Archive for February 2012

2011 : கலகக்காரர்களின் ஆண்டு






உலகப் புகழ்பெற்ற அமெரிக்க டைம் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அந்த ஆண்டின் சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து அவரை அட்டையில் பிரசுரித்து, நீளமான கவர் ஸ்டோரி எழுதி, கொண்டாடித் தீர்க்கும். கடந்த 80 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் வழக்கம் இது. ஏன் அவர், ஏன் இவர் இல்லை என்னும் ரீதியில் ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகள் குவியும். சென்ற ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஏன் விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே விடுபட்டார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.  டைம் பத்திரிகையின் ஆசிரியர் ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டியிருந்தது.

இந்த ஆண்டு அந்தப் பிரச்னை இல்லை. அட்டையில் அவரைக் கண்டதும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள். இத்தனைக்கும் அவருக்கு முகம் இல்லை. பெயரில்லை. நாடு இல்லை. மதம் இல்லை. வலது, இடது அரசியல் நம்பிக்கைகள் இல்லை. அவர் வயது, உயரம், நிறம், மொழி எதுவும் நமக்குத் தெரியாது. அவர் தனி நபர் அல்லர். அவர் ஒரு குழு. அவரே அதன் தலைவர், ஒருங்கிணைப்பாளர், தொண்டர், செயல் வீரர். அவர் ஒரு கலகக்காரர். என்பதால் அவர் அறியப்படுகிறார். என்பதால் அதுவே அவரது பெயரும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், துனீஷியாவில் சலசலப்பு ஏற்பட்டபோது முதல் முதலாக அவரை நாம் அறிந்துகொண்டோம். அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையால் திணறிக்கொண்டிருந்த அந்த நாடு கடந்த டிசம்பர் மாதம் அழுத்தம் தாளாமல் வெடித்துச் சிதறியது. அதற்குக் காரணமாக இருந்தவர், 26 வயது தெருவோர வியாபாரி மொஹமத் பொவாஸி. கடந்த டிசம்பர் 17ம் தேதி, மொஹமத் வழக்கம் போல் தன் வண்டியை உருட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஒவ்வொருமுறையும் சந்திக்கும் பிரச்னைதான் என்றாலும் இந்தமுறை அவர்கள் எல்லை மீறினார்கள். மொஹமத் தாக்கப்பட்டார். மேலதிகம், ஏசப்பட்டார். மேல்முறையீடு செய்து பார்த்து அதுவும் பயனற்று போகவே, தீக்குளித்து செத்துப்போனார்.

பெருகும் வேலைவாய்ப்பின்மை, உயரும் விலைவாசி, அரசு அடக்குமுறை என்று பல்வேறு பிரச்னைகளால் கொதித்துக்கொண்டிருந்த துனீஷியர்களை மொஹமத்தின் மரணம் கொதித்தெழச் செய்தது. அடுத்த நாளே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் திரள ஆரம்பித்துவிட்டார்கள். உடனே லத்திகளையும் கண்ணீர் புகைக் குண்டுகளையும்தான் தூக்கிக்கொண்டு ஒடிவந்தார்கள் காவல்துறை அதிகாரிகள். கட்டுப்படுத்திவிடலாம் என்றுதான் நம்பினார்கள். பதாகைகளை உயர்த்தியபடி லட்சக்கணக்கானவர்கள் இறங்கி நின்றபோது, கைகளை வீசி நடந்து வந்தபோது காவல்துறை மட்டுமல்ல அரசும் பின்வாங்கியது. அழுத்தம் தாளமாட்டாமல் இருபத்தெட்டு தினங்களில் அதிபர் பென் அலி பதவியைத் துறந்தார்.

துனீஷியா ஒரு தொடக்கம் மட்டுமே.  பிப்ரவரி மாதம், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிழந்தார். மார்ச் மாதம் பஹ்ரைனில் பரவிய போராட்ட அலையைக் கட்டுப்படுத்த மூன்று மாத எமர்ஜென்ஸி பிரகடனப்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் யேமன் அதிபர் அலி அப்துல்லா தாக்கப்பட்டார். பொறுப்புகளைத் துறந்தார்.

அமெரிக்காவில் நிதி நெருக்கடி உச்சத்தைத் தொட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிட்டு தனியார் நிதி நிறுவனங்களையும் பெரும் பணக்காரர்களையும் கைகொடுத்து தூக்கிவிட்டது அமெரிக்க அரசு. இதனை எதிர்த்து வால்ஸ்ட்ரீட்டில் தொடங்கிய தன்னிச்சையான முற்றுகைப் போராட்டம் விரைவில் அமெரிக்கா முழுவதும் பரவி, ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பாய்ந்து சென்றது. அலெக்ஸாண்ட்ரியா முதல் கெய்ரோ வரை; மாட்ரிட் முதல் ஏதென்ஸ் வரை; லண்டன் முதல் டெல் அவிவ் வரை; மெக்ஸிகோ முதல் இந்தியா வரை; நியூ யார்க் முதல் மாஸ்கோ வரை.

மொத்தத்தில் 2011 என்பது கலகக்காரர்களின் ஆண்டு. யார் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதையும் யார் இறங்கவேண்டும் என்பதையும் இவர்களே முடிவு செய்திருக்கிறார்கள். வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லாதபடி, ஒரே சமயத்தில் பல நாடுகளில், பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு குழுவினர் தன்னிச்சையாகப் போராடி தாங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள்.

இவர்கள் யார்? இவர்களை எப்படி வகைப்படுத்துவது? இவர்களை இயக்குபவர்கள் யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? இவர்களை யார் அணிதிரட்டியது? அசைக்கமுடியாத சக்திகளாக கருதப்பட்ட ஹோஸ்னி முபாரக்கும் பென் அலியும் இவர்களைக் கண்டு அஞ்சி பதவியிழக்கும் அளவுக்கு எப்படிப் பலம் பெற்றார்கள்? திரைப்படக் கலைஞர்களும் ஓவியர்களும் சிறு வணிகர்களும் வேலைவாய்ப்பற்றவர்களும் ஓவியர்களும் கதாசிரியர்களும் கூலிகளும் வீடற்றவர்களும் வயதானவர்களும் பெண்களும் மாணவர்களும் எப்படி ஓரணியில் திரண்டார்கள்? எப்படி கலகக்காரர்கள் ஆனார்கள்?

இவர்களில் சிலர் எம்.பி.ஏ பட்டதாரிகள். சிலர் மருத்துவர்கள். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இளைஞர்கள். பெரும்பாலானவர்கள் மத்திய தர வர்க்கத்தினர். பெரும்பாலானவர்கள் முதல் முறையாக ஒரு பொதுப் பிரச்னையை முன்னிட்டு வாசல்படியைத் தாண்டி வீதிக்கு வந்தவர்கள். இவர்களில் டைம் பத்திரிகையைப் பற்றியும் ஃபேஸ்புக் பற்றியும் ட்விட்டர் பற்றியும் அறியாதவர்கள் இருக்கிறார்கள். அவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் அத்தனை வேறுபாடுகளையும் கடந்து 2011ம் ஆண்டின் கலகக்காரர்கள் ஒன்றிணைந்ததற்கும் செயல்பட்டதற்கும் சாதித்ததற்கும் சில அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. இவர்கள் தங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அரசு, மக்களுக்கு விரோதமாகவே செயல்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக கண்டுகொண்டவர்கள். தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பும் பொருளாதார கட்டுமானமும் செயலிழந்துவிட்டதை ஒப்புக்கொண்டவர்கள். கட்டுப்பாடற்று ஊழல் பெருகியிருப்பதையும், ஊழலுக்கும் தங்கள் வாழ்நிலை தாழ்ந்துபோனதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதையும் புரிந்துகொண்டவர்கள். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்னும் வெற்று நம்பிக்கை இல்லாதவர்கள். கையாலாகாத்தனத்தை விட்டொழித்தவர்கள். முயன்று பார்க்கலாமே என்று முடிவெடுத்தவர்கள். எனவே வென்றவர்கள்.
Thursday, February 9, 2012

அம்பலம்



‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.
நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.
ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.
அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.
திரைகள் விலகின.
எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.
முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.
காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.
அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.
அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.
ஏன்?என்றேன்.
அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.
அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.
அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய
அம்பலம்.
கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.
அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.


(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)

இணைவைப்பு எனும் கற்பிதமும் ஏகத்துவ மெய்நிலையும்





''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை! என்கிறது இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்.
  
சுயமாக இருப்பவன். யாராலும் படைக்கப்படாதவன் இறைவன். அப்படி சுயமாக இருக்கும் படைப்பாளன் ஒன்றுக்கு மேல் இருந்திருந்தால் அவர்களிடையே போட்டி நிலவி உலகின் இயக்கத்தில் குழப்பம் விழைந்திருக்கும். அந்த  ஒற்றை ஒருவனான ஏகஇறைவனைத் தான் பிரம்மன், கர்த்தர், அல்லாஹ், ஹுதா, God என பல பெயர்களில் அழைக்கின்றோம்.






அந்த ஏகப்பரம் பொருளுக்கு இணையாக, போட்டியாக, பங்காளியாக இன்னொன்றை கருதுவதற்கு பெயர் இணை வைத்தல் (ஷிர்க்) எனப்படும். ‘ஷிர்க்’ என்பதற்கு இணைவைத்தல். பங்காளியாக்குதல் என்பது சொற்பொருள். அதாவது இறைவனுக்கு இணைவைத்தல். பங்காளியாக்குதல் என்பது அதன் பொருள்.


இணைவைப்பு எனும் கற்பிதம்


(நபியே!) அவர்கள் எவ்வாறு இறைவனுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்;. இதுவே தெளிவான பாவமாக இருப்பதற்கு போதுமானது. (அல் குர்ஆன் 4:50) 
இணைவைத்தல் என்பதை பொய். கற்பனை என்கிறது இறைவேதம். மனிதர்கள் இப்படி ஒரு பொய்யை கற்பனை செய்ய காரணம் என்ன? சற்று சிந்தித்து பார்ப்போம்.


