பாட்டுக்குப் பதிலாக இன மேலாண்மை அவற்றின் அடிப்படைக் கருத்துநிலையாக இருந்தது. மலையகத் தமிழர், இஸ்லாமியர் ஆகியோரின் வேறுபட்ட அரசியல் பொருளாதார நலன்கள், அபிலாசைகள் பற்றிய புரிந்துணர்வு அவர்களுக்கு இருக்கவில்லை. அதனால் மலையகத் தமிழர்களும் வடக்கு - கிழக்கு முஸ்லிம்களும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துள் உள் வாங்கப்படவில்லை. குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகளால் சந்தேகமும் முரண்பாடுகளும் மோதல்களும் அதிகரித்தனவே தவிர ஒன்றிணைந்து போராடுவதற்கான வாய்ப்பே இருக்கவில்லை.
மலையகத் தமிழர்கள் பரந்த அர்த்தத்தில் தமிழர் என்ற அடையாளத்துக்குள் வருவார்கள். என்றாலும் தமிழ் ஈழம் என்னும் கோரிக்கையின் புவியியல் எல்லைக்கு அப்பால் மத்திய இலங்கையில் சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் அவர்கள். தமிழ் ஈழம் புவியியல்ரீதியில் அவர்களை உள்ளடக்காது. ஆனால் இலங்கை முஸ்லிம்கள் அப்படியல்ல. நான் ஏற்கனவே கூறியபடி அவர்கள் மொழியை அன்றி மதத்தையே தம் இனத்துவ அடையாளச் சின்னமாக ஏற்றுக்கொண்டவர்கள். அதனால் அவர்கள் தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. அதேவேளை மொத்த இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினரான வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் ஈழ எல்லைக்குள் வாழ்பவர்கள். அவ்வகையில் தமிழ் ஈழக் கோரிக்கை இலங்கை முஸ்லிம்களைப் புவியில்ரீதியில் கூறுபடுத்தி இரண்டு தேசங்களில் இரண்டு பெரும்பான்மை மேலாண்மை ஆட்சியின்கீழ்ப் பலமற்ற சிறுபான்மையினராக மாற்றிவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். 1985க்குப் பின்னர் வெளிப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் அவர்களின் அச்சத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் ஆழப்படுத்தின. கப்பம் கேட்டல், வாகனங்களைப் பறித்தல், ஆட்கடத்தல், கொலைசெய்தல் என்பன இஸ்லாமியர் மத்தியில் எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தின. கிழக்கில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிளவுபடுத்தி ஈழப்போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்த அரசாங்கமும் ஆயுதப்படைகளும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தின. 1990ஆம் ஆண்டு இந்த முரண்பாட்டின் உச்சம் எனலாம். பல நூற்றாண்டுகளாக வடக்கையே தம் தாயகமாகக் கொண்டிருந்த எழுபதினாயிரத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் அனை வரும் உடுத்த உடையுடன் புலிகளால் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இதே காலப்பகுதியில் கிழக்கிலங்கையில் மட்டும் ஆயிரத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்விஷயத்தில் பிற இயக்கங்களின் பார்வை என்ன?

1990களில் புலிகள்தான் மேலாதிக்கம் உடைய இயக்கத்தினராகச் செயல்பட்டார்கள். 1985க்குப் பின் எல்லா இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட்டன. 1987இல் இந்திய அமைதிப்படை வந்தபின்னர் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பல அமைதிப்படையுடன் இணைந்து செயல்பட்டன. அமைதிப்படை போன பின்னர் அவற்றுள் சில அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டன. சில புலிகளுடன் ஐக்கியப்பட்டன. ஆனால் பெரும்பாலும் எல்லா இயக்கங்களுமே முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துநிலை உடையவைதான். ஈபிஆர்எல்எஃப்தான் இதை முதலில் நடைமுறையில் காட்டியது. பின்னர் புலிகள் இதைப் பெரிய அளவில் முன்னெடுத்தனர்.

இந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன?

அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டது, போராளிகளைக் காட்டிக்கொடுத்தது, ராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்க்காவல் படை தமிழர்களைக் கொன்றது என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன. அப்படியாயின் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டித்திருக்க வேண்டும். வடக்கிலிருந்து முஸ்லிம்களை முற்றாக வெளியேற்றியதையும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையும் எப்படி நியாயப்படுத்துவது? இலங்கை ராணுவம் தமிழர்களைக் கொன்றதை இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு எனக் கூறலாம் என்றால் புலிகளின் செயல்பாட்டையும் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை. இன மேலாண்மையும் இன முரண்பாடும்தான் இப்படுகொலைகளுக்குக் காரணங்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை பொன்னம்பலம் இராமநாதனின் நிலைப்பாட்டைத்தான் புலிகளும் கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் மதத்தால் முஸ்லிம்களாய் இருந்தாலும் இனத்தால் தமிழர்கள்தான். ஆனால் இதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய மேலாண்மைக்கு எதிராக இக்காலப்பகுதியில் முஸ்லிம் தேசியம் தீவிரத்துடன் எழுச்சியடைந்தது. இதன் விளைவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கென்று தனி அரசியல் இயக்கமாக உருவாகியது. தமக்கு எதிராக எந்தச் சக்தியும் வளர்வதை விரும்பாத புலிகள் முஸ்லிம்களின் இருப்பை வன்முறைமூலம் துடைத்தெறிய முயன்றதன் வெளிப்பாடாகவே இந்த வெளியேற்றத்தையும் படுகொலைகளையும் கருத வேண்டும்.

ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கிடையில் ஏன் இவ்வளவு பிளவுகள் இருந்தன?

இது இயல்பானதுதான். எல்லா விடுதலைப் போராட்ட இயக்கங்களிலும் நாம் இதைப் பார்க்கலாம். தலைமறைவு, வன்முறை இயக்கங்கள் எல்லாம் சிறு சிறு குழுக்களாகப் பிளவுண்டு இயங்குவதைப் பல்வேறு நாடுகளிலும் நாம் காண முடிகிறது. இந்தப் பிளவுகள் கொள்கை வேறுபாட்டின் அடிப்படையிலானவை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சில தனிப்பட்ட காரணங்கள் - ஆளுமைப் பிரச்சினைகள், அதிகாரப் போட்டி, அச்சம் என்பனவும் - இதற்குப் பின்னால் உள்ளன. தன் சொந்த அரசியல் காரணங்களுக்காக இந்தியாவும் இயக்கங்களுக்கிடையில் இருந்த ஒற்றுமையைச் சிதறடித்தது. அதைவிட முக்கியமானது அரசியல் வன்முறையும் அரசியல் சகிப்புத்தன்மையும் சகவாழ்வு நடத்த முடியாது என்பது.

தனி ஈழம் என்னும் கருத்தாக்கம் எப்படி உருவானது?

16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதலில் வந்தபோது வட இலங்கை தமிழ் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. பிரித்த தானியருக்கு முந்தைய இந்தியாபோல் இலங்கையும் தனி ஒரு தேசமாக இருக்கவில்லை. தென்னிலங்கை மூன்று சிங்கள ராச்சியங்களாக இருந்தது. பிரித்தானியர் தான் ஒரே இலங்கையை உருவாக்கினர். அதேவேளை இனப் பிளவுகளுக்கும் அவர்களே வித்திட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரே நாடு என்னும் கொள்கை பொதுவாக எல்லாருக்கும் ஏற்புடையதாகவே இருந்தது. ஆனால் சிங்கள இன மேலாண்மை தமிழர்களைத் தனிமைப்படுத்திய பின்னணியில்தான் ஆண்ட பரம்பரை என்ற கருத்தும் தமிழ் ஈழக் கோரிக்கையும் உருவாயின.

மலையகத் தமிழர்கள் இந்த ஆயுதப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டார்களா?

மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏற்கனவே அவர்கள் மிகவும் பலவீனமான சமூகமாக இருந்தார்கள். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இன முரண்பாடு கூர்மையடைந்து தமிழர்களுக்கெதிரான இன வன்முறைகள் வெடித்தபோதெல்லாம் (1977, 1981, 1983) தமிழர் என்ற அடையாளத்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் இப்போது குடியுரிமை அளிக்கப்பட்டுவிட்டதா?

பெரும்பான்மையானவர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அவர்களின் தொகை இன்று சுமார் பத்து லட்சம் இருக்கும். அவர்களில் சிலர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள், அரசாங்கப் பணிகளில் இருக்கிறார்கள், வேறு பல தொழில்களும் செய்கிறார்கள். எனினும் மிகப் பெரும்பாலோர் இன்னும் தோட்டங்களிலேயே வாழ்கிறார்கள். இளைஞர்கள் தோட்டங்களைவிட்டு வெளியேறும் போக்கும் காணப்படுகிறது. இன்று இலங்கையில் சமூக, பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கிய சிறுபான்மைச் சமூகம் என்று இவர்களையே சொல்ல வேண்டும்.

இந்த மூன்று இனக் குழுக்களுமே தமிழர் என்னும் அடிப்படையில் பாதிப்புக்குள்ளாகும்போது அவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புதானே உள்ளது?

அப்படிச் சொல்ல முடியாது. மூன்றுமே தமிழ் பேசும் இனங்களாக இருந்தாலும், நான் ஏற்கனவே சொன்னதுபோல இவர்களது அரசியல் பொருளாதார நலன்கள் வெவ்வேறாக இருக்கும்போது இது சாத்தியமல்ல. ஆனால் இவர்கள் எல்லாரும் சிறுபான்மையினர் என்ற வகையில் ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தங்கள் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராட முடியும். ஆனால் அத்தகைய பொது நோக்குடைய அரசியல் தலைமைகள் இங்கு உருவாகவில்லை.

ஈழப் போராட்டம் என்பதை இப்படித்தான் பார்க்க வேண்டுமா?

ஆம். இங்கே தமிழ்நாட்டில் இருப்பவர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் ஒரு ஒற்றைப் பார்வைதான் இருக்கிறது. ஆனால் இலங்கையில் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. தனி ஈழம் அல்லது தமிழ் ஈழம் என்பது தமிழ் பேசும் எல்லா மக்களுக்குமானதல்ல. அது அடிப்படையில் யாழ்ப்பாண மையச் சிந்தனையின் வெளிப்பாடுதான்.

வரலாற்றிலும் எல்லாளன், துட்டகாமினி இருவருக்குமான மோதல்கள் இருந்தன. இன்றைக்கும் இந்த இன மோதல் தொடர்ந்துகொண்டிருக்கிறதல்லவா?

இன மோதல் வரலாற்றுக் காலம் தொட்டு இருப்பதாகக் கூறுவது தவறு. எல்லாளனுக்கும் துட்டகாமினிக்கும் இடையிலான மோதல் இன அடிப்படையிலான மோதல் என்று சொல்ல முடியாது. அது அரச பரம்பரை, ஆட்சியதிகாரம் தொடர்பானது. இன்றைய இன முரண்பாட்டுடன் அதைத் தொடர்புபடுத்தக் கூடாது. இன்று நாம் பேசும் இனத்துவம், இன அடையாளம், இன முரண்பாடு என்னும் கருத்துகள் நம் காலத்துக்கே உரியவை. பல வரலாற்றாசிரியர்கள் பலர் இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.


தமிழ் பேசும் மக்களிடையே உள்ள இந்த அடையாள வேறுபாடு இலக்கியத்தில் என்ன தாக்கங்களை ஏற்படுத்தியது?


சமகால இலங்கைத் தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இந்த அடையாள அரசியலின் வெளிப்பாடாகவே உள்ளது எனலாம்.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே யாழ்ப்பாணத் தமிழ் இலக்கிய வெளிப்பாடுகளில் கிறிஸ்தவ, சைவ அடையாள மரபுகள் வேரூன்றிய போதிலும் அவற்றுக்கிடையே முரண்பாடுகள் நிலவியதாகத் தெரியவில்லை. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கைத் தமிழர்களின் - குறிப்பாக யாழ்ப்பாணச் சைவ வேளாளர்களின் - கருத்துநிலை வெளிப்பாடாக ஆறுமுக நாவலரின் செயற்பாடுகளை நாம் கருதலாம். சைவத் தமிழ் அடையாளத்தையே ஆறுமுக நாவலர் வலுவாக முன்வைத்தார். அது கிறிஸ்தவத்துக்கு எதிர்வினையாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணச் சிந்தனையின் மையமாக இதுவே விளங்கியது. ம. வே. திருஞானசம்பந்தம் பிள்ளையின் கோபால நேசரத்தினம் என்னும் நாவல் சைவ வேளாள, கிறிஸ்தவ முரண்பாட்டின் வெளிப்பாடாகவே அமைகிறது.
1950கள்வரை யாழ்ப்பாணத் தமிழர்களின் இலக்கிய வெளிப்பாடு பெரிதும் தமிழ்ப் பண்பாட்டில் மையங்கொண்டிருந்தது. 1950க்குப் பின் மொழி உரிமைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு மொழித் தேசியவாதம் மேற்கிளம்பியபோது மொழி உரிமைக்கான வீரார்ந்த அரசியல் கவிதைகள் தோன்றின. 1980க்குப் பின் இன முரண்பாடு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமாக வடிவம் பெற்றபின் கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழர்களின் இலக்கிய வெளிப்பாடு பெரிதும் தமிழ்த் தேசியக் கருத்துநிலையை உள்ளடக்கமாகக் கொண்ட போர்க்கால இலக்கியமாகவே அமைந்துள்ளது. இதில் கிழக்கிலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளின் பங்களிப்பும் கணிசமானது.
1885இல் வெளிவந்த இலங்கையின் முதல் நாவலாகக் கருதப்படும் சித்திலெப்பையின் அசன்பே சரித்திரம் இஸ்லாமிய அடையாள உணர்வின் வெளிப்பாடுதான். 1950களில் பெரிதும் ஸ்தாபனமயப்பட்டுவிட்ட முஸ்லிம் அடையாளத்தைப் புரட்சிக் கமால் முதலில் தன் கவிதைகளில் பதிவுசெய்தார். இவர் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர் என்பது முக்கியக் கவனத்துக்குரியது. 50களிலிருந்து முஸ்லிம்களின் வாழ்க்கையை அப்படையாகக் கொண்ட படைப்புகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. 80களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களின் - குறிப்பாக விடுதலைப் புலிகளின் - ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக முஸ்லிம் படைப்பாளிகள் ஏராளமாக எழுதினர்.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மலையகத் தமிழ் அடையாளம் 1920களில் வெளிப்படத் தொடங்கியது. கோ. நடேசையர், அவருடைய மனைவி மீனாட்சியம்மாள் ஆகியோர் அரசியல் பிரக்ஞை உள்ள மலையக இலக்கியத்தின் முன்னோடி கள் எனலாம். பிறிதொரு முக்கியமான தொழிற்சங்கவாதியான சி. வி. வேலுப் பிள்ளை 1940, 50களில் புதிய மலையக இலக்கியத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்குவகித்தார். தேயிலைத் தோட்டத்திலே என்ற அவரது ஆங்கில நெடுங்கவிதையும் வீடற்றவன், இனிப்படமாட்டேன் முதலிய அவரது நாவல்களும் புதிய மலையக இலக்கியத்துக்கு வித்திட்டவை. மலையகத் தேசியம் என இனங்காணக்கூடிய சமூக, அரசியல், பண்பாட்டு எழுச்சி 1960களிலிருந்தே மலையகத்தில் தீவிரமாக வெளிப்பட்டது. தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம். ராமையா ஆகியோர் இதன் இலக்கிய வெளிப்பாட்டின் முக்கியமான முன்னோடிகள்.
மூன்று வேறுபட்ட இனக் குழுமத்தினர் தமிழ் என்னும் ஒரே மொழியைப் பகிர்ந்துகொண்டு தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை, தங்களது பார்வைகளை இலக்கியத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இத்தன்மையைப் போர்க்கால இலக்கியங்களிலும் காண முடியும். உதாரணமாக 1984இல் வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொள்ளலாம். அதில் பெரும்பாலும் யாழ்ப்பாணப் படைப்பாளிகளின் பங்களிப்பு தான் அதிகம் இருக்கும். யாழ்ப்பாணத் தமிழர்மீது மேற்கொள்ளப்பட்ட ராணுவ ஒடுக்குமுறையின் பதிவுகள் அதில் பெரிதும் இடம்பெற்றிருக்கும். பின்னர் 2000 ஆண்டில் கிழக்கிலிருந்து மீசான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் என்னும் தொகுதி வெளிவந்தது. இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் முஸ்லிம் படைப்பாளிகளால் எழுதப்பட்டவை. அவை அனைத்தும் விடுதலை இயக்கங்கள் முஸ்லிம் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளைப் பதிவுசெய்தவை.


இறுதி யுத்தத்தின் முடிவு இந்த மூன்று இனக் குழுக்களின் நிலைப்பாடுகளில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

இலங்கையின் எல்லாச் சிறுபான்மையினரையும் அது மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. சிங்கள பௌத்த தீவிரத் தேசியவாதத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. இதுதான் புலிகளின் இந்த 30 ஆண்டுக்காலப் போரின் பலன் என்பது துயரமான விடயம். சிங்கள இதழ் ஒன்றுக்கான நேர்காணலில் “புலிகள் தமிழ் மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு நந்திக் கடலில் மூழ்கிவிட்டனர்” எனச் சொல்லியிருந்தேன். இதுதான் யதார்த்தம். புலிகளின் தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். என்றாலும் பிரதான காரணம் புலிகளின் தற்கொலை அரசியல்தான். ஈழத் தமிழ் மக்களிலிருந்தும் ஏனைய இலங்கை மக்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சர்வதேச நாடுளிலிருந்தும் அவர்கள் தனிமைப்பட்டதற்கு அதுதான் காரணம். தமிழ் ஈழ மாயையில் மூழ்கியிருந்த புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் தவிர அவர்களுக்கு நேச சக்திகள் என்று யாருமே இருக்கவில்லை. இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எல்லோரும் குற்றம்சாட்டுவது போல இலங்கை அரசுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதேயளவு பங்கு புலிகளுக்கும் இருக்கிறது. அவர்கள்தான் தங்களோடு மக்களையும் இழுத்துச் சென்றனர்.
இத்தோல்வியை விமர்சனபூர்வமாக அணுக யாரும் தயாராக இல்லை. தமிழ்நாட்டிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி ஒற்றைப் பார்வை அணுகுமுறையுடன் தான் இருக்கிறார்கள்.


இந்த 30 வருடப் போராட்டத்திற்கும் இத்துணை இழப்புகளுக்கும் பிறகு இது போன்ற துயரம் தொடரக் காரணம் புலிகளின் அணுகுமுறைதானா?


அப்படித்தான் நான் சொல்லுவேன். புலிகள் இயக்கம் அடிப்படையிலேயே ஒரு ராணுவ அமைப்புத்தான். அவர்களுக்கு என்று தெளிவான, யதார்த்தமான அரசியல் பார்வை இல்லை. அரசியல் நெளிவுசுளிவுகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. 1987இல் இந்திய நிர்ப்பந்தத்தால் வந்த தீர்வை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொண்டு, தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள். மக்களை அரசியல்மயப்படுத்தி மக்கள் சக்தியில் நம்பிக்கை வைக்காமல் ஆயுத முனையில் மக்களை வழிநடத்தினார்கள். தாங்கள், தாங்கள் மட்டுமே, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதில் உறுதியாக நின்றார்கள். தங்களுடன் கருத்துவேறுபட்டவர்களை எல்லாம் துரோகிகள் என்று அழித்தார்கள். அவர்கள் நம்பியிருந்த ஆயுதப்போர் என்னும் ஒற்றை அணுகுமுறையால் முதலில் தங்கள் மக்களிடமிருந்தே அன்னியப்பட்டார்கள். பிறகு வெளியிலிருக்கும் எல்லா ஆதரவுச் சக்திகளையும் இழந்தார்கள். அவர்களின் தோல்வி என்பது தவிர்க்க முடியாத தற்கொலைதான்.


தமிழ் பேசும் மக்களுக்குரிய அரசியல் எதிர்காலம் என்ன?


அது பெரிய கேள்விக்குறிதான். அவர்களின் அடிப்படை வாழ்வே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாதிருக்கிறது. இன்றைய நிலைமையில் சிங்களத் தீவிரவாதம்தான் மேலோங்கியுள்ளது. அது சிறுபான்மையினரின் உரிமைக்குச் சாதகமாக இல்லை. தோல்வியில் முடிந்த முப்பது ஆண்டு யுத்தம் சிறுபான்மையினரின் அரசியலைச் சிக்கலான இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அது அண்டிப் பிழைப்போரின் அரசியலாகியிருக்கிறது. மைய நீரோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படாதவரையில் இது தொடரும் என்றுதான் தோன்றுகின்றது.


மீண்டும் போராட்டம் உருவாவதற்கு வாய்ப்புகள் எவையும் தென்படுகின்றனவா?


இல்லை. புலம்பெயர் தமிழர்கள் இன்னும் தமிழ் ஈழக் கனவில் இருக்கிறார்கள். நாடுகடந்த தமிழ் ஈழம் ஒன்றையும் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்தலுக்கான முயற்சியாகவே தெரிகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு அது எந்தவகையிலும் உதவாது. இன்னொரு வகையில் அந்தப் பூச்சாண்டியைக் காட்டித்தான் இலங்கை அரசு ராணுவ முகாம்களைப் பலப்படுத்துகிறது. சிங்களத் தீவிரவாதத்தைப் பலப்படுத்தும் பிறிதொரு செயற்பாடுதான் இது. இதைவிட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயனுள்ள காரியங்கள் எத்தனையோ செய்யலாம்.


முகாமில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் எப்படி இருக்கிறது?


பெரும்பாலான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர்பெறவில்லை. அவர்களின் நிலங்கள் இன்னும் முற்றாக அவர்களிடம் கையளிக்கப்படவில்லை. வடக்கு - கிழக்கிலுள்ள ராணுவ முகாம்கள் எவையும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. பதிலாகப் புதிய முகாம்கள் அமைக்க முயல்வதாகத் தெரிகிறது.


புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள்; இனியாவது சிறுபான்மையினரின் பிரச்சினைகளை இனங்கண்டு பேச அரசு தயாராக வேண்டும். அப்படி இல்லாதபோது இதை முன்னெடுக்க ஜனநாயகரீதியான இயக்கங்கள் இப்போது அங்கே இருக்கின்றனவா?


ஆக்கபூர்வமான வலுவான இயக்கங்கள் எவையும் இல்லை. முப்பதாண்டு யுத்தமும் அதன் இறுதி வெற்றியும் அரசின் கரங்களைப் பலப்படுத்தியிருக்கின்றன. ஆட்சியாளர்களின் கைகளில் அதிகாரத்தைக் குவித்திருக்கின்றன. எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தியிருக்கின்றன. ஜனநாயகப் போராட்டங்களுக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்க் கட்சிகளிடம் புதிய பார்வை இல்லை. அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்துகொண்டுதான் உள்ளனர். ஆனால் தீர்வுக்கான முனைப்பு எதுவும் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. என்ன தீர்வு என்பதில் இன்னும்தான் ஒருவருக்கும் தெளிவும் இல்லை


இலங்கையில் கல்வி எப்படி இருக்கிறது?


போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் கல்வி பாதிக்கப்படவில்லை. முகாம்களில் இருந்துகூட மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் போரால் சுமுகமான கல்விச் சூழல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதி போதாது என்ற குற்றச்சாட்டும் உண்டு. யுத்தத்துக்குப் பின் ராணுவச் செலவீடுகள் குறைந்து சமூக நலத்துறைகளுக்கு அதிக ஒதுக்கீடுகள் இருக்கும் என எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் நடைமுறை அதற்கு மாறாக இருக்கிறது.


இலங்கையில் தமிழ்க் கல்வி எப்படி இருக்கிறது? சிங்கள இனவாத அரசாங்கத்தால் அதற்குச் சிக்கல் இருக்கிறதா?