வானம், பூமி இன்னும் பாதளத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்குத் தான் சொந்தம் என்கிறது இறைவேதம். மனித உள்ளம் என்பது ஓரிறை கொள்கையை ஏற்கும் இயற்கைத் தன்மையைக் கொண்டது. அதனால் அனைத்தும் இறைவனுக்குத் தான் சொந்தம் என்ற கொள்கையை ஏற்கக் கூடியது அதன் இயற்கையான அமைப்பு. ஆனால் கண்ணால் காணும் காட்சி அதற்கு மாற்றமாய் உள்ளது. பிரத்தியட்சமான பார்வையில் ஒவ்வொரு அடி நிலத்திற்கும், அதில் உள்ளவைகளுக்கும் தனித் தனியே எண்ணற்ற உரிமையாளர்களை பார்க்கின்றோம். எனது எல்லை என வானையும், கடலையும் கூட பங்கு போட்டு சொந்தம் கொண்டாடுகிறது தேசங்கள். இந்த நிலையில் இறைவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு அடி நிலம் கூட கண்களில் படவில்லை. கோயில்களும், பள்ளிவாயில்களும், தேவாலயங்கள் கூட அறநிலையங்கள், ஜமாத்துகள், மடாலயகுழுக்களுக்கோ இல்லை தனிமனிதர்களுக்கோ சொந்தம் என்ற நிலையில் தனக்கென ஓரடி நிலமின்றி இருப்பவனாக தென்படுகின்றான் இறைவன். 


ஓரிரை கொள்கைக்கு சாட்சி பகரும் உள்ளம்  இவையெல்லாம் இறைவனுக்கு சொந்தமானவை. இறைவனால் மனிதனுக்கு  இரவலாக (அமானிதம்) வழங்கப்பட்டவை என சாட்சி சொல்கிறது. ஆனால் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆதிக்கம் பெற்றவனாக சிருஷ்டிகளை காணும் மனம் மதிமயங்கி இறைவனின் தயவின்றி சிருஷ்டிகள் தான் தன் தேவைகளை நிறைவேற்றுகிறது என நம்புகிறது. அதனால் முற்றிலும்  சிருஷ்டிகளின் பக்கமே சாய்கிறது. 


செயல்படுவதால் தானே உரிமை நிலை நாட்டப்படுகின்றது. செயல்படுவதற்கு சக்தி தேவை. சக்தி அடங்கலும் இறைவனுக்கே உரியது. இறைவனைக் கொண்டே தவிர யாருக்கும் சக்தியென்பதே இல்லை என்ற ஓரிரை கொள்கைக்கு சாட்சி பகருகின்றது உள்ளம்.  


இல்லை. இல்லை கொடுக்கவோ, தடுக்கவோ சிருஷ்டிகளான இவர்களுக்குத் தான் உரிமையும் அதை தரும் வல்லமையும் இருக்கின்றது என்கின்றது கண்கூடாய் காணும் காட்சிகள்.


என் மீது இவர் பார்வை விழுந்தால்…...
என் கோரிக்கை இவர் காதுகளில் விழுந்தால்…
இவர் என் தேவையை அறிந்து கொண்டால்….
இவர் மட்டும் எனக்கு கொடுக்க நாடி விட்டால்….
இவர் எனக்கு தர சொல்லி ஒரு வார்த்தை சொல்லி விட்டால்….


என உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, கேள்வி, பார்வை, பேச்சு முதலிய பண்புகள் கொண்டு காட்சியளிக்கும் சிருஷ்டிகள் பக்கம் மனம் சாய்கிறது.


தருகின்றேன் என சொன்ன பணக்காரன் கொடுக்கும் முன்பே இறந்து போனதை பார்க்கின்றான். இப்படி தன் வாழ்வே தன் கைவசம் இல்லாதவன், இறந்து போக கூடியவனை நம்பி ஏமாந்து விட்டேனே என தவிக்கின்றது மனம். 


இறப்பே இல்லாத இறைவன் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான். உன்னை எப்போதும் பார்த்தவனாகவே இருக்கின்றான். உன் தேவைகளை அறிந்தவனாக இருக்கின்றான். நீ மனதால் அழைத்தாலும் கேட்கக் கூடியவனாக இருக்கின்றான். அவனிடமே கேள் என்கிறது உள்ளம். 


நான் பார்க்குமிடமெல்லாம் சிருஷ்டிகளே என் பார்வையில் நிறைந்திருக்க என் தேவைகளின் போது இறைவனை முன்னோக்க முடியவில்லை என பரிதவிக்கிறது மனம். பார்வைக்கு தூரமான இறைவனை விட்டு பார்க்க நெருக்கமாயிருக்கும் சிருஷ்டிகளிடம் சாய்கிறது. 
இவ்வாறு ஓரிறையிடம் உதவிதேடுவதை விட்டு பல்வேறு தெய்வங்களின் (இலாஹ்) பக்கம் உள்ளம் சாய்கிறது.


“நமது சகல கேடுகளுக்கும் மூலக்காரணம் இறைவனை விட்டுத் தூரமாகி கிடப்பதும், இறைவனல்லாதவற்றை பற்றிப் பிடித்து கொண்டிருப்பதுமேயாகும்” என கூறுகின்றார்கள் மெய்நிலைகண்ட ஞானி சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்).


இதை நன்கு மனதில் கொண்டு இதுவரை கூறியதை சிந்தித்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படும்.


சிருஷ்டிகள் சுயசக்தியில்லாதவை என உணரும் வரை அவைகளை பொருளாதாரத்தில் சுயஉரிமை பெற்றவைகளாகவே பார்த்தோம்.


இறைவனின் தயவில்லாமல் உயிர்வாழ முடியாதவை என்பதை உணரும் வரை சுயமான அறிவு நாட்டம் வல்லமை கொண்டு சுயமாக செயல்படுவதாக சிருஷ்டிகளிடம் ஆதரவு வைத்தோம்.


இவ்வளவுக்கும் காரணம் ஒரு அடிப்படை தவறு. அது தான் இணைவைப்பின் தலைவாசல்.
அது “சிருஷ்டிகள் சுயமாக இறைவனைவிட்டு தனித்த நிலையில் தன் தானே இருக்கின்றன” என்பது தான். 


சிருஷ்டிகள் ஒரு வினாடி கூட சுயமாக இருக்க முடியாதவை. அவைகளுக்கு இருப்பை வழங்கக் கூடியவன் அந்த சிருஷ்டிகளுடனிருக்கிறான் என்ற இறைநெருக்கத்தை உணராதவரை, கோடானு கோடியாய் நிற்கும் பன்மையை இடைவிடாமல் காட்டும் அவன் ஏகத்துவ ஒருமையை நெருக்கமாக உணரும் வரை இணைவைப்பதை விட்டு யார் தான் தப்ப முடியும்!.


ஏகத்துவம் எனும் மெய்நிலை


தவ்ஹீத் - ஏகத்துவம் என்பது தவஹ்ஹுத் ஒன்றுபடுத்துவது என்பதிலிருந்து வந்தது. அல்லாஹ் ஒருவன் (ONENESS OF ALLAH) என்பதல்ல தவ்ஹீத். அல்லாஹ் என்பது பலர் என யாரும் கூறவில்லை. தேவையை நிறைவேற்றும் இறைத் தன்மை (உலூஹிய்யத்) பல சிருஷ்டிகளில் காணப்படுகின்றது.  அந்த இறைத்தன்மைக்கு (உலூஹிய்யத்துக்கு) சொந்தக்காரனான இலாஹ் ஒருவன் (ONENESS OF ILAH) என்பது தான் தவ்ஹீத்.


ஏகத்துவ நம்பிக்கையின் அடிப்படையில் தன் பார்வையை ஆக்கிக் கொண்ட நம்பிக்கையாளர் “சிருஷ்டியே! நீ என் தேவையை சுயமாக நிறைவேற்றவில்லை. ஏனென்றால் நீயே சுயமாக இல்லை, அதனால் உன் தன்மைகளும் சுயமாய் இல்லை! உன்னில் காணப்படும் செயலாற்றலும், உடமைகளும் உனக்குச் சுயமாய் இல்லை. ஏதும் சுயமற்ற உன்னால் இறைவனின் தயவின்றி எந்தத் தேவையையும் நிறைவேற்ற முடியாது. உன்னுடனும், மற்ற சிருஷ்டிகளுடனும் தன் சொந்த உள்ளமையைக் கொண்டு ஏகமாய் உடன் இருந்து தன் தனித்த (unique) உள்ளமை, பண்புகள், செயல்கள், உடமைகளால் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவன் தான் உங்கள் போர்வையில் எனது தேவையை நிறைவேற்றியவன்” என எங்கும் சூழ்ந்திருக்கும் அவன் இறைத்தன்மையை ஒன்று படுத்துவார்.  இப்படி ஒன்றுபடுத்திக் காட்டும் Unity in multiplicity தான் நபிமார்களின் முதன்மையான பணியாய் இருந்தது.
0  0  0  0
சில வருடங்களுக்கு முன்பு துபாய் கோட்டை பள்ளியில் என் ஆன்மீக குருநாதரின் அன்பு மகனார் ஷெய்கு நூரானி ஷாஹ் ஃபைஜி ஹஜ்ரத் தௌஹீத், ஷிர்க் பற்றி உரையாற்றினார்கள்:


 “அல்லாவைத் தவிர யாரிடமும் கேட்க கூடாது என்பதல்ல தௌஹீத்.
அல்லாவைத் தவிர யாரிடமும் கேட்க முடியாது என்பதை உணர்வது தான் தௌஹீது” என்று.