தமிழ்நாட்டைவிடத் தமிழ்க் கல்விக்கான வாய்ப்புகள் இலங்கையில்தான் அதிகமாக இருக்கின்றன. சிங்களம் மட்டும் ஆட்சிமொழியாக இருந்த காலத்திலும்கூடப் பல்கலைக்கழகம்வரை கல்வி மொழி சிங்களமும் தமிழும்தான். இந்த நிலைமை தமிழ்நாட்டில்கூட இல்லை. அந்தவகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான வாய்ப்பு இலங்கையில் சிறப்பாக இருக்கிறது. ஆயினும் உலகமயமாக்கலின் விளைவாக இலங்கை அரசு சமீபகாலமாக ஆங்கிலக் கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. சமுக மனப்பாங்கும் ஆங்கிலத்தை நோக்கித் திரும்புகிறது. இதைத் தவிரக் கடந்த 50 வருடங்களாக உயர்கல்விவரை தமிழ்வழிக் கல்வி உரிமைக்கு வேறு சவால்கள் இல்லை.
பாடத்திட்டங்களில் தமிழர்களுக்குப் புறக்கணிப்பு இருக்கிறதா?
பள்ளி மட்டத்தில் பாடத்திட்டங்கள் ஒருமுகப்பட்டவை. மொழி, சமயம் தவிர்ந்த அனைத்துப் பாடத் திட்டங்களும் பாட நூல்களும் சிங்கள, தமிழ் மொழிமூலம் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானவைதான். ஆனால் மொழி, மதம் தவிர்ந்த பாடத் திட்டங்களை உருவாக்குவதில் சிறுபான்மையினரின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. இப்பாடத் திட்டங்கள், பாடநூல்கள் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டுப் பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் வரலாறு, சமூகக் கல்வி போன்ற பாடநூல்களில் சில சமயங்களில் பெரும்பான்மை இன மேலாண்மை நுழைந்துவிடுகிறது.


போர்க்கால இலக்கியம் பற்றி . . .


போர்க்கால இலக்கியம் 1970களுக்குப் பிந்தைய அரசின் அடக்குமுறைகள், போர் அவலங்கள், விடுதலை இயக்கங்களின் வன்முறைகள் முதலியவற்றைப் பிரதிபலிப்பவை. மிகப் பெரும்பான்மையான சமகால இலங்கைப் படைப்புகள் போர்க்கால வாழ்வைச் சொல்பவையாகவே இருக்கின்றன. இது கவிதைகளில் தீவிரமாக வெளிப்பட்டது. நாவல், சிறுகதைகளிலும் இதன் தாக்கம் ஆழமானது. இவை வெளிப்படையாக அரசியல் பேசும் இலக்கியம்தான். தமிழ்நாட்டு இலக்கியத்தில் வெளிப்படையான அரசியல் மிகக் குறைவு. அரசியல் இலக்கியத்துக்கு உரியதல்ல என்ற கருத்தும் இங்கே வலுப்பெற்றுள்ளது. ஆனால் இலங்கை இலக்கியத்தின் அடிப்படையே அதுதான். தமிழ்நாட்டிலுள்ள அதிநவீன எழுத்தாளர்கள் சிலர் இத்தகைய எழுத்தை இலக்கியமாக ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இது வெறும் அரசியல், இலக்கியமே அல்ல. இக்கண்ணோட்டத்தில் பார்த்தால் மூன்றாம் உலக நாடுகளின் மிகப் பெரும்பாலான எழுத்தை வெறும் பிரசாரக் குப்பை என ஒதுக்க வேண்டியிருக்கும். தமிழ்நாட்டுக் கவிதைகள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகள் தாண்டிய, தனி உணர்வு சார்ந்தவையாகவே உள்ளன. இது எனக்கு உவப்பானதாக இல்லை. எழுத்தாளனுக்குச் சமூகப் பார்வை வேண்டும் என்பதே இங்கே சிலரால் கேலியாகப் பார்க்கப்படுகிறது. எனினும் சமகாலத்தில் இங்கே உருவான தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்பன படைப்பாளியின் சமூக அரசியல் கடப் பாட்டின் வெளிப்பாடுகளாக அமைந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்த யுத்தம் ஒரு வணிக யுத்தமா? இந்த யுத்தத்துக்குப் பிறகு சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பிருக்கிறதா?
எல்லாப் பிரச்சினைகளுக்கும் அக, புறக் காரணிகள் இருக்கின்றன. இந்தப் போர் மூன்று தசாப்தங்கள் நீண்டதற்கும் இறுதியில் அது பெரும்பான்மையினரின் வெற்றியாக அமைந்ததற்கும் அடிப்படையாக அமைந்த அகக் காரணிகளை நாம் முதலில் பார்க்க வேண்டும். அதை நான் ஏற்கனவே ஓரளவு விளக்கினேன். அகக் காரணிகள் இடமளிக்காதவரை புறக் காரணிகள் ஆதிக்கம் செலுத்த முடியாது.
இலங்கையின் புவியமைப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. இதைத் தங்களுடைய நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்புகின்றன. இலங்கையின் அகப் பிரச்சினைகளை இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். உறுதியான கட்டமைப்புள்ள கியூபாவில் அமெரிக்காவால் உள் நுழைய முடியவில்லை. ஆனால் இலங்கை அப்படியல்ல. இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள் வெளிச்சக்திகளின் தலையீட்டுக்குச் சாதகமாக உள்ளன. இலங்கையின் ஆளும் வர்க்கம் தரகு முதலாளிபோல் செயல்படுகிறது. சீனாவைவிட இந்தியாவின் ஆதிக்கம்தான் இலங்கையில் அதிகம் என்று சொல்வேன். விடுதலை இயக்கங்களை உருவாக்கியதிலும் பின்னர் அவற்றை அழித்ததிலும் இந்தியாவின் பங்கே அதிகம்.

இது பற்றி இலங்கையில் உள்ள அறிவுஜீவிகளிடம் விழிப்புணர்வு இருக்கிறதா?

இது பற்றிச் சிலர் சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் அவற்றின் செயல்பாட்டு முக்கியத்துவம் கேள்விக்குறிதான்.


இலங்கையின் இடதுசாரிச் செயல்பாடு என்ன?

இடதுசாரி இயக்கம் இலங்கையில் தோல்வி என்றுதான் சொல்வேன். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பலமான இடதுசாரி இயக்கங்கள் இலங்கையில் இருந்தன. இன்றும் நடைமுறையில் இருக்கும் சமூகநலத் திட்டங்கள் சில உருவாவதற்கு அவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். ஆனால் சுதந்திரத்துக்குப் பிந்தைய நாடாளுமன்றச் சந்தர்ப்பவாத அரசியலும் அதன் ஊடாக முன்னணிக்கு வந்த இன முரண்பாடும் மோதலும் இடதுசாரி இயக்கங்களைப் பலிகொடுத்து விட்டன. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பன சிங்களப் பேரினவாதத்துடன் சமரசம் செய்துகொண்டன. இடதுசாரிப் படிமத்துடன் தீவிர அரசியல் இயக்கமாக முன்னணிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இனவாதக் கட்சியாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டது. இன்று இலங்கையில் வலிமையான இடதுசாரிக் கட்சி என எதுவும் இல்லை. எனினும் சிறிய கட்சிகள் சில இன்னும் இயங்குகின்றன. எனினும் அவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை.
தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் கட்சிகள் சார்ந்தே இயங்குகின்றன. கட்சியின் நிலைப்பாடு எதுவோ அதுவே அவர்களின் நிலைப்பாடு. தனித்துவமான, வலுவான தொழிற்சங்க இயக்கம் எதுவும் இல்லை. ஒருவகையில் பார்த்தால் இது அந்நிய மூலதனத்தின் விளைவு எனலாம். நாம் அவர்களின் கைப்பாவைகளாக இருக்கிறோம்.


இந்தத் தோல்விக்கு சாதியமைப்பு ஒரு காரணமா?


அப்படிச் சொல்ல முடியாது. இன முரண்பாடுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகின்றது. இன முரண்பாடு வர்க்க, சாதி வேறுபாடுகளை மூடிமறைத்துவிடுகிறது. வர்க்க அடிப்படையில் மூவின மக்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கான பாதையை அது மூடிவிட்டது. சாதியமைப்பு இலங்கையில் உறுதியாக இருக்கிறது. இது சிங்கள, தமிழ்ச் சமூகங்கள் இரண்டுக்கும் பொதுவானது. 1960களில் யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்புக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் தான் தீவிரமாகப் போராடின. 80களில் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி சாதி உணர்வை ஓரளவு மட்டுப்படுத்தியது. ஆனாலும் தமிழர் மத்தியில் சாதிக் கண்ணோட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை.


திராவிட இயக்கங்களின் பாதிப்பு என்னவாக இருந்தது?

1950, 60களில் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கு இருந்தது. இப்போது அப்படி எதுவும் இல்லை. 1960, 70களில் மார்க்சியச் சிந்தனை மேலோங்கி இருந்தது. 80களில் மேலேழுந்த இன முரண்பாட்டில் இந்தச் சிந்தனைகள் எல்லாம் அள்ளுண்டுபோயின.

எதிர்வினை
01.நீங்களுமா நுஃமான்?
02. இலங்கை முஸ்லிம்களும் விடுதலைப்புலிகளும்மறக்காத நினைவுகள்


இன்றைக்கு இந்தியாடா ஆசிரியர் தினமாம்... சரி விடுங்க.. நாம கொண்டாடினா என்ன தப்பு... 


இந்த உலகம் கொண்டாடுற தினத்தில் எனக்கு பிடிச்ச தினம்.. என் வீட்டில் நிறைய பேரு ஆசிரியர் என்பதால்... எனக்கு ஆசிரியர்கள் மேல பெரிய ஈடுபாடு இல்ல எங்கிறதுதான் உண்மை... 


இருந்தாளும் என் எல்லா ஆசிரியர்களையும் எனக்கு பிடிக்கும்..ஆசிரியர்களை பல விதத்தில் பிடித்துபோகும் நமக்கு..

பல ஆசிரியர்கள் மனதில் பதியும் வகையில் பாடம் எடுப்பார்கள். அவ்வாறு பல ஆசிரியர்களை என் பாடசாலை வாழ்வு சந்திந்துள்ளது..ஆனால் சில ஆசிரியர்கள் வகுப்பறைக்கு பாடத்துக்கு வெளியே நம்மை ஈர்க்கும். 


அவ்வாறு எனது ஆரம்ப பாடசாலையில் வயசான ஆசிரியர்கள் மத்தியில் அறிமுகமான ஒரு இளம் சமூக கல்வி ஆசிரியர், அவருட பாடத்தில் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும்.. (ஏன் எனின் எங்களுக்கு வழமையான பாட ஆசிரியை எங்களுக்கு அதிகம் பிடிந்திருந்தால்..) அவரின் வெளிக்கள செய்யப்பாடுகள் அதிகம் பிடிக்கும்..


முதலில் எங்களை விளையாட்டு போட்டிகளில் பங்குபற்ற வைத்தார்.. அது நிறைய மாணவருகளுக்கு பெரிய உற்சாகமாக இருந்தது.. அந்த மாணவர்கள் பிறகு தேசிய பாடசாலை ஒன்றுக்கு தொடச்சியான சம்பியன் வெற்றியை ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கப்படாத உண்மை. அவர்தான் அப்போது நாங்கள் முதலில் சந்தித்த... “நாங்கள் நினைப்பதை சொல்லாது புரிந்து கொள்ளும்” ஆசிரியர்..நாங்கள் பல மேடை நாடங்கள் நடித்தும்... அவர் தயார் செய்த ஒரு நாடகம் கடைசி வரை அரங்கேட்ட முடியாது போன குறை இன்னும் எனக்குள் இருக்கிறது. எதிலும் அதை அவ்வாறே நம்பாமல், நமக்கும் அதில் சிந்திப்பதுக்கு ஒரு வெற்றிடம் உண்டு என்று புரிய வைத்தவர்.


பிறகு என் சாதாரண தரத்தில் கணிதபாட ஆசிரியர்.. “நம்மையே நமக்கு நம்ப வைக்கும் ஆற்றல்”.. உன்னால் முடியும் என்ற இலகுவான வார்த்தைகளால் நம்பிகையூட்டியவர். இப்போது யாரும் சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்புவரும் வழக்கமான வார்த்தைகள்தான் அவர் சொன்னது... ஆனால் அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், என்ன செய்வது என்று அறியாமல்... இதை யாராவது கடத்திவிடமாட்டார்களா.. என்று தவிர்த்த நிலையில் உளவியல் ரீதியில் மனதை பலப்படுத்தியுள்ளார் என்பது இப்போது புரிகிறது.. இவ்வாறு என் வகுப்பில் சில மாணவர்களின் எதிர்கால வாழ்வை எளிய சமன்பாடு முலம் 180 பாகையில் திருப்பிப்போட்டார்.