onameen.blogspot.com
Wednesday, February 8, 2012

பசீர் சேகுதாவூத்தின் மீலாத் தின கவிதை




பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
யாரசூலல்லாஹ் யாஹபீபல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ் தென்றல் தலைவர்க்கு ஸலாம்!
தலைசாயா தலைவர்க்கு ஸலாம்!
தகைசார் எம்பிக்கு ஸலாம்!
தம்பி எம்பிக்கு ஸலாம்!
சங்கைமிகு சபையோருக்கு ஸலாம்!
யாவர்க்கும் ஸலாம்!
அறியாமைக் கோரமும் அண்ணலார் வீரமும்
நிரந்தரமான அமைதிக்காய்
நிரந்தரமாய் போர் புரியும்
உலகின் அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
திட்டமிட்டே மனிதத்தேவைகள்
தேவைக்கதிமாய் ஆக்கப்பட
தேவைக்கதிமாய் உழைக்கும்
தேவையற்ற அவதிக்கு ஆளான
பொருளியல் அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
பரபரப்பும் பதட்டமும் தொற்றிக்கொள்ள
மனிதன் தனிமைக்குள் அகப்பட்டு
சமூக இயந்திரத்தின் உதிரிப் பாகங்களாய்
ஆகிவிட்ட அகிலத்தின் அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
சந்தேகிப்பதே மனித பாக்கியமென அறிந்துள்ள
பகுத்தறிவின் அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
மனிதர் சுதந்திரமாய் நடமாட என்றுள்ள வீட்டை
தளவாடங்கள் நிறைத்து சிறைக்கு நிகர் செய்து
பண்ட நுகர்வு வெறி தலைக்கேறி
அறியாமைக் கோரத்துள் வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
மாணவக் கொள்கலன்களுக்குள்
அதிகமாய் நிரப்புவோர் நல்லாசிரியர்
நிரப்புவதை எளிதாய் ஏற்போர் நல் மாணாக்கர்
ஆசானுக்கு எல்லாம் தெரியும்
மாணவர்;க்கோ ஏதும் தெரியாதென்ற
சேமிப்புக் கிடங்குக் கல்விமுறை
அறியாமைக் கோரத்துள்
வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
அறிந்தவற்றின் அறிவைப்பற்றிய செருக்கை அழித்து
அறியாதவற்றின் அறியாமையை ஏற்கும் கருத்தைப் புறந்தள்ளும்
அறிவுலக அறியாமைக் கோரத்துள் வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
“நான்” வெற்றிகொண்ட “நீ”யை வெறும் “அது”வாக்கி
நானின் இருப்பை சாத்தியமாக்குவதே
நானல்லாத “நீ”தான் என்பதையும்
அந்த “நீ”க்கும் ஒரு “நான்” உண்டு என்பதையும்
உணர்வதே வீரம் என்றுணரா
அறியாமைக் கோரத்துள் வாழுகிறேன் யாரசூலல்லாஹ்!
நிரந்தரமான அமைதிக்காய்
நிரந்தரமாய்; போரை நிறுத்தும் மார்க்கத்தை
உங்கள் மார்க்கத்தின் முகமனிலே தந்தீர்
அஸ்ஸலாமு அலைக்குமென யாரசூலல்லாஹ்!
நான் என்பது எனக்குள்ளில்லை – அது
எனக்கு வெளியில் கிடக்கும் சொத்தெனச் சொல்லி
வீரம் விளைவித்து வாழ்ந்தீர் யாரசூலல்லாஹ்!
பொங்கி எழுவோர் பொருதிச் சாவோர்
சந்திரனில் செவ்வாயில் மற்றும் கோளங்களில்
ஆயுதக் கிடங்கிற்கிடம் தேடும் வல்லோர்
இவரெல்லாம் வீரரல்லர்
பொறுமை காப்போரே வீரரென்று போற்றி வாழ்ந்தீர் யாரசூலல்லாஹ்!
நிச்சயமில்லா உலகின் நிச்சயத்தை வலியுறுத்தி
அறிவிழந்தோர் வாழ்ந்திருந்த காலத்தே
நிச்சயமாய் இவ்வுலகு நிச்சயமற்றதென்றோதி
அச்சமற்று வாழ்ந்த வீரர் நீரே யாரசூலல்லாஹ்!
பத்ருப் போரில் ஆயிரத்தை
முந்நூற்றிப் பதின்மூன்றால் முறியடித்து
கையிலேந்தும் வாளிலில்லை வீரம் – அது
நெஞ்சிலேந்தும் ஈமானில் உள்ளதென
நிரூபித்து வாழ்ந்தீர் யாரசூலல்லாஹ்!
கஃபத்துல்லாவிற்கு கல் வைக்கும் கலவரத்தை
போர்வை நுனியால் அடக்கி
விட்டுக்கொடுப்பும் மதிநுட்பமும் வீரமே என
விதிசெய்து வாழ்ந்தீர் யாரசூலல்லாஹ்!
தற்காலிக தலைமறைவும்
தக்க வீரமே என தகையிட்டீர்
தவ்ர் குகையில் யாரசூலல்லாஹ்!
வீரத்தின் பிறிதொரு பரிமாணம் புலப்பெயர்வெனவும்
புகலிடத்தில் அரசமைப்பது வீரத்தின் உச்சமெனவும்
மதீனத்து மாநகரில் காண்பித்தீர் யாரசூலல்லாஹ்!
உடன்பட முடியாத விடயத்தை
உடன்படிக்கை முடித்துவைக்கும் எனும் தத்துவத்தை
ஹ_தைபியாவில் தந்துவைத்தீர்
தந்திரத்தை, உபாயத்தை
வீரமெனக் காட்டிவைத்தீர் யாரசூலல்லாஹ்!
நான் வாழும் காலத்தின் அறியாமைக் கோரம் அழியும்
என்றென்றைக்குமாக அண்ணலார் வீரம் தெளியும்
எப்போது?
அல் குர்ஆன் ஒதுபவர்க்கானதல்ல – அது
பயன்படுத்துவோர்க்கானது என்றாகும்போது!
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
ஸல்லல்லாஹ_ அலைஹிவஸல்லம்
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
யாரப்பீ ஸல்லி அலைஹி வஸல்லிம்!!

Lankamuslim.org


கலங்கரை


கலங்கரை சிறுகதை
அருண் காந்தி

வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருந்தது.கடைக்கு நேரே மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலின் மைக் செட் அலறலில் கடைக்கு வந்தவர்கள் கத்திக் கத்தி சாமான்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.ஜகுபர் அலியும் அவரது தம்பி கனியும் பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.சரக்கு கொண்டுவந்த கலைமான் புகையிலைக்காரரும் குளிர்பான ஏஜெண்டும் கம்புக் கூட்டில் பையும் காதில் சொருகிய பேனாவுமாக காத்திருந்தனர்.

ரெண்டு கிலோ அரிசி,பாலிதீன் பையில் கட்டிய எண்ணெய்,உருட்டிய புளி,அரை கிலோ தக்காளி வாங்கிய மாரியம்மாள் ஆத்தா கடையின் கூட்டத்தில் இடைஞ்சல் செய்த பொடிசுகளைத் திட்டிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.மேலே கொக்கியில் தொங்கிக் கொண்டிருந்த இந்த முறை புதிதாக வந்திறங்கியிருக்கும் வெள்ளை ரொட்டியைப் பார்த்துக் கொண்டே அடுத்த சாமானை சொல்ல மறந்த பொடியனைக் கோவத்துடன் அதட்டினார் ஜகுபர் அலி.

"வீடு இருண்டு கெடக்கு, சீக்கிரம் குடுப்பா மண்ணெண்ணைய..."என்று கனியிடம் சிறிய கேனை நீட்டினாள் பெலோமினா. இந்த அமளிக்கிடையே கூட்டத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கிழவன், "தம்பி ஒரு கட்டு செய்யது பீடி குடுப்பா...ஒருகட்டு செய்யது பீடி..." என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததை இருவரும் கண்டுகொள்ளவில்லை. கோவத்தில் ஏதோ முணங்கிக் கொண்டே திரும்பி நடந்தவரை நடை மறித்து அழைத்தான் ஜகுபர் அலியின் தம்பி.

இருள் கவிழத் தொடங்கிய அந்த நேரம் காற்றின் இதம் கூடியிருந்தது. எழில் மிகு கிழக்குக் கடற்கரைச் சாலை நன்றாக குளிர்ந்திருந்தது.மணிமாறன் பழுது பார்க்கப்பட்ட வத்தயினை மாட்டு வண்டியில் கட்டி இழுத்துக் கொண்டு கடலுக்குச் செல்லும் சாலையில் சென்று திரும்பினான். உலகம் சுற்றும் ஒரு வெள்ளைக்காரத் தம்பதி கிழக்கு கடற்கரைச்  சாலை வழியே சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர். கையில் புத்தகம் தாங்கிய இரண்டு சிறுவர்களை அரவணைத்துக் கொண்டு அந்த சாலைக்குக் குறுக்கே நடந்து வந்த லெப்பை எதிரே உள்ள பள்ளிக்குள் நுழைந்தார்.அவர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் பள்ளி வாசலின் மேல் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி ஒலிக்கத் துவங்கியது. கடைக்கெதிரே உள்ள நிறுத்தத்தில் ஏர்வாடி செல்லும் ஆறே கால் மருது பாண்டியருக்கு இரண்டு மூன்று பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்துக் கொண்டிருந்தனர்.எப்பொழுதும் நாகூர் செல்லும் வண்டிக்கு முன்பே வந்துவிடும் ஏர்வாடி வண்டி அன்று அந்நேரத்திற்கும் வரவில்லை.ஆற்றாமையில் அதில் ஒரு பெண் மருது பாண்டியரை சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருந்தாள்.சிறிது நேரத்தில் ஆறே முக்கால் ராமேஸ்வரம் வண்டியே வந்துவிட்டது.அவர்கள் ஏறிய அந்த வண்டியை விட்டு இறங்கிய வேலு அதே கையோடு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு விறுவிறுவென கடற்கரைக்குச் செல்லும் சாலை வழியே நடக்கத் துவங்கினான்.

வழக்கமான திடீர் மின்சாரத் துண்டிப்பால் அடுத்த சில நொடிகளில் மைக் செட் தன் வாயைப் பொத்திக் கொண்டது.பேருந்து நிறுத்தத்தின் அருகேயுள்ள கொடி மரத்தின் கீழ் அமைந்த சிறு மேடையில் அமர்ந்து மணியும் பஷீரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தது அப்பொழுதுதான் அந்த சுற்றத்தின் காதுகளில் விழுந்தது. நடுக்கடலில் நாகூர் பிச்சையின் வலை அறுந்து போன கதையை மணி அச்சு பிசகாமல் பஷீரிடம் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னிடம் நூற்றி ஐம்பது ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் முருகேசனைக் கண்டபடி திட்டிக் கொண்டே அவ்விடத்தைக் கடக்கிறான் ரெத்தினம். கள்ளு இறக்கப்படும் பனஞ் சாரிகளுக்கருகே சுண்டல் விற்கச் சென்ற ஜமீல் முழுவதையும் விற்றுவிட்டு வழக்கம்போல மெதுவாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீடு திரும்பிச் செல்கிறார்.