இவ்வாறு நிறைய ஆசிரியர்கள்.....எழுதபோனால் எனது 16 வருடம் நாலு பாடசாலை வாழ்வையும் எழுதி கடுப்பேற்ற விரும்பம் இல்லை.13 வருடந்தானே.. என்ன 16 வருடம்??? கணக்கில் பிழையில்லை.. இதுக்கு என் கூடப்படிச்ச எதாவது ஒரு நாதாரி உங்களுக்கு கீழ நிச்சயம் விளக்கம் தரும்... 


எனக்கு இப்போதும்.... அன்று போல் ஆசிரியர் தினத்தில் பரிசளித்து கொண்டாட ஆசை.. என்ன செய்ய..  “சேர்... ஆ..ஆஆ..க .. (அப்படியேதான் இருக்கிங்க)” என்று கொடுப்புக்குள் சிரிக்கும் “நான் படித்து... நான் முன்னேறி... நான் பதவி அடைந்தேன் ” என்று சொல்லும் படிச்சு கிழிச்ச சமுகத்தில் வாழ்வாதால் சாத்தியம் இல்லை.. 

Wednesday, September 5, 2012

ஆண்கள் பாவம் நீதிகதை 01

நேற்று பழைய ஸ்கூல் நண்பன எதிர்பாராம சந்திக்க கிடைத்தது. நீண்ட நாளைக்கு பிறகு சந்திப்பு... அவன் என்னோட ஒன்பதாம் வகுப்பு படிச்சவன்
(அவன் 2 வருசம் முட்ட வாங்கி பிறகு இணைந்தோம் ). 

 நான் பல வருசம் கழிச்சி புரிஞ்சி விசயத்த அவன் அப்பவே  நல்ல முடிவு எடுத்து படிப்ப கை விட்டுட்டான். பிறகு கதுவல, நிட்டப்புவ, கொழும்பு, காலி ஹோட்டல் வழிய ஒரு 3 வருசம் குடும்பத்துக்காக கஸ்டப்பட்டு. 

 கிடையில நிறைய சப்புமாருக்கிட்ட விஸாக்கு காசு குடுத்து ஏமாத்து ஒரு வழியா குவைத்தில 2 வருசம் ஹவுஸ் ரைவரா கஸ்டப்பட்டு பிறது கட்டாருல இப்ப 3 வருசமா ஒரு கம்பனில நல்ல சம்பளத்தில இருக்கான்.

(இது முன்கதை சுருக்கம்.... இப்ப விசயத்துக்குவாரன்)


நண்பன்- டேய். என்டா..எப்படா இங்க வந்த.

நான்- இப்பான் 

நண்பன்- என்னடா இப்படி தேளிஞ்சிட... !!! வெள்ளையாகி....!!! முன்னையல்லாம் சூடமீன் மாதிரி இருப்ப.... ஹ..ஹஹஹ...

(இப்படி ஆரம்பிச்சி .. கூட படிச்சவன், ஊரு தருதலை இருந்து பெரும்தலை வர கழுவி ஊத்தி.. கடைசியா கல்யாண கதை வந்திக்கி.)

நான்- வீட்ட எல்லாரும் கல்யாணம் முடிச்சிட்டாங்கலாடா?

நண்பன்- ஓம் மச்சான்.. நாநா அப்பவே கல்யாண முடிச்சிட்டாரு தெரியும்தான உனக்கு, ராத்தாக்கு வீடு கட்டி முடிஞ்சிட்டன். ஒரு   மருமகள் இருக்காள் சரியான கதகாரி.. தங்கச்சிக்கு இப்பதான் வீடு முடியிற தருவாயில இருக்கு... 

நான் - மாப்புள பாத்தாச்சா ?

நண்பன்- ஏன்டா அத கேக்கா...  அவங்க உம்மா சொல்லுறா  
சும்மா ஊடு கட்டினா சரிவராதாம்..அப்ஸ்சயாரு வேணுமாம்..
ஏன்டா அவரு கிரச்சுவட்டு மாப்பிளையாம்.
கவும்மட்டு வேல பார்க்கிற மாப்பிள பார்த்தா அவருக்கு பல்ஸர் பைக்கும் கக்கிலி 5லட்சமும் தரனுமாம் .

நான் - ம்...

நண்பன்-   இங்க கஸ்ட பட்டு... இந்த வெயில கருவாடா காஞ்சி உழைச்ச காச... எவ்வளவு லேசா கக்கிலி கேக்காங்கடா... இவனல்லா கட்டி வைச்சி அடிச்சிசாத்தான் சரிபட்டு வரும்.

நான்- என்ன செய்ய அப்படிதான் இருக்கு ஊருநிலம
 ( தானாத்தா வந்துமாட்டிமோ.. இப்படி கடுப்பா இருக்கான்.... ரூட்ட மாத்துடா கைப்புள்ள ) 

பிறகு திசைமாரிய பேச்சு... 15 நிமிடங்களுக்கு பிறகு... நமக்கும் ஞாபக மறதிக்கும் உள்ள உறவ சொல்லவா வேணும்.

 நான்- எப்படா உனக்கு கல்யாணம்?

நண்பன்- (லைட்டா சிரிப்புடன்)... இப்ப என்ன அவசரம்? 

நான்- வீட்ட நிறைய பேரு படை எடுக்காங்கலாம்? ( இப்படி ஒத்தன் இருக்கிறதே.. கண்ட பிறகுதான் ஞாபகமே வந்த.. அதுக்குள்ள ஒரு பச்ச பொய்)

நண்பன்- ம்... வருதுதான் மச்சான். அமையலடா...

நான்- என் வெள்ள பொண்ணு தேவையோ...

நண்பன்- இல்லடா... ராத்தா போய் பாத்த.. பரவால்ல வடிவுதானாம். மௌவிக்கி ஓதின புள்ளையாம். 

நான்- பிறகு 

நண்பன்- அவங்க வாப்பாக்கு மார்கட்டு யாவாரம்.. ஒரு வீடு கட்டி மூத்த புள்ளைக்கு முடிச்சி குடுத்திருக்காரு.. இப்ப வயசாகிட்டு, அங்க இருக்கிற பழைய வீடுதான் திருத்தி தாறாங்க பின்னுக்கு கிடக்கிற வளவையும் அந்த புள்ளைக்கு எழுதுறாங்களாம் .

நான்- பிறகு என்னடா...

நண்பன்- புடிச்சித்தான் இருக்கு... இந்த பெரியம்மா தான்...அந்த புள்ளட வாப்பாட பேருல அங்காலபக்கம் 2 ஏக்கர் வயல் கிடக்காம்.....  

நான்- போடா டேய்..... @!@##$%%^^&&&&&*@*@ நல்ல வருது வாய்ல...

கதை நீதி - அதையும் நான் தான் சொல்லணுமா.. 

ஃபஹீமாஜஹானுடன் ஒரு நேர்காணல்

கட்டுரைகள்
ஃபஹீமாஜஹானுடன் ஒரு நேர்காணல்
[28-Sep-2009]
ஒரு கவிஞராக இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தற்போதைய இலங்கை அரசியலானது இனவாதக் கூறுகள் மேலோங்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. சிங்கள இனவாதத்தையும் பெளத்த மத பீடங்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றும் ஒரு அமைப்பாகவே அரசு இருந்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் அதன் செல்நெறியில் மாற்றம் நிகழப் போவதில்லை.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது நலன்களை வளர்த்துக்கொள்வதற்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஒரு போக்கையே காண முடிகிறது. ஜனாதிபதி மகிந்தவின் குடும்ப உறுப்பினர்களே மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளனர். அதிகாரம் அனைத்தையும் கொண்டவர்களாக அவர்களே திகழ்கின்றனர். நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவுகளையும் அவர்களே வழிநடாத்துகின்றனர். அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைச்செய்யும் காவல்நாய்களாக போலீஸ் பிரிவு இயங்கி வருகிறது. மோசடிகளையும் குற்றச் செயல்களையும் துணிந்து செய்யக் கூடியவர்களாக அரசும் அதன் பங்காளிகளும் காணப்படுகின்றனர்.

‘மனிதாபிமான முன்னெடுப்பு’ என்று கூறியவாறு தனது நாட்டு மக்களையே தினம் தினம் கொன்றொழிக்கும் ஒரு தலைமைத்துவமும் அதனை ஆதரிக்கும் பேரினவாதத்தின் குரல்களும் இந்தத் தீவை ஆள்கின்றன. மக்கள் கைவிட்டுச் சென்ற பூமியை அரச படைகள் தம் வசப்படுத்திச் சிங்கக் கொடியைப் பறக்க விடுவதை அரச தொலைக்காட்சிகள் காண்பிக்கும்பொழுது நாடெங்கிலுமுள்ள பேரினவாதிகள் பட்டாசு கொளுத்தியவர்களாக வீதிகளில் இறங்கிக் கும்மாளமிடுகின்றனர். வடக்கில் மக்கள் உடல் சிதறியவர்களாக வன்னி மண்ணெங்கும் வீசப்பட்டுக் கிடக்கையில், தெற்கில் உள்ள சிங்களவர்களோ இராணுவத்தைப் புகழ்ந்தவாறு வீதிகளில் இறங்கி ஆரவாரம் செய்து மகிழ்கின்றனர். ஊர்வலங்களை நடாத்துகின்றனர்.
இந்த இழிசெயலைத் தொடக்கி வைத்த கைங்கரியத்தையும் அரசுதான் செய்தது. கிழக்கில் ‘குடுமி மலை’ பிரதேசத்தை அரசபடைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் அதனைத் தேசிய விழாவாகக் கொண்டாட வேண்டும் என அரசு தனது நிறுவனங்களையும் மக்களையும் பணித்திருந்தது. சிங்களவர்களின் கலாசாரப்படி பாற்சோறு, அதிரசம் போன்றவை பரிமாறி குறித்த நேரத்தில் நாடெங்கிலும் அதனைக் கொண்டாடுமாறு ஊடகங்களினூடாகக் கோரிக்கை விடுத்தது.
நாடு மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது. நாட்டின் எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக நீதிமன்றமே அரசை நிர்ப்பந்திக்கும் ஒரு சூழல் இங்கு உருவாகியிருந்தது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கொலை செய்யப் படுகிறார்கள். அல்லது மிக மோசமாகத் தாக்கப்படுகிறார்கள். முன்னைய காலங்களைப் போல தற்போது அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவையுமே நடைபெறுவதில்லை.
அரசியல்வாதிகளின் நலன்களுக்காகவே நாட்டில் எல்லாம் நடைபெறுகிறது. அப்பாவி உயிர்களைப் பறித்தும் அநியாய மாகக் குருதி ஆற்றை ஓட வைத்தும் முன்னெடுக்கப்படும் இந்த அரசியல், எதிர்காலத்துக்காக சாபங்களை மாத்திரமே எஞ்ச வைத்துள்ளது.

அங்கு மிகச்சிறிய நம்பிக்கையாவது எஞ்சி இருக்கிறதா?

இல்லை. எதுவுமே இல்லை. இனவாதக் கோசங்களே இங்கு மேலோங்கியுள்ளன. அரச ஆதரவும் இதன் பின்னணியில் உள் ளது. ஊடகங்கள் அனைத்தும் மிகமோசமாக அடக்கப்பட் டுள்ளன. யுத்தத்துக்கு எதிரான எந்தக் குரலையும் ஊடகங் களினூடாகக் கேட்க முடியாத நிலைமையே இங்கு காணப் படுகின்றது. ஊடகங்களும் தமது தார்மீகப் பொறுப்பிலிருந்து நழுவியுள்ளன. அரசின் பொய்களைப் பிரச்சாரப்படுத்தும் பணியை அவை மிகச்சிறப்பாகச் செய்து வருகின்றன.

தனது செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை அரசு மிக இலகுவாகக் கொன்றொழிக்கிறது. சமாதான முன்னெடுப்புகள் யாவும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. இனி ஒருபோதும் அரசு சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப் போவதில்லை.
தமிழர்களின் உரிமைக்காக யார் குரல்கொடுத்தாலும் அல்லது செயற்பட்டாலும் அவருக்கு மரணம் காத்திருக்கிறது. தமது நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் கொல்லப்படுவது சிங்களப் பெரும்பான்மையினத்தைப் பாதிக்கவே இல்லை. யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதொன்றே எல்லோர் குருதியிலும் மிக உக்கிரத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் மேற் கொண்ட தாக்குதல்கள் இந்த முடிவை மக்களிடையே மாற்றுக் கருத் துக்கிடமின்றித் திணித்துள்ளது. இந்நிலையில் சமாதானம் குறித்தோ அமைதி குறித்தோ பேசப்படும் குரல்கள் எவையுமே எடுபடப் போவதில்லை.

தற்போது வடக்கில் நிகழ்த்தப்படுவதைப் போன்றதொரு மானுடத்தின் பேரவலத்தை கிழக்கிலும் அரசு நடாத்தி முடித்தது. கிழக்கு மக்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்து சமாதானச் சூழலை மக்களுக்கு வழங்கியுள்ளதான மாயையைத் தெற்கில் அது பரப்பி வருகின்றது. ஆனால் கிழக்கில் கொலைகளும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித் துக்கொண்டே செல்கின்றன. அத்துடன் அரசு மிகவும் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களையும் எல்லை விஸ்தரிப்புகளையும் பாரம்பரியமாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குரிய நிலங்களை அபகரிப்பதையும் அந்த மக்களுக்கேயுரிய கடல் மற்றும் வனவளங்களைச் சூறையாடுவதையும் அந்த வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளித்து பண மீட்டுவதிலும் ஈடுபட்டு வருகின்றது. கிழக்கில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் மிகவும் மோசமான எதிர்காலச் சூழலுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

அத்துடன் கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக் கென்று தனித்துவத்துடன் இயங்கி வரும் இரண்டு பல்கலைக் கழகங்களிலும் மிக அதிகளவான சிங்கள மாணவர்களை அனுமதித்து அரசு இனவாதிகளின் திட்டங்களுக்குச் செவிசாய்த்துள்ளது. இனவாதிகளின் மிகத் தந்திரமான ஆலோசனைகளின்படி கிழக்கு மக்களின் உயர்கல்வி வாய்ப்புகளிலும் பல்கலைக்கழ கங்களுடன் சார்ந்த தமிழ், முஸ்லிம் சமூகங்களின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சியிலும் பல்வேறு தடங்கல்ளையும் ஏற்படுத்தி படிப்படியாக அவற்றின் கூர்மையை மழுங்கடித்து விடும் செயலை ஆரம்பித்து வைத்துள்ளது.

இதைப் போன்ற அல்லது அதைவிடவும் சிக்கலானதொரு எதிர்காலமே வடக்கிலும் ஏற்படப் போகின்றது. எதிர்கால வன்முறைகளுக்கும் அமைதியின்மைக்கும் மிகச் சாதகமான பின்னணி இங்கு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் எத்தகைய நம்பிக்கைகளை நாம் வைத்திருக்க முடியும்?
எதிர்க்கட்சியில்கூட நம்பிக்கை தரும் தலைமைத்துவ மொன்றை, யுத்தத்தை மறுதலித்து சமாதானத்தை முன்னெ டுத்துச் செல்லக் கூடிய ஒரு சக்திமிக்க தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை. சிறுபான்மை இனங்களை மதிக்கக்கூடிய அவற்றுக்காக குரல் கொடுக்கக்கூடிய எந்த ஒரு தலைமைத் துவமும் எதிர்க்கட்சியில் இல்லை.

இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக வரும் தகுதி சிங்களப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே உள்ளது. இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம்-2 தனியாக பெளத்த மதத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் “இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கட்டாய கடமையாக இருத்தல் வேண்டும்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

சிங்களவர்களில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இனவாதி களால் பேணப்பட்டுவரும் பெளத்த பீடங்களைத் திருப்திப்படுத்து பவர்களாகவே காணப்படுவார்கள்.  அவர்களை சிங்களப் பேரின வாதமும் பெளத்த பீடங்களும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
அரசியலமைப்பே பேரினவாதத்துக்கு ஆதரவாகக் காணப் படுகிறது. நாட்டின் அமைதியின்மைக்கு இதுவே  அடித்தளமான காரணியாகவும் உள்ளது.

இந்த மோதலின் மூலம் என்ன ? அல்லது யுத்தத்தின் மூலகாரணம் என்ன ?

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இருந்து வந்த ஒரு பிளவு தான் இப்போது பாரிய வெடிப்பாக வெடித்துள்ளது. நீண்ட காலத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை அரசு சார்பான அமைப்புகள் புறக்கணித்து வந்ததன் விளைவாகவே பின்னாளில் அது போராட்ட வடிவம் பெற்றது.

1977ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்திலேயே ஆயுதப் போராட்டங்கள் முனைப்புப் பெற்றன. வடக்கு கிழக்கில் முன்வைக்கப்பட்ட அரசியல் கோரிக்கை களையும் அதனுடன் ஒட்டி நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களையும் பயங்கரவாதமென்றும் பிரிவினைவாதமென்றும் அரசு அடையாளப்படுத்தியது. இதனைத் தீர்க்கவென்று இராணுவம் சார்ந்த செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசு தமிழர்களுக்கெதிரான போக்குகளை மேற்கொண்டது.

1978ம் ஆண்டு அமுலாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை, அதிகாரங்கள் அனைத்தையும் ஒரு தனிமனிதனிடத்தில் ஒப்படைக்கும் கைங்கரியத்தைச் செய்தது. ஜனநாயகப் பண்புகள் சிதைக்கப்பட்டன. அத்துடன் அரசியல்  வன்முறைகளும் தோற்றம் பெறத் தொடங்கியது.

யாழ்ப்பாண நூலக எரிப்பு, யாழ்ப்பாண மாணவர்களுக்கான பல்கலைக் கழக அனுமதிக்கான அதிகூடிய வெட்டுப்புள்ளிகள் என்பனவெல்லாம் இளைஞர்களை அரசுக்கெதிராக அணி திரள வைத்தது. அதன் பின்னர் இராணுவத்தைச் சேர்ந்த சிலர் வடக்கில் வைத்துக் கொலைசெய்யப்பட்டபோது தமிழர்களுக் கெதிரான மிகப் பாரிய இனவெறியாட்டம் நாடெங்கும் கட்ட விழ்த்து விடப்பட்டது.

1983 ஆடிக் கலவரத்தில் நாடெங்கிலும் வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் அனைவரும் தேடித்தேடிக் கொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டன. சிறைகளில் வாழ்ந்த தமிழர்கள் குரூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப் பட்டனர்.
இதன் பின்னர் சிங்கள வெறியர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் வழியொன்றும் தமக்கான சுதந்திர தேச மொன்றும் தேவையென்ற முடிவு எல்லாத் தமிழர்களாலும் மாற்றுக் கருத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப் படலாயிற்று.

அப்பொழுது காணப்பட்ட ஆயுதக் குழுக்கள் தமக்கிடயே சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற்படத்தொடங்கின. இந்த ஒற்றுமையானது இந்தியாவுக்குத் திகிலை ஏற்படுத்தவே தனது உளவுப் பிரிவின் உதவியுடன் இயக்கங்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டது. பின்னர் இயக்கங்களிடையே காணப் பட்ட பொது ஒருமைப்பாடு களைக்கப்பட்டது. அவை தமக்குள் மோதிக்கொள்ளத் தொடங்கின.

இந்நிலையில் தமிழர்களுக்கான சுதந்திர தாயகத்தை உருவாக்கிக் கொடுக்கும் வல்லமை தமக்கு மாத்திரமே உண் டென்ற முடிவுடன் புலிகள் செயற்படலாயினர். ஏனைய இயக்கங் களைப் புலிகள் தடைசெய்தனர். அதனை மீறியோர் கொலை செய்யப் பட்டனர்.

இங்கு நான் ஒரு சில விடயங்களை மாத்திரமே குறிப்பிட்டுள்ளேன். நான் பிறப்பதற்கு முன்பே தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு சிக்கல் இது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து கொலைகள் மலிந்த ஒரு தேசத்தையே காண்கிறேன். பிரச்சினை களுக்கான தீர்வாக இங்கு படுகொலைகளே காணப்படுகின்றன.

அது எவ்வாறு இந்தளவுக்கு சிக்கலானது அல்லது ஏன் இந்த அளவுக்கு இது தீர்விலிருந்து விலகியது?

இதற்கான பதிலை மிக இலகுவில் ஓரிரு வரிகளில் கூறிவிட முடியாது. எனினும் மிக அண்மித்த காலப் பகுதிக்கு வருவோம். 2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகனுக்கும் இடையில் கொண்டு வரப்பட்ட யுத்த நிறுத்தச் சூழலில் தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்ந்தனர். அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தமக்கான வீடுகளைக் கட்டி மின்சாரம், எரி பொருள், மருந்து உட்பட அடிப்படை வசதிகளைப்  பெற்று புதிய உலகக் கனவுகளுடன் வாழத் தலைப்பட்டனர். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த அமைதியான வாழ்வு நீடிக்கவில்லை.

இந்த யுத்த நிறுத்தச் சூழலிலிருந்து நிலையான சமாதானத் துக்கான பாதையை அமைத்துக் கொள்ள தமிழ் மக்கள் தவறி விட்டனர். புலம்பெயர்ந்து வாழும் மக்களும் சமாதான முன்னெடுப்புகளின்மீது அதிக அக்கறை செலுத்தவில்லை. அவர்கள்கூட சமாதானத்தைக் கண்டு பீதியுற்றிருந்த வேளையது. தாயகத்தில் சமாதானம் ஏற்பட்டால் ‘திரும்பவும் இலங்கைக்குத் திருப்பி யனுப்பப் பட்டுவிடுவோமோ’ என்ற அச்சம் அவர்களுக்கு மிருந்தது. வெளிநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கும் வசதி களை விட்டுவிட்டு யுத்தம் தின்று எஞ்ச வைத்துள்ள பூமியில் வந்து வாழ அவர்கள் பின்வாங்கினர்.
ஆனால் அவர்களுக்குத் தமிழீழம் தேவையாக இருந்தது. அவர்கள் கற்பனையில் வாழ்ந்திட அத்தகையதொரு தேசம் தேவைப்பட்டிருந்தது.  சமாதானச் சூழலைக் கண்டு ஆயுத வியாபாரிகளும் மிகவும் கலக்கமுற்றிருந்தனர். இவர்களை யெல்லாம் திருப்தி செய்யும் வல்லமை சமாதானத்துக்கு இருக்க வில்லை. அப்பாவி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் தேவையானது போரைக் கொண்டு நடத்துபவர்களுக்கும் அதன் மூலம் ஆதாயம் பெறுவோருக்கும் இருக்கவேயில்லை.
நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்க சமஷ்டித் தீர்வை முன்வைத்தும் மகிந்த ராஜபக்ஷ தமிழீழத்தை நிராகரித்து ஒற்றையாட்சியை முன்வைத்தும் போட்டியிட்டனர்.தேர்தல் நடைபெற்ற தினத்தில் வடக்கைச் சேர்ந்த மக்கள் வாக்களிப் பதைப் புலிகள் தடுத்ததோடு அதனை மீறி வாக்களித்த ஒருவரது கரத்தைத் துண்டித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. வடக்கைச் சேர்ந்த மக்கள் வாக்களித்திருந்திருப்பார்களே யானால் இன்று ரணில்தான் ஜனாதிபதியாக இருந்திருப்பார். இத்தகையதொரு மனிதப் பேரழிவை தமிழ் மக்கள் சந்தித் திருக்க மாட்டார்கள்.