கடல் காற்று கவுச்சியை வீடு வீடாகக் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தது.முகம் தெரியாத அந்த இருட்டில் புயல் கட்டிடத்திற்கு முன்பாக மெத்தை போல விரிந்து கிடந்த குறு மணலில் இருந்து "கடவுள் ஏன் கல்லானான்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே..." பாடல் இயல்பான குரலில் ஒலிக்கத் துவங்கியது.அந்தப் பாடலுக்கு ஏற்றாற்போல அவ்விடத்தில் பீடியின் கங்கு இருட்டில் ஆடிக் கொண்டிருந்தது.திடீரென

"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா?

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை..."

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..."பாடல் முந்தைய பாடலை விட உணர்வுப் பூர்வமாக காளிமுத்துவின் பிசிறில்லாத குரலில் ஒலித்தது.

கடலில் தனக்கு நல்ல பாடு வந்த நாட்களிலெல்லாம் அந்த இடத்தில் காளிமுத்துவின் பாட்டு ஓங்கி ஒலிக்கும். டி.எம்.எஸ்.ஸும் எம்ஜியாரும் ஒருங்கே இணைந்த அற்புதன் காளிமுத்து.தினமும் மாலை அந்த மணலில் சிறிது நேரம் சாய்ந்தால்தான் அன்று காளிமுத்துவிற்குத் தூக்கம் வரும்.அந்த நேரங்களில் அருகில் வராமலேயே இருளில் படுத்திருக்கும் காளிமுத்துவிடம் சேதி பேசிக் கொண்டு மக்கள் சாலை வழி நடந்து செல்வார்கள்.செல்லையாக் கோனார் பொதுவிடத்தில் உள்ள பட்டியில் தன் ஆடுகளை அடைக்க மேய்த்து வந்த நேரம் மணல் விரிப்பில் அந்த பீடிக் கங்கைக் காண முடியவில்லை.தொலைவில் நடந்துகொண்டிருந்த காளிமுத்து அடுத்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருந்து மறைந்து போனார்.காளிமுத்து சென்ற சிறிது நேரத்தில் புயல் கட்டிடத்தைச் சுற்றி படுத்திருந்த மாடுகளில் ஒன்று மெதுவாக நடந்து சென்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் படுத்தது.நேரம் செல்லச் செல்ல ஏனைய மாடுகளும் ஒவ்வொன்றாக அதன் பக்கத்தில் சென்று படுத்தன. மாடுகள் இரவில் வீட்டிற்குப் போவதென்பதும் அவற்றைக் கட்டுதல் என்பதும் அங்கே வழக்கத்தில் இல்லாத ஒன்று.

அந்த முன்னிரவின் பிந்திய வேளையில் தெற்கிலிருந்து வேளாங்கண்ணிக்கு அந்த நீண்ட நெடிய சாலை வழி நடந்து செல்லும் புனிதப் பயணிகளின் ஒரு குழு இரவில் அங்கே உறங்கிச் செல்ல இடம் பார்த்துக் கொண்டிருந்தது.முடிவாக இடிந்துபோன சத்திரத்தின் அருகில் உள்ள பழைய பெருமாள் கோவில் திண்ணையில் சென்று அமர்ந்து, கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்தனர். ஜகுபர் அலி கடையை மூட ஆயத்தமானார்.அந்நேரத்தில் சாலை வழியே பரட்டைத் தலை மற்றும் சிறு துணி மூட்டையுடன் மனம் பிறழ்ந்த பெண் ஒருத்தி மெதுவாகச் சென்று கொண்டிருந்தாள். கடையின் பலகைகளை அடைப்பதில் மும்முரமாக இருந்த ஜகுபர் அலி சத்தமில்லாமல் அவள் தன் பின்னே வந்து நின்றதைக் கவனிக்கவில்லை. திரும்பியவர் திடுக்கிட்ட வேளை அவள் கையை நீட்டி வராத குரலில் எதோ பேச முற்பட்டாள். சட்டென்று புரிந்தவராக பலகைக்குப் பின்னே கையை விட்டு இரண்டு வாழைப் பழங்களைப் பிய்த்துக் கொடுத்தார். கையை உயர்த்திக் கும்பிட்டவள் மெதுவாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தாள். அவளைப் போன்றவர்களுக்கும் ராமேஸ்வரம் செல்லும் சாமியார்களுக்கும் அந்த சாலையில் உள்ள எல்லா வீடுகளும் சொந்தங்களே. அவர்கள் நினைத்த இடத்தில் உண்டு தங்கி தங்கள் பயணத்தைத் தொடர்வர்.

வடக்கிருந்து வந்த லாரி ஒன்றின் வெளிச்சத்தில் சாலையில் படுத்திருந்த மாடுகளின் கண்கள் மின்னின.ஹாரனுக்கும் விலகாத மாடுகளைக் கிளீனர் இறங்கி விரட்டியதும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.கடையைப் பூட்டிய ஜகுபர் அலி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.அமைதியான அந்த இரவில் தொலைவே செல்லும் அந்த லாரி சக்கரத்தின் பட்டன் சவுண்ட் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.மீண்டும் அதைப் போன்ற ஒரு அழகிய நாளுக்காக கலமும் கடலும் கரையும் காத்துக் கொண்டிருந்தது.

சம்பத்து


சம்பத்து சிறுகதை

ஆத்மார்த்தி



எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.என் அம்மாவுடன் சிறுவயதுகளில் எப்பொழுதெல்லாம் நன்னிலத்தில் உள்ள என் மாமா வீட்டுக்கு போகிறேனோ அப்பொழுதெல்லாம் அவர்களின் எதிர் வீட்டின் திண்ணையையே பார்த்து கொண்டிருப்பேன்.திடீர் என ஒரு ஓலம் கிளம்பும்.

அந்த வீட்டின் கதவு திறக்கப்படும். அங்கிருந்து ஒரு நாற்பத்ததைந்து வயது மதிக்க தக்க அம்மாளை ஒரு உருவம் தன்
ஒற்றை கையினால் அவள் ஓடி விடாமல் அவளது தலைமுடியை கெட்டியாக பிடித்துக்கொண்டு மறு கையில் இருக்கும் மரக்கிளை அல்லது குச்சியால் அவளை அடித்து இழுத்து வாசலில் தள்ளும் காட்சி...அடிப்பது யார் என்றால் சம்பத்து.!!

ஒரு முறை நாலு வீடு தள்ளி இருக்கும் குழந்தசாமி வாத்தியார்,சிறு வயதில் அவனுக்குபாடம் எடுத்தவர்,மனசு கேட்காமல் அவனருகில் போய் ரெண்டு சாத்து சாத்தி
"அம்மாவை..?பெத்த அம்மாவை..அடிப்பியாடா..?ராஸ்கல்....?அடிச்சே...கொன்னுடுவேன் படவா.."என்று அதட்ட...பயந்து போனவனாய் சம்பத்து..
"புத்தி சார் புத்தி....இனி செய்யலை.." என சொல்லி விட்டு எச்சில் ஒழுக கிளம்பி வேகமாய்ஊர் கடை வீதி பக்கம் போய்ப் படுத்து கொண்டானாம்.ரெண்டு நாளாகியும் வரவில்லை என அவன் அம்மா அலமேலு தேடி கொண்டு போய் பார்க்க...
அங்கே கலங்கிய விழிகளுடன் படுத்து கிடந்தவனை கிளப்பி கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்.அவனும் அதற்கு பிறகு ஒரு வாரம்..இல்லை பத்து நாளைக்கு ரொம்ப சரியாகவேநடந்து இருக்கிறான்.யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை.

"அன்னிக்கு குழந்த சாமி சார் அடிச்சது,என்னமோ..அதுலருந்து ஒழுங்கா தான் இருக்கான்..அம்மா...காமேச்வரி....இவன் இப்படியே ஒரு உருப்படியா இருந்துட்டான்னா....போறும்..நான் ஆயுசை தள்ளிடுவேண்டி அம்மா..."என வேண்டிக்கொள்ளும் அளவுக்கு.அதற்கு மறு நாள் ஆற்றில்
குளித்து கொண்டிருந்த குழந்த சாமி சாரை தன் கையில் உள்ள கொம்பால் அடித்து விளாசியபடியே மூணு தெரு தள்ளி இருக்கும் அவர் வீட்டு வாசல் வரை விரட்டியே வந்து இருக்கிறான்,சம்பத்து.

அதன் பின் அவனை அந்த ஊரில், யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை.
பாஅவம் குழந்த சாமி சார் தான்...அவர் அவன் அடித்ததிலிருந்து கூட மீண்டு வந்து விட்டார். ஆனால் அவரை அவன் 3 தெருக்களுக்கு விரட்டியே வந்தது அவரை மிகவும் பாதித்து...அவர் தூக்கத்திலெல்லாம் உடம்பு தூக்கி வாரி போடுவதாக சொல்லி பயந்து சின்னகுழந்தையாகவே மாறி அழவே அழுதார்,தன்னை சீக்கு விசாரிக்க வந்த தெருக்காரர்களிடம் என்பது வரை.. சம்பத்து..என் பால்ய காலத்தில் என்னை பயமுறுத்தி வசீகரித்த ஒரு எதிர்மறை நாயகன். இப்பொழுது யோசித்து பார்த்தால்,சம்பத்து ஒரு பெயர் தெரியாத மன நோயின் பிடியில் இருந்த ஒரு நோயாளி என்பதும் அவன் செய்கைகள் எல்லாமும் அவனுக்குள் இருக்கும் ப்ரச்சினையான
மன் நிலையின் விளைவுகள் எனபதெல்லாம் எனக்கு சற்றும் புரியாத வயது எனக்கு.

என் அம்மா என்னை எப்பொழுதுமே மாமா வீட்டுக்கு செல்லும் தருணங்களில்
 எல்லாம் என்னை உள்ளேயே வைத்திருக்க விரும்புவதும்,அதனாலேயே நான் சம்பத்து என்ன செய்கிறான் என பார்க்க விழைவதும்,சம நேர நிகழ்வுகளாயின.

ஒரு முறை அம்மாவிடம் கேட்டேன்."ஏம்மா..?இந்த சம்பத்து யாருக்குமே பயப்படமாட்டானா..? அம்மா அங்கலாய்ப்பான குரலில் சொன்னாள் ""எங்க..?பன்னண்டு வயசு வரைக்கும் சாதாரணமா இருந்தவன் அப்புறம் கொஞ்சம்  கொஞ்சமா இப்படி ஆயிட்டான்.அவன் யாருக்கும் பயப்பட மாட்டான்னாலும் அவனுக்கு அடுத்த தம்பி சுந்தரம்,இப்போ தஞ்சாவூர் ல படிக்கிறான்.அவனுக்கு மட்டும் அடங்குவான்.சுந்தரம் இவனை அடிச்சுறுவான்..அதுமில்லாம சம்பத்தும் அவன் தம்பி இருந்தாலே
ரொம்ப சாந்தமா நடந்துப்பான்."

அவனை பற்றிய எதாவது ஒரு வினோத சம்பவம்,அதனால்,அவனால் பாதிக்க பட்டவர் அடைந்த துயர்,செவி வழி செய்தியாக அவ்வப்பொழுது எங்கள் வீடு வரை வராமல் இருப்பதில்லை.எங்கள் வீட்டுக்கு மாமாவோ அல்லது மாமியோ வரும் பொழுதுகளில் சற்று விவரித்த நிகழ்வுகளும் கிடைக்கும்.என் அப்பாவாவது அல்லது அம்மாவாவது சொந்த விஷயங்களை பேசி, ஒரு சின்ன மௌனம் நீடிக்கும் இடைவேளைகளைக் கையாள சம்பத்து பற்றிய பேச்சை எடுப்பார்கள் மாமாவும் மாமியும் காத்திருந்தாற் போல,சம்பத்தின் சமீபத்திய சாதனைகளை சொல்லி சிரிப்பர்.

சம்பத்து மேலத்தெரு சண்முகம் பிள்ளை வீட்டுக்கு பெண் பார்க்க வந்தவர்களை ஊர் எல்லையில் நிறுத்தி அதில் இருந்த ஒரு ஒல்லி மனிதரின் காதை பிடித்து நாலைந்து  முறை திருகிவிட்டான் என ஒரு முறையும்,பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டு பெண்டுபிள்ளைகள் சாமியப்பன் தோப்பு வழியாக வரும் போது சம்பத்து புளிய மரத்தின் வாகான கிளையொன்றில் இருந்து 'தொப்' என
அவர்களின் முகத்துக்கு முன்பாக தரையில் குதித்ததில் கோடித் தெரு கணேசய்யர் பெண் அகல்யா மயக்கமடைந்ததாகவும்,அதற்கு நியாயம் கேட்க போய் சப்தம் போட்ட கணேசய்யரின் சைக்கிளை தொடர்ந்து பத்து நாளைக்கு காற்றிறக்கம் செய்து பழி தீர்த்தான் எனவும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மாமா சொல்லுவார்
"அதற்கப்புறம் இன்னிக்கு வரைக்கும் காத்தடிக்க பம்ப் எடுத்துக்காம அவர் வெளில போறதே இல்லை.": நான் அப்பாவியாக.."யார் மாமா..?சம்பத்தா..?"
அட்டகாசமாக சிரித்த படி மாமா சொல்வார்"கணேசய்யர் டா..".

ஒரு நாள் நானும் என் அக்கா கோமூ என்ற கோமதியும் என் அப்பா வெளியில்சென்று இருந்த நேரம் வீட்டு காரியங்களை முடித்து விட்டு அம்மா வந்து ரேழியில் சாய்ந்த பொழுதுகேட்டோம்."அம்மா,இந்த சம்பத்து ஏம்மா இப்படி ஆனான்..?ஏதோ சாபம்னு அன்னிக்கு மாமி சொன்னாள்ல..?" அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.பிறகு சொன்னாள்.

வைதீக காரியங்களை எடுத்து செய்வதில் பெயர் போனவரும்,வேத வ்யாக்யானங்களில் பெரும் பண்டிதருமான சாம்ப மூர்த்தி அய்யரின் வாரிசுகளில் தங்கிப் பிழைத்த ஒரே மகன் சீனுவாசன், சுதந்திரத்துக்கு உடனடி பிற்காலத்தில் சிங்கப்பூர் சென்றுவிட்டார் திரவியம் தேட. அவர் வெளி நாட்டில் தொடர்சியாக தங்கியிருந்த காலத்தில் அவரது மூன்று மகன்களில் மூத்தவரான சிற்சபேசன்,அதாவது சம்பத்து மற்றும் சுந்தரத்தின் பெரியப்பா,அவருக்கு மட்டும் லலிதாவுடன் திருமணம்
ஆகியிருந்ததாம்.அந்த லலிதா பார்ப்பதற்க்கு மங்களகரமாக இருந்தாலும்,கொடுசூலியாம்.

அளவுக்கு அதிகமாய் சீனுவாசன் சம்பாதித்து அனுப்ப கால் மீது கால் போட்டு அவரது மகன்கள் சீட்டு கச்சேரி,ட்ராமா,டான்ஸ் என போகத்தில் திளைக்க,அவர்களை கேட்பாரில்லையாம்.

தனது மூப்புக்காலத்தில் இருந்த சாம்பமூர்த்தி அய்யரை பலவிதங்களிலும் உதாசீனம் செய்தும்,கவனியாது விட்டும்,கடைசியில் தவித்த வாய்க்கு தண்ணீர் தர கூட செல்லாமல் அவர் உயிர் பிரியும் வரை கொடுமை செய்தாளாம் லலிதா.ஆளுக்கொரு வேலையில் மும்முரமாக இருந்த பேரன்களும் அவரை சென்று பார்க்க கூட இல்லையாம்.

அதில் இருந்து,சீனுவாசன் திரும்பி வந்ததும்,அவர் கண் எதிரேயே பாகப்பிரிவினையில் தொடங்கி,சாம்ப மூர்த்தி அய்யரின் வாரிசுகள் ஒவ்வொருவர் வீட்டிலும் மனநல பாதிப்பு என்பது வழிவழியாக தொடர்கிறதாம்.

அதற்கு பிறகு ரெண்டு வருடம் கழித்து ஒரு முறை வீட்டுக்கு வந்த மாமாவும் மாமியும் பேச்சு வாக்கில் சொன்னார்கள்.அரசாங்கத்தில் உத்யோகம் கிடைத்த சம்பத்துவின் தம்பி சுந்தரத்துக்கு கல்யாணத்துக்கு பார்க்கிறார்கள் எனவும்,எந்த ஜாதகமும் அமையவில்லை எனவும் சொல்லினர்.அத்துடன் இணைப்பாக,தற்பொழுது சம்பத்து கோவிலுக்கு தவறாமல் சென்று விடுகிறான் எனவும், அவனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை எனவும்,சும்மா வே உட்கார்ந்து கொண்டு ப்ரகாரங்களில்  ஸ்லோகங்களை முணுமுணுப்பதோடு சரி எனவும் சொல்லி என் அக்காவை அவனுக்கு பார்க்கலாமா எனக் கேட்டதற்க்கு "அந்த கிறுக்குபய குடும்பத்துக்கா...?"என என் அப்பா மாமாவுடன் சண்டைக்கே போய் விட்டார்.

அதற்கு பிறகு நான் கல்லூரி படிப்புக்காக வெளியேறி,பிறகு அமெரிக்கா சென்று, ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் பத்து நாள் விடுமுறையில் வந்து அவசரமாக மும்பை சென்று பெண்பார்த்து, திருமணம் செய்து,இரண்டு நாள் தேனிலவுக்காக கொடைக்கானல் சென்று வந்து, கிளம்பியும் கிளம்பி ஃபிலடெல்ஃபியாவில் வந்து குதித்து,நல்லது. கல்யாணவாழ்வில் திளைத்து கொண்டிருந்தேன்.

ஒரு அமெரிக்க முன்மாலையில்,அதாவது நம்மூரின் அதிகாலையில்,
இண்டெர்னெட் காலில் வெகு  நாளைக்கு அப்புறம் வெகு நேரமாய் என் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்தபொழுது கேட்டேன்..

"அம்மா...மாமா மாமி யாரும் வந்தாளா..?சம்பத்து எப்ப்டிம்மா இருக்கான்..?கேட்டியா..?
"உனக்கு தெரியாதில்லியா ரகு..?சம்பத்து இப்போ நல்லா ஆயிட்டாண்டா.....அவன் அம்மவோட கும்மோணம் போய்ட்டான்.இப்போ ஒரு ரைஸ் மில்லுல வேலை பாக்கறாண்டா.."

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.மகிழ்ச்சியாகவும்தான்.என் சின்ன வயதிலிருந்து தொடர்ந்து நான் ஏன் கவனித்தேன் என தெரியாமலேயே சம்பத்துவை தொடர்ந்து வந்ததற்கு,இந்த சுபமான க்ளைமாக்ஸ் எனாக்கு திருப்தியே.

..சரி உனக்கெதுக்கு இதெல்லாம்...காசிக்கு போனாலும் கர்மம் விடாதும்பா..நீ தான் அமெரிக்கா வரைக்கும் போயிருக்கியே..?"சம்பத்து பத்தியே எப்ப பாத்தாலும் பேசிண்டு.."
               
அப்பொழுதைக்கு அம்மா சொன்னது எனக்கு சரியாகவே பட்டது....ஆமாம்..எனக்கென்ன..?

ஒரு ஒற்றை மனிதனை..சம்பத்து என்ற பெயர்  அறிமுகமான கணத்திலிருந்து இன்றைக்கு வரை கிட்டத்த்தட்ட பதினைந்து வருடங்கள் தொடர்கதை படிப்பது போல. அவ்வப்பொழுது அவன் தகவல்களை புதுப்பித்து இருக்கிறேன்.இனி சம்பத்து வை பற்றிய அக்கறை எனக்கு குறைந்து போகலாம்.