புலிகள் சமஷ்டி முறையிலான தீர்வினால் தமது அதிகாரம் பலவீன மாக்கப்பட்டு விடும் என்று கருதியதால் ரணில் ஆட்சிக்கு வருவதை விரும்ப வில்லை. மாறாகத்  தமிழீழக் கோரிக்கையை நிராகரித்துப் போட்டியிட்ட மகிந்த ஜனாதிபதியாக வருவதை விரும்பினர். மீண்டும் போரைத் தொடர்வதே அவர்களின் குறிக் கோளாக இருந்தது. தழிழீழத்துக்கான இறுதி யுத்தம் என்று கூறி, நிதி மற்றும் ஆயுத சேகரிப்பில் ஈடுபட்டனர். முழு அளவிலான யுத்தமொன்றுக்காகத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டனர்.
ஓய்ந்திருந்த அரச பயங்கரவாதம் மகிந்தவின் ஆட்சியில் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டது. தீர்வுமூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புலிகள் மற்றும் அரசு என்ற இருபக்கப் பயங்கரவாதமும் மீண்டும்  மோதிக் கொள்ளத் தொடங்கின. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில்  அப்பாவிப் பொது மக்களை இலக்கு வைத்துப் புலிகள் குண்டுத் தாக்குதல்களை ஆரம்பிக்க அதை விடவும் பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் பணியில் அரசும் ஈடுபடத் தொடங்கியது.

இவ்வாறுதான்  சமாதானம் உதயமாகுமென்று காத்திருந்த சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கையையும் சிதைத்துக் கொண்டு போர் என்ற பிசாசு மீண்டும் தாண்டவமெடுத்தாடத் தொடங்கியது.

இலங்கையில் போருக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தப்படுகிறதா? அவைகள் என்ன?

மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இத்தகைய சில முன்னெடுப்புகள் இருந்தன. ஆனால் தற்பொழுது போருக்கான ஆதரவும் மகிழ்ச்சி ஊர்வலங்களும் மாத்திரமே இங்கு நடை பெற்று வருகின்றன. போருக்கு எதிரான ஒரு ஊர்வலம் நடாத்தப் பட்டால் அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் ‘அடுத்த நாள் உயிருடன் வாழ முடியும்’ என்ற நம்பிக்கையைக் கைவிட்டே செல்ல வேண்டும்.

அறிவியல்தளத்தில் இயங்குபவர்கள் இந்தச் சூழ் நிலையை எப்படி எதிர்கொள்கிறார்கள் ?

அறிவுத்தளத்தில் இயங்குபவர்களுக்கு யுத்தத்தின் மூலம் ஒரு பொழுதும் இந்தத் தேசத்துக்கு அமைதி வரப்போவதில்லை என்பது நன்கு தெரிந்திருக்கிறது.

ஆனாலும் மிக மோசமான அச்சுறுத்தல் நிலவும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருப்பதால் யுத்தத்துக்கு எதிரான கருத்துகளும் அரசுக்கு எதிரான கருத்துகளும் இங்கு வெளிப்படுத் தப்படுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. அதை மீறிச் செயற்பட்டவர்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறர்கள். சிலர் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சூழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எவரும் இங்கு நிம்மதியாக வாழ்ந்து விடமுடியாது.

தமிழ் மாணவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய இரண்டு பல்கலைக்கழகங்களான வடக்கு மற்றும் கிழக்குப்  பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிநிலைகள்கூட உயிரச்சுறுத் தலைத் தருவதாகவே காணப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவா னவர்களே இப்பதவிகளில் நிலைத்திருக்க முடியும். மீறி வருபவர் களின் பின்னால் கடத்தல்கள், பதவிகளிலிருந்து நீங்கச் சொல்லும் அச்சுறுத்தல்கள் என நச்சு நிழல்கள் அவர்களைத் தொடர்கின்றன.

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அதிகளவான சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். அத்துடன் ஒரு சிங்கள மாணவன் அங்கு கொலை செய்யப்பட்டான். பல்கலைக்கழகத் தினுள்ளும் இனமோதல் ஏற்படும் சூழலை இனவாதக் குழுக்கள் திட்டமிட்டே மேற்கொள்கின்றன.
இவ்வாறே போரினால் பாதிப்படைந்துள்ள இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் உள்ளன. மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான  எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்  முஸ்லிம்  மாணவர்களுக்கென   தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் தேசப் பிரகடனம் என்ற நிகழ்வு பொதுமக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் கிரகணம் பிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் சிங்கள மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அங்கு வந்த மறுதினமே பெளத்த விகாரை ஒன்றை அங்கு அமைப்பதற்கும் அனுமதி கோரியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பெருமளவிலான இராணுவம் அங்கு குவிக்கப்பட்டு ஏழுக்கும் அதிகமான இராணுவக் காவல் அரண்கள் பல்கலைக்கழக எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்தன.

இது சாதாரண நிகழ்வல்ல. இதன் பின்னணியில் பாரிய சதித் திட்டமுள்ளதாக கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அஞ்சுகின்றனர். அரசின் சிங்களமயமாக்கல் மற்றும் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தல் போன்ற திட்டங்களின் ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே கல்விநிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய செயல்களைக் கருதுகின்றனர். அரசு பேரினவாதிகளின் ஆதரவுடன்  பல்லாண்டு களுக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு தனது செயற் பாடுகளைத் தொடங்கியுள்ளதாக அறிவுத்தளத்தில் இயங்கும் மக்கள் கருதுகின்றனர். அரசின் நிகழ்ச்சி நிரல்கள் ஒரு புறமும் புலிகளின் கொலைப் பட்டியல் மறுபுறமுமாக இரண்டு பயங்கர வாதங்கள் அறிவுத் தளத்தில் இயங்கும் மக்களைக் கட்டுப் படுத்திவைத்துள்ளன.

யுத்தத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் என்ன?
தனிப்பட்ட அனுபவங்கள் என்று கூற முடியாது. ஆனால் மனதளவில் பாதிப்படைந்துள்ளேன். நான் 1998-2000 வரையான காலப்பகுதியில் கிழக்கில் வாழ்ந்தேன். அப்போது அங்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வயல் நிலங்களுக்குப் போன முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தச் சடலங்களை உழவு இயந்திரப் பெட்டிகளில் போட்டு வைத்திய சாலைக்கு எடுத்து வந்தனர். பிரேத அறை இல்லாத வைத்திய சாலையில் அந்தச் சடலங்கள் வெள்ளைத் துணியினால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. சுகவீனமுற்றிருந்த நண்பர்களை அல்லது அவர்களது உறவினர்களைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்ற சந்தர்ப்பங்களில் இத்தகைய துயர்மிகுந்த சூழல்களை எதிர் கொண்டேன்.

இரவு நேரங்களில் அயல் கிராமங்களில் தாக்குதல்கள் நடை பெறும். அந்தச் சந்தர்ப்பங்களில் நண்பர்கள் என்னை மென் மேலும் அச்சப்படுத்துவார்கள். நான் சிங்களப் பகுதியில் இருந்து அங்கு போயிருந்தபடியால் இராணுவம்மீது எனக்கு எவ்வித அச்சமும் இருக்கவில்லை. சோதனைச் சாவடிகளில் கூட எமக்கு எந்தச் சிக்கல்களும் ஏற்படவில்லை. எமது பகுதியில் இராணுவத் தினருக்கு மக்களிடையே மரியாதை இருந்தது.  ஆனால் புலி களை எண்ணிப் பயந்தேன். புலிகள் எவ்வாறு மக்களைக் கொலை செய்தார்கள் என்பதையெல்லாம் நண்பர்கள் கதை கதையாகக் கூறிக் கொண்டிருப்பார்கள். நானும் கொலை செய்யப் பட்டுவிடுவேன் என்ற எதிர்பார்ப்போடு அதிரும் வெடியோசை களைக் கேட்டவாறு இரவுகளைக் கழித்திருக்கிறேன். எனது முஸ்லிம், தமிழ் நண்பர்கள் சிலரின் வாழ்வும் யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வின் கதைகளும் என்னைப் பாதித்தன.

உங்கள் கடந்த காலத்தைச் சற்று விவரிக்க முடியுமா?

நான் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் (அரச கட்டுப் பாட்டுப் பகுதி) ஒரு அழகிய சிறிய கிராமத்தில் பிறந்து அம்மம்மாவிடம் (அம்மாவின் தாயார்) வளர்ந்தேன். அம்மம்மாவும் நானும் மாத்திரமே அந்த வீட்டில் வசித்தோம். கிராமத்தைச் சேர்ந்த மற்றப் பிள்ளைகளை விடவும் சற்று வித்தியாசமாகவே வளர்க்கப்பட்டேன். செல்வாக்கான குடும்பப் பின்னணியில் வளரும் எல்லாப் பிள்ளைகளுக்கும் இருக்கும் சில கடப்பாடுகள் எனக்குமிருந்தன. அம்மம்மாவின் அரவணைப்பில்தான் எனது இனிய உலகம் அமைந்திருந்தது.
மிகவும் இனிய சுதந்திரமான சிறுபருவ வாழ்க்கை அம்மம்மாவின் நிழலில் எனக்கு வாய்த்திருந்தது. இரவுகளில் அம்மம்மாவின் வாழ்வில் எதிர்கொண்ட துயரங்களையும் வாய்மொழிக் கதைகளையும் கேட்டபடி து}ங்குவேன். நல்ல தங்காள் கதை உட்படப் பல்வேறு கதைகளை அம்மம்மாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நான் அதிகமாகக் கேள்விகளை கேட்கும் பொழுது ‘இவற்றையெல்லாம் யாராவது புத்தகங்களில்  எழுதி வைத்திருப் பார்கள். தேடிப் படியுங்கள்’ என்று அம்மம்மா சொல்வதுண்டு. பின்னர் நல்ல தங்காள் கதையை இணையத்தில் தேடியே நான் படித்தேன். அம்மம்மா சொன்னதற்கு அப்பால் அதிலிருந்து எந்தப் புதிய தகவலும் கிடைக்கவில்லை.

மழைக்கால நாட்களில் வெளியே விளையாட முடியாது. எனவே அம்மம்மாவின் அனுமதியுடன் தாயாரின் புத்தகங்களைக் குடைந்து கொண்டிருப்பேன் (சுமார் 8- 9 வயதுகளில் ) அவை இருந்தவாறே ஒழுங்காக வைத்துவிடவேண்டும் என்ற அம்மம்மாவின் கட்டளையைச் சரியாகப் பின்பற்றுவேன். ஏனெனில் மீண்டும் மீண்டும் அவற்றைப் படிக்கும் ஆவலும் தேவையும் எனக்கிருந்தது. அப்பொழுதுதான் மகாகவியின் குறும்பாக்களை ‘இளம்பிறை’ சஞ்சிகையில் படித்தேன். என்னவென்று தெரியாமல் நகைச்சுவை உணர்வுடன் இருந்தமையாலும் அவற்றுக்கருகே வரையப்பட்டிருந்த  கேலிச் சித்திரங்களின் ஈர்ப்பினாலும் அவை சட்டென்று என் மனதில் பதிந்தன. அவற்றை நான் உரத்துக்கூறி மற்றவர்களைக் கேலி பண்ணுவேன். பின்னர் அவைதான் மகா கவியின் குறும்பாக்கள் என்று அறிந்து கொண்ட பொழுது எனக்கு 20 வயதும் தாண்டியிருந்தது.
நான் வளர்ந்த சூழல் சிங்களச் சூழல். படிக்கும் பத்திரிகைகள், வீட்டுக்கு வெளியே தொடர்பாடல் மொழி என்பவற்றில் எல்லாம் சிங்களமே ஆட்சி செலுத்தியது. வீட்டிலிருந்து 25 கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த நூலகத்திலிருந்து தமிழ் நூல்களைத் தேடி வாசிப்பேன். இத்தகைய ஒரு சூழலில் இருந்து தான் நான் கவிதை எழுதத் தொடங்கினேன். கவிதை எனக்குத் தானாக வந்தது. எழுதச்சொல்லி யாரும் து}ண்டுதல்  தரவில்லை. நானாகவே எழுதினேன்.