ஆனால்.. இதை சாம்ப மூர்த்தி அய்யரின் சாபம் என சொல்லும் என் அம்மா போன்றவர்களின் பழமைவாத கட்சியையும் நான் ஆதரிக்கவில்லை.பரம்பரை தொடர் வியாதி என சொல்லும் என் மருத்துவ நண்பர்களையும் என் மனம் ஒத்துக் கொள்ள வில்லை.?ஒன்று மட்டும் நிச்சயம்.ஒரு வேளை சம்பத்து இந்த பிரச்சினை இல்லாமல் இருந்து இருந்தால்,என் அக்கா கோமு வுக்கு சுந்தரம் கணவனாயிருப்பார்.நல்ல அழகன்.
அராசாங்க உத்யோகம்.நல்ல ரசனை.எனக்கு இப்பொழுது வாய்த்திருக்கும் அத்திம்பேர் ஒரு முசுடு.அவருக்கு பதிலாக சுந்தரம் நல்ல பொருத்தமான தேர்வாகியிருப்பார்.இது தான் கடவுளின் ட்விஸ்ட்.

ஆனால்,இந்த கதையில் யாருக்கும்,என் அம்மா உள்பட யாருக்குமே தெரியாத ஒரு நிஜமான ட்விஸ்ட்..எனக்கு ஃபிலடெல்ஃபியாவில், நானும் என் மனைவியும் அவரவர் பழைய புகைப்படங்களை எங்கள் லேப் டாப்பில் உள்ளீடு செய்து கொண்டிருந்த பொழுது நடந்தது..

ஜானு,என் ஆசை மனைவி..மும்பையில் பிறந்து வளர்ந்த என் செல்ல மனைவி..வரிசையாக புகைப்படங்களை உள்ளீடு செய்து கொண்டிருந்ததில் ஒன்றில் என் பார்வை நிலைகுத்தி நின்றது.ஸ்கூல் படிக்கும் பொழுது இருக்கலாம்.
யூனிஃபார்மில் அவள் நிற்க அவளது தோளை அணைத்த படி ஒருத்தன்...இவன் யார்..?நான் பார்க்காதவன்..?ஆனால்.இவனை எங்கேயோ பார்த்து பழகின ஜாடை.இவன் எதற்கு ?ஜானுவை கட்டிக் கொண்டு...?.

ஜானு சாக்கலேட் திரவங்களில் ஒன்றை எனக்கு நீட்டினாள். அமைதியாக வாங்கிச் சப்பிய படியே கேட்டேன்.

"ஜானு...இது யாரு..உன் கூட உன்னை கட்டிண்டு..?"

அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு எதும் நடக்காத மாதிரி.."பாச்சா.."என்றாள்.

நான் கேட்டேன் "பாச்சான்னா யாரு..? ஏன் நம்ம கல்யாணத்தப்ப நான் பாக்கலை..? பழய லவ்வா..?" என்றேன் சீரியசான குரலில்.அவள் சிரித்தது செயற்கையாக இருந்தது.

"என்ன நீங்க..?ஹீ இஸ் மை எல்டெர் ப்ரதர்.பார்த்தசாரதி"நான் அமைதியானேன்.

அவள் சொன்னாள் "அவனுக்கு மன நலம் சரியில்லை..நல்லா இருந்தவன்.திடீர்னு இப்படி ஆனதால நவ் ஹீ இஸ் இன் அசைலம்.

உங்க அப்பாவோட சொந்த ஊர் எது..?

"சவுத் சைட் தான்..நன்னிலம்.ஏன் கேட்கறீங்க...?"

நான் எழுந்து மெல்ல நடந்தேன்.மீண்டும் வந்து கேட்டேன்."அங்க யாரும் சொந்த காரா இல்லையா.?"

"இருக்காளே...எங்க அப்பாவோட பொறந்த சித்தப்பா,அவா அங்க தான் இருக்கா...பட் ரெண்டு ஃபேமிலிக்கும் டச் இல்லை..ரொம்ப நாளைக்கு முன்னாலயே சண்டை.ஏன் கேட்கறேள்..?" "ஒண்ணும் இல்லை..சுந்தரம்,உன் பெரியப்பா பிள்ளை தானே..?"

"ஆமாம்..உங்களுக்கு தெரியுமா..?நான் பார்த்ததேய்ல்லை..."

நான் அமைதியாக சொன்னேன்."எனக்கு தெரியும்.நான் பார்த்துருக்கேன்".

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - (துருக்கி நாட்டுச் சிறுகதை)


மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - (துருக்கி நாட்டுச் சிறுகதை)
அஸீஸ் நேஸின்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.

அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாரா?

எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேயும் கூட வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்தவேண்டியிருக்கும். வாடகையைச் செலுத்தத் தவறினால், வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதனால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனாலும் அவரது பழைய தட்டச்சுப் பொறியையும் உடைந்து சிதறிப் போயுள்ள வீட்டுத் தளபாடங்கள் சிலவற்றையும் வைப்பதற்கு ஓரிடத்தைத் தேடிக் கொள்ளவே வேண்டும். மிருகக் காட்சிசாலைக்கு புதிதாக வந்துள்ள விலங்கொன்றைப் பார்க்க வருவதுபோல், தன்னைப் பார்க்கவும் மக்கள் வருவார்களெனச் சந்தேகித்த அவர் அமைதியானதொரு வாழ்க்கை நடத்த எண்ணினார். அதனால் அவர் அப் பிரதேசத்தினொரு மூலையில் மக்களின் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீடொன்றின் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தார்.

நகரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் நடப்பதன் மூலம், அந்த இடத்தை அடையலாம். புத்தகங்களை வைத்திருக்கும் பழைய சூட்கேஸ், சிதைந்த தட்டச்சுப் பொறி மற்றும் உடைந்து சிதறிப் போன வீட்டுத் தளபாடங்கள் ஆகியன வாடகைக்கு எடுத்த அறைக்கு கொண்டு வரப்பட்டன. அவர் அறையிலிருந்த யன்னலை பத்திரிகைத் தாள்களால் மறைத்தார்.

அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் பாதையின் எதிர்ப் புறத்தில் சிறியதொரு சில்லறைக் கடையிருந்தது. அதற்கும் கொஞ்சம் தூரத்தில் பாதையின் இடது பக்கத்தில் சிறியதொரு பழக் கடையொன்றும் இருந்தது. அவர் அக் கடைகளில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார். சில்லறை வியாபாரியும், பழ வியாபாரியும் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நண்பர்களாகினர். அவர்களது வியாபாரம் மிகவும் சொற்பமானதாக இருந்தது. ஒரு நாளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு மட்டும்தான். அதிகமாகப் பணம் செலவு செய்யக் கூடியவர்கள் அந்தக் கடைகளுக்கு வரவில்லை. அந்த இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கடையைக் கொண்டு செல்வதற்கும் தேவையான வசதிகள் அக் கடை உரிமையாளர்களுக்கு இருக்கவில்லை.

சில தினங்களுக்குப் பிறகு, சில்லறைக் கடைக்கு முன்னால் சுடச் சுட அப்பம் விற்குமொரு கடை ஆரம்பிக்கப்பட்டது. எந்நாளும் மத்தியான வேளையில் வருமொரு வியாபாரி, இரவின் இருள் சூழும் வரையில் அங்கு சுடச்சுட அப்பம் விற்றான். அதற்கும் சில தினங்களுக்குப் பிறகு இன்னுமொரு வியாபாரி, அதற்குப் பக்கத்திலேயே பாண் விற்க ஆரம்பித்தான். பழ வியாபாரியின் கடையின் பகுதியொன்றை வாடகைக்கு எடுத்த இன்னுமொருவன், கண்ணாடி அலுமாரியொன்றில் கேக்குகளை வைத்து விற்றான். சிறிது காலம் சென்ற பிறகு, சப்பாத்துத் தைப்பவனொருவன், பழச்சாறு பானம் விற்கும் சைக்கிள்காரனொருவன் மற்றும் தீன்பண்ட வியாபாரியொருவன் அப் பகுதியில் தமது வியாபாரங்களைத் தொடங்கினர்.

சொற்ப காலத்துக்குள்ளேயே அவரது வீட்டைச் சூழவிருந்த பகுதி, சிறியதொரு சந்தை போல ஆகி விட்டிருந்தது. வீதியைப் பெருக்கும் மனிதனொருவன், வியாபாரிகளால் அசுத்தமடையும் அப் பிரதேசத்தை காலையிலிருந்து இரவு வரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருந்தான். சில்லறைக் கடைக்கும் பழக்கடைக்குமிடையில் புதியதொரு கோப்பிக் கடையும் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு போய் வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.

அவர் தங்கியிருந்த வீட்டைச் சூழவிருந்த பாழடைந்த வீடுகளும் அறைகளும் புதிய குடியிருப்பாளர்களால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பிரதேசத்துக்கு சடுதியில் உதித்திருக்கும் அதிர்ஷ்டத்தை எண்ணி அவர் வியந்தார். எவ்வாறாயினும் அவரால் இன்னும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள இயலவில்லை. அவரால் தனியாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியாது. எவரேனும் அவருக்கு வேலை கொடுத்தாலும், அவரைக் காவல்துறை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பதை அறிந்ததும் அவரது சேவையைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதைத் தவிர்ந்து கொண்டனர்.

அவருக்கு அவரது நண்பர்களிடம் கடன் கேட்பதுவும் இயலாது. அவர்களில் அனேகர் வேலையற்றவர்கள். மற்ற நண்பர்கள் இவ்வுலகை விட்டும் சென்றிருந்தனர். நகரத்துக்குச் சென்று தனது அறையில் வாடகை தராமல் தங்கிக் கொள்ளும்படி சொன்ன நண்பரொருவரது வேண்டுகோளையும் அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் தங்கியிருந்த பிரதேசத்தை விட்டுச் செல்வது சிரமமாக இருந்தமையே அதற்குக் காரணம். அவர் சில்லறை வியாபாரியிடமிருந்தும், பழ வியாபாரியிடமிருந்தும் மற்றும் ஏனைய வியாபாரிகளிடமிருந்தும் இடைக்கிடையே கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருந்தார். அவர் அந்தக் கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

 ஒரு மாலை வேளையில் அவர் இந்தக் கடன்களையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அப் பிரதேசத்தை விட்டும் செல்வது எவ்வாறென சிந்தித்துக் கொண்டிருந்த போது, யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். அறைக்கு வெளியே அவரைச் சந்திக்க மூவர் வந்திருந்தனர். சில்லறை வியாபாரி, பழ வியாபாரி மற்றும் கோப்பிக் கடைக்காரன். அவர் தனது எளிய அறைக்குள் அவர்களை அழைத்து வந்தார்.

"என்னை மன்னிக்க வேணும். கோப்பியோ வேறு ஏதாவதோ உங்களுக்குத் தர எனக்கு வழியில்ல."

சில்லறை வியாபாரி புன்னகைத்துக் கொண்டே, அவனது கையிலிருந்த கடதாசிப் பையை மேசையின் மீது வைத்தான்.

" அதுக்குப் பரவால்ல. நாங்க வந்தது வேறொரு விஷயத்துக்கு. இந்தாங்க கோப்பியும் சீனியும்."

அவர் கலவரமடைந்தார். இவர்கள் இவற்றை எடுத்து வந்திருப்பது எதற்காக? அவர்கள் இங்கு வந்திருப்பது, தான் கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கேட்பதற்காகத்தான் என அவர் எண்ணியிருந்தார். ஆனால் இவர்கள் பரிசுகள் எடுத்து வந்திருப்பது ஏன்?

"ஐயா இந்தப் பகுதியை விட்டுட்டுப் போக நினைச்சிருக்கிறதா நாங்க கேள்விப்பட்டோம். அது நெசம்தானா? " சில்லறை வியாபாரி கேட்டான்.

"ஆமா..அப்படியொரு எண்ணமிருக்கு."

அவர்கள் வந்திருக்கும் காரணம் இப்பொழுது அவருக்குப் புலப்பட்டது. அவர்களிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தான் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் எண்ணியிருக்கக் கூடும்.

" ஆமா. நான் இந்த அறையை விட்டுப் போகப் போறதா எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?

" எங்களுக்கு அக்கம்பக்கத்துலருந்து கேள்விப்பட்டுச்சு."

" ஆனா அது பற்றிக் குழப்பமடைய வேணாம். நான் உங்கக்கிட்ட வாங்கிய கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்காம இங்க இருந்து போகப் போறதில்ல."

" எங்கள வெட்கப்பட வைக்கவேணாம் ஐயா. ஐயாக்கிட்ட இருந்து எங்களுக்கு பணம் தேவையில்ல."

" எனக்குன்னா ஐயாக்கிட்ட இருந்து கிடைக்குறதுக்கு எதுவுமில்ல. ஐயா எனக்குப் பணம் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்" பழ வியாபாரி சொன்னான்.

" ஏனது?"

" நாங்க வந்தது ஐயாவோட சேவையை கௌரவிக்க. ஐயா எங்களுக்கு பெரியதொரு சேவையை நிறைவேற்றித் தந்திருக்கீங்க."

அவருக்கு மெலிதாக வியர்த்தது. எதுவும் பேச முடியாதபடி தொண்டையில் ஏதோ அடைபட்டது போல உணர்ந்தார்.

" அது பற்றி ஞாபகப்படுத்தவும் வேண்டாம்." அவர் உளறலாகச் சொன்னார்.

அவர்கள் அவர் யாரென அறிந்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய புரட்சியாளர் தான் தானென அவர்கள் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறார்கள்.

கோப்பிக்கடை உரிமையாளன் திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான்.

" இந்தப் பகுதியை விட்டுப் போறதுக்கு நினைச்சிருக்கிற யோசனையை விட்டுப் போடச் சொல்லி நாங்க தாழ்மையா வேண்டுறோம்."

" ஆமா. நாங்க அதைச் சொல்லத்தான் வந்தோம்." பழ வியாபாரி இடை நிறுத்தினான்.

" எனக்கு வாடகை கொடுக்க வழியொண்ணு இல்ல. அதனால நான் போயே ஆகணும்."

" எங்களுக்குத் தெரியும்." பழ வியாபாரி பேசத் தொடங்கினான்.

" எங்க எல்லோருக்குமே தெரியும். நாங்க வியாபாரிகளெல்லோருமே ஒன்று சேர்ந்து ஐயாவின் வீட்டு வாடகையை எங்களுக்கிடையில சேகரித்து ஒவ்வொரு மாசமும் கொடுக்குறதா தீர்மானித்திருக்கிறோம். எங்க எல்லோருடைய வேண்டுகோளும் ஐயா இந்தப் பகுதியை விட்டுப் போயிட வேணாங்குறதுதான்."

" வாடகையப் பத்தி யோசிக்க வேணாம். நாங்க அதப் பார்த்துக் கொள்றோம். இந்தப் பகுதியை விட்டு மட்டும் போயிட வேணாம்." சில்லறை வியாபாரி இடை மறித்தான்.

அவரது விழிகள் ஆனந்தத்தால் நிரம்பின. அவர் வழி நடத்திய மக்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை பல வருடங்களுக்குப் பிறகாவது மக்கள் உணர்ந்து வைத்திருப்பது அவரது மகிழ்ச்சியை இரு மடங்கு, மும்மடங்குகளாகப் பெருகச் செய்தன.

" அதுன்னா முடியாது." அவர் மீண்டும் சொன்னார்.

" என்னால அதை ஏத்துக்க முடியாது. வீட்டு வாடகை மட்டுமில்ல. எனக்கு இப்ப வேலையொண்ணு கூட இல்ல. அதனால எனக்கு இந்தப் பகுதியில வாழ முடியாது. எனக்கு என்னோட கூட்டாளியொருத்தன்கிட்டப் போய் வாழ்க்கையக் கொண்டு செல்ல முடியும்."

கோப்பிக் கடைக்காரன் திரும்பவும் கதைத்தான்.

"நாங்க இது எல்லாத்தையும் பற்றியும் கதைச்சோம். ஐயாவுக்கு மாசாமாசம் தேவைப்படுறதையெல்லாம் வியாபாரிகளுக்கிடையில சேகரித்துத் தர்றோம். என்னவாயிருந்தாலும் இந்தப் பகுதியை விட்டுட்டு மட்டும் போயிட வேணாம்."

மூவரும் ஒன்றாக இணைந்து வற்புருத்தினார்கள். மக்கள் இப்பொழுது விழிப்படைந்திருக்கிறார்களென அவர் உணர்ந்தார். மக்களது உணர்வுகளில் புதியதொரு உத்வேகம் பிறந்திருக்கிறது. கடந்த காலங்களில் அவர் எடுத்துச் சென்ற மக்கள் போராட்டத்தைக் கேலி செய்த வியாபாரிகள் கூட இப்பொழுது அவரது மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். அவரது கண்களிரண்டும் ஆனந்தக் கண்ணீரால் ஈரமாகின.

" ரொம்ப நன்றி..ஆனா எனக்கு உங்க உதவிகள ஏற்றுக்கொள்ள முடியாது."

அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புருத்தினார்கள்.

" ஐயாவுக்கு இந்த அறை பொருத்தமானதாயில்ல. " சில்லறை வியாபாரி தொடர்ந்தான்.

" இங்க வசிக்கிறதுக்கு இடங் காணாது. ஐயாவுக்கு இந்த அறை பிடிக்கலன்னா, மாடி வீடொண்ணு இங்க பக்கத்துல இருக்கு. அந்த வீட்டோட மேல் மாடியை வாடகைக்கு எடுத்துத் தர முடியும். குளியலறை, கழிப்பறை எல்லாமே அதுக்குள்ளேயே இருக்கு. நாங்க ஐயாவ அங்க தங்க வைக்கிறோம்."

" எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஐயாவ எங்களிடமிருந்து தூரமாக்காம இங்கேயே வச்சுக்கிறதுதான்." கோப்பிக் கடைக்காரன் சொன்னான்.

அவர் பெரியதொரு குழப்பத்துக்குள்ளானார்.

" சரி. ஏன் நீங்க எல்லோரும் என்னை இந்தப் பகுதியிலேயே இருக்க வற்புருத்துறீங்க?"

" அது நல்ல தெளிவான காரணம். எங்களுக்கு நல்லதொரு வியாபாரமிருக்கு ஐயாவுக்கு நன்மை கிடைக்க."

" பைத்தியமா? நானென்ன அந்தளவுக்கா உங்களோட கொடுக்கல் வாங்கல் செய்றேன்?"

" ஐயாவோட கொடுக்கல் வாங்கல் எதுவுமில்ல. கொடுக்கல்வாங்கல் செய்றது மற்றவங்களோட. ஆனா அந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது ஐயாதான். ஐயா இங்க வர்றதுக்கு முன்னாடி என்னோட கடைக்கு வந்தது ரெண்டு மூணு பேர்தான். ஐயா வந்தப்புறம் இந்தப் பகுதி மனிசக் குடியிருப்பாயிடுச்சு. இப்ப பாருங்க..புதிய கடைகள் தொறக்கப்பட்டிருக்கு. அவையெல்லாமே ஐயாவுக்கு நன்மை கிடைக்க நடந்தவை" சில்லறைக் கடை வியாபாரி விவரித்தான்.

" எங்களுக்கு தயவு பண்ணுங்க ஐயா. ஐயா இங்க இருந்து போய்ட்டா எந்த சந்தேகமுமில்லாம என்னோட கோப்பிக் கடையை மூட வேண்டி வரும்."

அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புருத்தினார்கள். அவர்களுடைய குடும்பம், பிள்ளைகள் குறித்து அவர் சிந்திக்க வேண்டும். அவர்களெல்லோருமே வாழ்க்கை நடத்துவது அவரால்தான். தேவைப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கவும் வியாபாரிகள் முன்வந்தனர்.

" நன்றி. ஆனா என்னோட சேவை அந்தளவு பெறுமதியுடையதல்ல. நான் நல்ல ஆரோக்கியமா இருக்கும்போதே வேலை செய்யணும். உங்களுக்காக நான் செய்ய வேண்டியிருப்பது நான் இங்க தங்குறது மட்டும் தானே?"