10 வயது வரையும் ஊர்ப்பள்ளியில் பயின்றேன். பின்னர் 15 வயது வரையும் நகரத்தில் கல்வி பயின்றேன்.அதன் பின்னர் அறிவியல் துறையில் உயர்கல்வி பெறுவதற்கான பள்ளிக்கூட மெதுவுமே எமது மாகாணத்தில் இல்லாதபடியால் வெளியூரில் போய் கல்வி கற்கும் துயரமான நிலை ஏற்பட்டது. அம்மம்மாவைப் பிரிவதும் தாயாரின் உதவியின்றி கல்வியைத் தொடர்வதும் என்னால் சகிக்கவே முடியாத விடயங்களாக இருந்தன.  
பின்னர் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. அதே சந்தர்ப்பத்தில் ஆசிரியத் தொழில் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. பல்கலைக்கழகம் செல்வதன்மூலம் எனக்குக் காத்திருந்த தொழில் வாய்ப்பு என்னை ஊரைவிட்டு நிரந்தர மாகவே  பிரித்துவிடும் என்ற காரணத்தினால் அதனைக் கைவிட்டு விட்டு ஆசிரிய பணியைத் தேர்ந்தெடுத்தேன். மீண்டும் கல்வி மாணிக் கற்கைக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அந்தப் பாட நெறியைக் கற்கும் வாய்ப்பு கொழும்பில் இருந்தபடியால் அதையும் கைவிட வேண்டிய தாயிற்று.

எப்பொழுதும் அமைதியாக வாழவிரும்புகிறேன். அப்படியே வாழ்ந்தும் வருகிறேன். சிங்கள மக்கள் பெரும் பான்மையாகவுள்ள ஒரு பிரதேசத்திலேயே எனது ஊர் காணப்படுகின்றது. எழுத்துச் சூழல் இங்கு இல்லை. தமிழ் நூல்கள் சஞ்சிகைகள் எவையும் இங்கு கிடைப்பதில்லை. அவற்றை நான் வெளியில் இருந்தே பெற வேண்டியுள்ளது. எனது கவிதைதான் எனக்கு நண்பர்களைத் தேடித் தந்தது. இணையமும் தொலைபேசியுமே நண்பர்களை இணைத்து வைத்துள்ளது. இதுவரையும் நான் முகம் காணாதவர்களே நண்பர்களாகவும் இருக்கின்றனர்.
பெண்களின் சுதந்திரம், குடும்ப வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
குடும்ப வாழ்வுக்குள் பெண்ணுக்கு எங்கே சுதந்திரம் இருக்கிறது? சமைப்பதிலும் வீட்டுவேலைகளிலும் ஆணின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தினமும் 18 மணித்தியாலங்களுக்கும் மேலாக உழைக்கும் ஊதியமற்ற தொழிலாளியாகவே பெண் இருக்கிறாள். இத்தகைய மெச்சப்படாத உழைப்பின் இறுதியிலும் ஆண் அவளைக் குறை காண்பவனாகவும் நிம்மதியைச் சீர் குலைப்பவனாகவுமே அதிகமான குடும்பங்களில் காணப்படுகிறான். ஆண்தான் பெண்ணுக்கான எல்லாத் துயரங் களையும் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியேயும் கட்டமைத்து
வைத்திருக்கிறான்.

காதல், திருமணம், காமம் குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன?

காதலிக்கப்படும்போது எந்த ஒரு காதலனும் தனது காதலியை கண்ணுக்குள் வைத்துக் காப்பதாக கற்பனைகளைச் சொல்லி  அவளிடம் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வளர்த்து விடுகிறான். அது அப்படியே நடை பெற்றால் பெண்கள் இவ்வளவு துயரங்களை எதிர்கொள்ள மாட்டார்கள். ஆனால் இடையிலேயே அவளைக் கைவிட்டுவிடுகிறான். அதையும் தாண்டி  திருமணம் முடிவடைந்தால்  துரதிர்ஷ்டவசமாக அவன் கணவனாக மாறிவிடுகிறான். அங்கிருந்தே பெண்ணுக்கான எல்லாத் துயரங்களும் ஆரம்பமாகின்றன.

உலகில் அமைதி நிலவவேண்டுமானால் அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒழுக்கமுள்ளவர்களாக வாழவேண்டும். மேலைத்தேயம் வகுத்துள்ள பாலியல் சுதந்திரங்கள் நிம்மதி யான வாழ்வைத் தந்ததில்லை. மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான வேற்றுமை ஒழுக்கத்தில்தான் தங்கியுள்ளது. அதை மீறும்போதுதான் ‘நீயும் மனிதனா? ’ என்ற கேள்வியை எழுப்புகிறோம். இதை மீறும்பொழுது மிகப் பயங்கரமான எதிர் வினைகளை மனிதகுலம் சந்திக்கவேண்டியிருப்பதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம்.

இலங்கைச் சமூகத்தில் பெண்களின் நிலை என்ன ?

பள்ளிக்கூடங்களை எடுத்து நோக்கும்பொழுது ஆண்களை விடவும் பெண்பிள்ளைகளே  அதிகளவில் எல்லா இடங்களிலும் திறமையாகக் கல்வி கற்கின்றனர். இலங்கையில் பெண்கள் சுதந்திரமாகவே வாழ்கிறார்கள்.
பெண்ணடிமைத்தனம், பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்பன இங்கு உச்சநிலையில் இல்லை. எனினும் கீழைத் தேய நாடுகளுக்கேயுரித்தான பொதுவான சில துயரங்கள் இந்நாட்டுப் பெண்களுக்கும் உண்டு. வரதட்சிணைப் பிரச்சினைகள் வடக்கிலும்  அதைவிட அதிகமாகக் கிழக்கிலும் காணப்பட் டாலும் ஏனைய பிரதேசங்களில் இழிவளவிலேயே காணப்படு கின்றன. பெரும்பாலும் சிங்களப் பெண்கள் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபடவே செய்கிறார்கள்.

ஓரளவு வசதியான பெண்கள் பெரும்பாலும் திருமணத்தின் பின்னர் வீடுகளுக்குள்ளேயே முடக்கப்படுகிறார்கள். எனினும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் யுவதிகளும் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதனால் அவர் களைச் சார்ந்த குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. இப்படிச் செல்லும் பெண்கள் பொருளாதாரத்தில்கூட பெரிய முன்னேற்றத்தையடைவதாக இல்லை. கணவன், பிள்ளைகள் என்ற அவளைச் சார்ந்த உறவுகளின் பிணைப்புக் கலைந்து போவதே பெரும்பாலும் நிகழ்கின்றது. தாய்மார்கள் இங்கு விட்டுவிட்டுச் செல்லும் பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிந்து போகிறது. அத்தகைய பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலும் சரி, அதன் பிறகு அவர்கள் பிரவேசிக்கும் சூழலிலும் சரி, பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். தனது குடும்ப நிம்மதியையும் வாழ்வின் நிம்மதியையும் இழந்தவர் களாகவே இத்தகைய பெண்களில் அதிகமானோர் வாழ்கிறார்கள்.

பெண்களின் சிந்தனைத் தளத்தில் மாற்றம் ஏற்படுமாயின் இந்த சூழல் மாற்றமடையும். அவர்கள் சார்ந்த துயரங்கள் குறைவடையும். பெண்களின் வாழ்க்கைத் தரமும் குடும்ப நிம்மதியும் பேணப்படும்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களின் நிலைமை என்ன ?

போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் தொகை மிகவும் அதிகமாயுள்ளது. தமது குழந்தைகளுடன் இவர்கள் கைவிடப் பட்டுக்கிடக்கின்றனர். போரினால் தனது பெற்றோரை, சகோதரர்களை, கணவனை இழந்த கிழக்கைச் சேர்ந்த பெரும் பாலான வறிய குடும்பத்துப் பெண்கள் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
போரினால் ஊனமுற்றோரும் அகதி முகாம்களில் வாழும் பெண்களும் சொல்லொணாத் துயரங்களைச் சகித்தவாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற சூழலில் பல்வேறு மனஅழுத்தங்களுக்கு முகம் கொடுத் தவர்களாக வாழ்கின்றனர். இவர்களின் துயரங்கள் உலகின் செவிகளுக்கு எட்டுவதில்லை. இவர்களின் துயரத்துக்குக் காரணமான இருதரப்பினரிலும் எவருமே இந்தப் பெண்களின் துயரங்களுக்கான தீர்வுகளை வழங்கத் தயாராக இல்லை.

 ஆண்கள் தமது அதிகாரங்களுக்காகவும் அரசியலுக்காகவும் போரிட்டுக்கொண்டிருக்கையில் இடையில் சிக்கித் தண்டனை பெற்றுக் கொண்டிருப்பது அப்பாவிப் பெண்கள்தான். அவள் பெற்ற புத்திரர்கள் சண்டையிட்டுக்கொண்டு துயரத்தின் எச்சங்களையும் அவளிடமே கைவிட்டுச் செல்கின்றனர்.

அங்கிருக்கும் பெண்களுக்கான இயக்கங்கள் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கின்றன?

பெண்களுக்கான இயக்கங்கள் தற்போது அதிக முனைப்புடன் இல்லை. பெண்ணுரிமைகளோடு தொடர்புபட்ட சில இயக்கங்களும் யுத்தத்துக்கு எதிராக ‘அன்னையர் முன்னணி’ போன்ற அமைப்புகள் முன்பு காணப்பட்டாலும் அவற்றின் செயற்பாடுகள் எதனையும் தற்போது அறிய முடியவில்லை.

இந்த நிலை குறித்து எழுத்தாளர்களின் எதிர்வினைகள் எவ்வாறு உள்ளன?
மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் யுத்தம் குறித்த எதிர் வினைகள்  முன்னெடுக்கப்பட்டன. யுத்த நிறுத்த காலத்தில் சிங்கள எழுத்தாளர்கள் வடக்கைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களை கொழும்புக்கு அழைத்து ஒன்றுகூடல் ஒன்றையும் நடாத்தினர். வடக்குக்கும் தெற்குக்குமிடையே அதாவது தமிழுக்கும் சிங்களத் துக்குமிடையே உறவுப் பாலமொன்றை அமைக்க முனைந்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில்  மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைமையிலான இனவாதக் கும்பலொன்று புலி களைக் கொழும்புக்கு அழைத்து வந்து வைத்திருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்குவதற்காக, ஒன்றுகூடல் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தினுள் நுழைந்தது. எனினும் அங்கிருந்த சிங்களக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தமிழ் எழுத்தாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அரணாக இருந்து காப்பாற்றினர். இந்தச் சம்பவத்தில் தமிழர்களைக்  காப்பாற்ற அரணாக இருந்த  சிங்களவர்களே தாக்குதலுக்குள்ளாயினர். ஆனால் இப்பொழுது எந்த முன்னெடுப்புகளும் இல்லை.

விடுதலைப்புலிகள் எப்படி பெண்களைச் சேர்க்கிறார்கள்?

ஆரம்ப கட்டத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் தமது விருப்பத்தின் பேரிலேயே இயக்கத்தில் சேர்ந்தார்கள். ஆயினும் 2006இலிருந்து பலவந்தமாகவே பெண்களும் ஆண்களும் இயக்கத்தில் சேர்க்கப்படுகிறார்கள். பெற்றோரின் கதறலுக்கு மத்தியில் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள்.

பெண்களும், சிறார்களும் இயக்கத்தில் முக்கிய பங்கெடுப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

யுத்த  தர்மங்களில் ஒன்றுதான் பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாக்கவேண்டும் என்பது. பாதுகாக்கப்பட வேண்டிய இரு பிரிவினரையும் தமது படையில் இணைத்துக் கொள்வதை மனித உரிமைகளுக்கு எதிரானதொன்றாகவே கருதுகிறேன்.
அப்பாவி மக்களுக்கு எதிரான படுகொலைகளில் பெண் போராளிகளும் ஈடுபடுத்தப்பட்ட சம்பவங்களை அறிந்தபொழுது மிகவும் வெறுப்பு ஏற்பட்டது. இவர்களால் எப்படி பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ய முடிந்தது? மக்களைத் துண்டங்களாக வெட்டிப் பலி தீர்க்க எப்படி முடிந்தது? எந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு இவர்களுக்கு இனவெறியூட்டப் பட்டிருக்க வேண்டும்? என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது இயக்கத்தின் மீதான வெறுப்பு மேலோங்கவே செய் கிறது.
கொல்லப்படும் போராளிகளில் மிக இளம் வயதுடைய பிள்ளைகளையும் காண நேர்கையில் இந்தத் தலைமுறைமீது கவிழ்ந்துள்ள சாபத்தை எண்ணித் துயரப்படுவதைத் தவிர வேறெதைச்  செய்ய முடியும்?