" ஆமா..அவ்ளோதான். நாங்க ஐயாவோட பெறுமதிமிக்க பெயரை எப்பவுமே மறக்க மாட்டோம். ஐயா இங்க வந்ததோடே ஐயாவோட நடவடிக்கைகளக் கவனிக்கன்னு பொலிஸார் படையொண்ணே இந்தப் பகுதிக்கு வந்துச்சு. அவங்களுக்கு சேவை செய்ய சப்பாத்துத் தைக்கிறவன், வியாபாரிகள்னு இந்தப் பக்கம் வந்தாங்க. இன்னும் கொஞ்ச நாள் போகும்போது பொலிஸ் படையோட வேலைகளைக் கண்காணிக்கன்னு இன்னொரு பொலிஸ் படையொண்ணு வந்துச்சு. அவங்களோட தேவைகளச் செஞ்சு கொடுக்க இன்னும் வியாபாரிகள் இங்க வந்தாங்க. இவங்க எல்லோருமே வியாபாரிகளிட்ட இருந்து சாமான்கள் வாங்கத் தொடங்கினாங்க." பழ வியாபாரி கூறினான்.

" அதற்குப் பிறகு நான் கடையொண்ணு திறந்தேன். ஐயாவுக்கு நன்மை கிடைக்க பொலிஸ்காரர்கள் அந்தி நேரங்கள்ல எங்க கடைக்கு வந்து கோப்பிக் கோப்பைகள் மூணு, நாலுன்னு குடிக்கிறாங்க."

அவர் வேதனையோடு அவர்களைப் பார்த்தார்.

" அவர்கள் எல்லோருமே பொலிஸ்காரர்களா?"

" சில பேர் பொலிஸ்காரர்கள்.. சில பேர் பொலிஸ்காரர்களில்லை. ஒரு இடத்துக்கு பத்துப் பேர் வரும்போது அவங்களோட அவங்க குடும்பமும், நண்பர்களுமுன்னு அம்பது பேரளவில வருவாங்க. ஐயா இப்ப இந்த மாதிரிப் போய்ட்டா இந்தப் பகுதி பழைய நிலைக்கே போய்டும். எல்லாப் பொலிஸ்காரங்களுமே திரும்ப ஐயா பின்னால போய்டுவாங்க."

" அப்ப எங்க வியாபாரம் படுத்துடும்." சில்லறை வியாபாரி சொன்னான்.

" பிச்சைக்காரங்க எங்களுக்கு தயவுபண்ணுங்க " பழ வியாபாரி கெஞ்சினான்.

" ஐயா போகவே வேணும்னா நாங்க காசு கொஞ்சம் சேர்த்து முன்னேறுற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு இருங்க" கோப்பிக் கடைக்காரன் வேண்டினான்.

அவர் ஒரு கணம் சிந்தித்தார். 'எங்கு சென்றாலும் இதே நிலைமைதான்.'

" சரி..நான் போகல. ஆனா நீங்க கொண்டு வந்திருக்குற பரிசுகளையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு போங்க."

அவர் கடதாசிப் பையைத் திரும்ப அவர்களது கையில் வைத்தார்.

பழ வியாபாரி வெளியேறும்போது மீண்டும் திரும்பினான்.

" நாங்க எங்க மத்த வியாபாரிகளிட்டயும் இந்தச் செய்தியைச் சொல்லட்டுமா?"

" ம்ம்..! நல்லது.. நான் இந்தப் பகுதியிலிருந்து இப்பவே போறதில்ல. ஆனா எனக்கு உங்கக்கிட்ட இருந்து எதுவுமே வேணாம்."

" ஐயாவுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்." கோப்பிக் கடைக்காரன் ஆசிர்வதித்தான்.

இலங்கையில் நிகழும் இனமோதலும், முஸ்லிம்கள் - தமிழர்கள் உறவுகளும் - சமுதாய அரசியல் பார்வை



இலங்கையில் நிகழும் இனமோதலும், முஸ்லிம்கள் - தமிழர்கள் உறவுகளும் - சமுதாய அரசியல் பார்வை
கா.சிவத்தம்பி




“இலங்கை அரசு இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் உளவுப்பணி ஆலோசகர்களுக்கும் தம் மண்ணில் இடம்கொடுத்திருந்ததால் அரபு நாடுகளுடனான நல்லுறவில் அதற்கு ஏற்பட்டிருந்த பாதிப்பைப் போக்கி, மீண்டும் நல்லுறவு ஏற்பட இந்த மோதல்கள் வசதி செய்து கொடுத்தன.”

தீர்ப்பதற்கே மிகவும் சிரமப்படுகிற அளவுக்கு சிக்கல் நிறைந்திருக்கும் இலங்கை இனமோதலைச் சரிசெய்வதற்கு சுலபமான ஒரு தீர்வை உண்டாக்கும் மிகப் பெரிய காரணிகளுள் ஒன்று - தமிழர்களின் பாரம்பரியமான தாயகம் என்று கருதப்படும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் அரசியல் இருப்புநிலை. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, இருபெரும் இனங்களுக்கிடையே தமிழர்கள் வளர்ந்து வரும் பாட்டிகாலோ, அம்பாறை மாவட்டங்களில் வசித்து வரும் தமிழர்கள் - முஸ்லிம்களுக்கு இடையேயான இறுக்கத்தினால் நிலைமை மோசமடைந்துள்ளது.

இந்தச் சிக்கல் அதன் இன்றைய பரிமாணங் களை எவ்வாறு வலிந்து பற்றிக் கொண்டது என்றும், பல்வேறு முக்கிய தலைவர்களால் வலிந்து தோற்றுவிக்கப்பட்ட இந்தத் தொடர்பு தேசிய அளவிலும் சர்வ தேசிய அளவிலும் பயன் படுத்தப்பட்டமை குறித்தும் பகுத்துப் பார்ப் பதற்கான முயற்சியே இந்தக் கட்டுரையின் உருவாக்கம். நேர்மையுடன், எதார்த்தத்துடன் முரண்பட்டிருக்கக்கூடிய தீர்க்கப்படாத அக-இன அம்சங்கள், அவநம்பிக்கைகள் சில அதற் குள்ளேயே மறைந்திருக்கின்றன என்பது இந்தப் பகுத்தாயும் போக்கில் கண்டறியப்படும்.

பாட்டிகாலோவில் முஸ்லிம்கள் - தமிழர்கள் மோதல் - அதன் உட்பொருளும் விளைவும்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கறைப் பட்டில் 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் மத்தியில் ஏறத்தாழ பத்து நாட்கள் வரை நீடித்த மிகப் பெரிய வன்முறை வெடித்ததுடன் இந்தப் பிரச்சினை தன்னைத்தானே அடையாளம் காட்டியது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்; அதன் விளைவாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த அரசு ஊடகமும், அரசும், தமிழர்கள் தாக்கிய செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்த வேளையில் நடுநிலையான முஸ்லிம் தலைவர்கள் பாட்டிகாலோ உள்ளும், சுற்றுவட்டாரத்திலும் எச்சரிக்கையும் அமைதியும் வேண்டும் என்று கோரினர். இந்த வன்முறை நிகழ்வுகளில் இஸ்ரேலர்களுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று உடனடியாகத் தகவல்கள் வெளியாயின (தமிழினப் போராளிகளை அடக்குவதற்கு இலங்கை அரசுக்கு இஸ்ரேலின் உதவி தேவைப் பட்டதால் 1985-ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இலங் கையில் இஸ்ரேலர்களின் புழக்கம் இருந்தது). பாட்டிகாலோவைச் சேர்ந்த முதியவர்கள் சிலரும், தமிழ் அமைச்சர்களான கே.டபிள்யூ.தேவநாயகம், சி.ராஜதுரை ஆகியோரும் கலவரம் நடந்ததற்கான நேரடியான காரணம் என்று ‘வெளி நபர்களை’யே சுட்டிக்காட்டினர்.

இந்த மோதல்கள் அதுவரை கவனத்திற் படாமல் இருந்த இலங்கை இனமோதலைப் பற்றிய ஒரு நோக்குநிலையை வெளிச்சத்துக்குக் கொணர்ந்தன. குறிப்பாக, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இருப்பது என்று வழக்கமாகக் கருதப்பட்டு வந்த இந்த மோதல் முஸ்லிம்களுக்கும், இந்த இரண்டு இனக்குழுக் களுக்கும் இடையேயான உறவுகளையும் சிக்கலாக்கு கிறது. தமிழர்கள் - முஸ்லிம்கள் முரண்பாடு, தன் போக்கில் சிங்களவர்கள் - தமிழர்கள் முரண் பாட்டின் தன்மையையும் உட்பொருளையும் காத்திரமாகப் பாதிக்கிறது.

முதலாவதாக, இந்த மோதல் தமிழர்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளுள் ஒன்றை நிறைவேற்ற இயலாமல் சிரமத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, இலங்கையிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலம் என்று இணைவாகக் கூறப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிர்வாகரீதியாக ஒருங்கிணைக்க இயலாத நிலைக்குக் கொண்டு செல்கிறது. பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, 1985, ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழர்கள் - முஸ்லிம்கள் கலவரங்கள் கெடுவாய்ப்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ‘இணைப்பு - ஊ’ -யை நிராகரிப்பதற்கு அரசு முன்வைக்கும் ‘சாக்குப் போக்கை உருவாக்கிக் கொடுத்தது; அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருந்த முன்மொழிகள் எல்லாம் இந்தியாவின் மத்தியஸ்தர்களால்கூட, அரசியல் தீர்வுக்கான அடிப்படை என்றே ஒப்புக் கொள்ளப்பட்டன.

இரண்டாவதாக, இந்த முஸ்லிம் - தமிழர் மோதலானது ‘இன மோதல் உண்மையில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே வரையறைப்படுத்தப் பட்டது’ என்று அரசாங்கம் தன் நிலைப்பாட்டை மேலும் அழுத்தமாக, அடிக்கடி கூறும்படி செய்தது. அந்த நேரத்தில், இலங்கைத் தீவின் ஒவ்வொரு பிரதேசத்திலும் தேசிய இன நிர்ணயம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து விரிவாக (வாக்குரிமை) ஆதரவைத் தேடியது. வடக்கிலும், கிழக்கிலும் - குறிப்பாக, வடக்கு மாகாணத்தில், இப்படிப்பட்ட ஒரு சமநிலையை