தமிழ் இனப்பிரச்சினை குறித்து ஏதேனும் தீர்வை உங்களால் முன்வைக்க முடியுமா?

மன்னிக்கவேண்டும். தீர்வுகளை முன்வைக்கக்கூடிய எத்தகைய அரசியல் அறிவும் என்னிடமில்லை. ஆனால் ஒரு ஆயுதக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதன் மூலம் மக்களுக்கான தீர்வை வழங்கி விடமுடியாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொதுப்பிரச்சினை மக்களின் தீர்ப்புக்காக மக்களிடம் சமர்ப்பிக்கப் படவேண்டும்.
தமிழ் இனப்பிரச்சினை  மாத்திரமல்ல முஸ்லிம்களும் இந்தப் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளனர். மலையக மக்களுக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. தீர்வுகள் பற்றிப் பேசும்பொழுது இந்த மக்களுக்கான தீர்வு களும் முன்வைக்கப்பட வேண்டும்.

யுத்தத்தில் முஸ்லிம்களின் நிலை - நிலைப்பாடு - என்ன?

முஸ்லிம்கள் நடுநிலை வகிக்கவே விரும்பினர். அரசுடனும் அதேபோலப் புலிகளுடனும். ஆனால் இந்த நடுநிலைத் தன்மையை இரு தரப்புமே ஏற்கத் தயாராக இருக்கவில்லை. ஆரம்ப கட்டத்தில், குறிப்பாக, வடக்கு கிழக்கைச் சார்ந்த முஸ்லிம்களிடையே யுத்தத்துக்கான எதிர்ப்பு காணப்பட வில்லை. முஸ்லிம் இளைஞர்களும் இயக்கங்களில் இணைந்திருந்தனர். மக்களும் அதனை சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டமாகவே பார்த்தனர். ஆனால் 1990இல் முஸ்லிம்கள் மீதான புலிகளின் பாசிசம் மேலோங்கியது.

ஹிட்லரையொத்த இனப் படுகொலைகளை முஸ்லிம்கள் மீது மேற்கொண்டனர். காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் தொழுகைக்குச் சென்றிருந்த 100 இற்கும் அதிகமானவர்களைக் கொன்று குவித்தனர், போலீஸ் பிரிவில் கடமையாற்றிய கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களைக் கூட்டாகக் கொலை செய்தது, எல்லைக் கிராமங்களில் புகுந்து பச்சிளம் குழந்தைகள் உட்பட கண்ணில் பட்ட அனைவரையும் வேட்டையாடியது, வயல் நிலங்களில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் எனப் பல நூறு சம்பவங்களைப் பட்டியற்படுத்தலாம்.

இந்தப் படுகொலைகளெல்லாவற்றையும்  புலிகள் கிழக்கில் நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களைக் கொலை செய்வதில் பின்வாங்கினர். ஏனெனில் புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் இருக்கவில்லை. எனினும் புலிகள் இயக்க உறுப்பினர்களிடையே முஸ்லிம்கள்மீதான குரோதமும் வெறுப்பும் திணிக்கப்பட்டது. யாழ்ப்பாண முஸ்லிம்களை 2 மணித்தியாலங்களிலும் ஏனைய வட பகுதி முஸ்லிம்களை 48 மணித்தியாலங்களிலும் வெளியேறி விடும்படியான உத்தரவு விடுக்கப்பட்டதோடு புலிகள் செயற்படவும் தொடங்கினர். தம்மோடு எதையுமே எடுத்துச் செல்லக் கூடாது என்றும் கட்டளையிட்டனர். அங்கு தேடிய முஸ்லிம்களின் சொத்துக்கள் யாவும் தழிழீழத்துக்கே சொந்தமானவை என்று கூறி பணம், நகை அனைத்தையும் சூறையாடினர். கல்விச் சான்றிதழ்களைக்கூட  எடுத்துச் செல்லவிடாமற் கிழித்தெறிந்தனர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமது சொந்த நிலத்தை விட்டு தாம் வாழ்நாள் முழுதும் தேடிய அனைத்துச் செல்வங் களையும் இழந்தவர்களாக ஈவு இரக்கமின்றித் துரத்தப்பட்டனர். இன்று வரையும் அந்த மக்கள் அகதிகளாகவே வாழ்கின்றனர்.

2002இல் பிரபாகரனுடன் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் வைத்து வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. தற்போது அதைப் பற்றிக் கதைக்கத் தயாரில்லை என்றவாறான ஒரு பதிலைச் சொன்னதாக நினைவில் உள்ளது. முஸ்லிம் மக்களுக்கிருந்த மிகப் பெரிய கேள்வியைக் கடுகடுத்த முகத்துடன் பிரபாகரன் தட்டிக் கழித்தசெயல் அனைவரையும் அதிருப்திப்படுத்தியது.
(அந்த மாநாட்டில் அவர் எந்தக் கேள்விக்கும் சரியான பதிலை முன்வைக்கவில்லை என்பது சிங்கள ஊடகவியலாளர்களினதும் அபிப்பிராயமாக இருந்தது. ஒவ்வொரு கேள்வியின் பொழுதும் அவரது கண்கள் திருதிருவென விழித்தன.  அதிகமான கேள்விகளுக்கு அன்ரன் பாலசிங்கமே பதிலளித்தார்.  இதனால் போலியான ஒருவரையே அந்த மாநாட்டில் பங்குபற்றச் செய்திருந்தனர் எனச் சிங்களவர்கள் சந்தேகித்தனர்)
2002ம் ஆண்டு யுத்த நிறுத்தச் சூழ்நிலையில் கிழக்கில் மீண்டும் முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் அழித்தொழிப்புகள் உக்கிரம் பெறத்தொடங்கின. சிங்கள இனவாதம் அவர்களுக்குச் செய்ததையொத்த வன்முறைகளை புலிகள் இயக்கம் அப்பாவி முஸ்லிம்கள் மீது மேற்கொண்டது.
தற்போது கிழக்கில் ஜனநாயகச்  சூழல்  மலர்ந்துள்ளதாக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் அங்கு முஸ்லிம் மக்கள் தினந்தோறும் பாதிப்புக்குள்ளாகியே வருகின்றனர். தமிழ்-முஸ்லிம்  மக்களின் உறவு விரிசலடைந்தே காணப்படுகிறது.  தற்போது அங்கு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பிள்ளையான் குழு கொலைகளில் ஈடுபட்டு வருகின்றது. புலிகளினால் ஊட்டி வளர்க்கப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான குரோதம் அவர்களிடமிருந்து நீங்கவில்லை. இத்தகைய ஆயுதக் குழுக்களை அரசு தன்னோடு அரவணைத்துக் கொண்டுள்ளது.

சிங்களப் பேரினவாதிகள் எவ்வாறு தமிழ் மக்களின் உரிமை களுக்கு மதிப்பளிக்கவில்லையோ அவ்வாறே புலிகளும் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லை. அவ்வாறே அப்பாவி முஸ்லிம்களைப் படுகொலை செய்வதையும் நிறுத்திவிடத் தயாராக இல்லை. இந்நிலையில் பொதுவாக எல்லா முஸ்லிம் மக்களும் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றனர்.

நீங்கள் கவிதையெழுத எப்பொழுது ஆரம்பித்தீர்கள்?

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது 1988 அளவில் கவிதை எழுதத் தொடங்கினேன். ஆனால் படிப்பின்மீதுதான் கவனம் செலுத்தவேண்டும் என்ற கட்டுப்பாட்டினால் அதை விட்டுவிட்டேன். பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் 1995ம் ஆண்டளவில் இருந்து மீண்டும் எழுதத் தொடங்கினேன்.
தமிழீழப் போராட்டத்தில் இந்தியாவின் அணுகுமுறையை எவ்விதம் பார்க்கிறீர்கள் ?

இலங்கையில் காணப்பட்ட இனப்பிளவுகளைச் சாதகமாகக் கொண்டு இலங்கை அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு இந்தியா ஆரம்ப காலத்தில் செயற்படத்தொடங்கியது. அதனடிப் படையில் போராளிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து ஆயுதமும் வழங்கி இலங்கையரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைத்தது.

1985 ம் ஆண்டு காலப் பகுதியில் ஆயுதக் குழுக்கள் தமக்கிடையே சில கோரிக்கைகளை முன்வைத்து அதனடிப்படையில் கூட்டாகச் செயல்பட முடிவெடுத்தன. இந்தக் குழுக்களின் ஒற்றுமை இந்தியாவை அச்சப்பட வைத்ததனால் குழுக்களிடையே பல்வேறு பிளவுகளை உண்டாக்கும் செயலை இந்தியா செய்தது.

இதனடிப்படையிலேயே திம்பு பேச்சுவார்த்தையை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது சில ஆயுதக்குழுக்கள் இந்தியாவின் சதிவலைக்குள் சிக்கின. இதனால் இயக்கங்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு சிதைந்தது. இந்த நிலை இந்தியாவுக்குச் சாதகமாகிவிட அது மேலும் சில பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. இதன் பின்னணியிலேயே ராஜீவ் - ஜே. ஆர். ஜயவர்த்தன ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கைக்கு விரித்த சதிவலைக்குள் இந்தியாவே சிக்கிக் கொண்டது. இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தனது முகத்தில் கரி பூசிக்கொண்டது. இந்த வில்லங்கத்தில் அரசியல் முதிர்ச்சியற்ற ராஜீவ் காந்தியை இணைத்துக்கொண்டு இறுதியில் மரணத்தையும் தேடிக் கொடுத்தது.
தொடர்ந்தும் இந்தியா தனது சுயலாபங்களுக்காகவே இலங்கை அரசியலில் களமிறங்கும் செயலைச் செய்கிறது. இந் தியா பயிற்சியளித்து ஆயுதமும் வழங்கி போராட்டத்தைத் தொடக்கி வைத்த ஒரு அமைப்புக்கு எதிராக இப்பொழுது செயல்படுகிறது. தற்போது அது இலங்கை அரசுடன் இணைந்து கொண்டு அந்த இயக்கத்தை முற்றுமுழுதாக அழிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இந்தியா தனது நலனுக்கு எது சாதகமாக அமையுமோ அதைத்தான் செய்து வந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் குறித்தோ அவர்களின் பிரச்சினைகள் குறித்தோ ஒருபோதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அமெரிக்கா ஈராக்கில் சதாமுக்கு ஆயுதங்களை வழங்கி ஈரானுக்கு எதிராக அதனைத் து}ண்டிவிட்டு, பின்னர் அதே சதாமைக் கொன்றொழித் ததைப் போலவே இந்திய அரசும் இலங்கை விடயத்தில் நடந்து கொள்கிறது. இலங்கை மக்கள் மீதான எந்தக் கரிசனையும் இந்தியாவுக்கு இல்லை.

இந்தியா இந்நிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியா இதுவரையும் இலங்கை மக்களுக்காக எந்த நன்மை யையும் செய்துவிடவில்லை. இங்குள்ள இனவாத சிங்கள அரசி டமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியாதோ அவ்வாறே தற்போது அங்குள்ள அரசிடமிருந்தும் நாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது.

அதே நேரம் யார் சொல்வதையும் கேட்க மறுக்கும் திமிர் பிடித்த இலங்கை அரசு இந்தியா சொல்வதைக் கேட்டுவிடப் போவதில்லை. இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இனப் பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டத்தை, மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் பணியில் இறங்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை உலக நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு வழங்க வேண்டும்.

தனியொரு நாடாக இல்லாமல் பல நாடுகள் கூட்டுச் சேர்ந்து இதயசுத்தியுடன் இச்சிக்கலில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசையும் பேரினவாத பெளத்த பீடங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை உள்ள ஒரு சக்தியினால் மாத்திரமே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதும் நடைமுறைப்படுத்துவதும்  சாத்தியப் படக்கூடும். தற்போது அங்கிருக்கும் அரசு இதில் எதையும் செய்யாது என்பதை நன்கறிவோம்.

உயிர்நிழல்  இதழ் : 31
இந் நேர்காணல் ‘மாத்ரு பூமி’ என்கின்ற மலையாள வார இதழில் 04.05.2009 வெளியானது.  நேர்கண்டவர் ரி. டி. ராமகிருஷ்ணன்.

FM

FM

Popular Post

Powered by Blogger.

- Copyright © நிழலின் தடம் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -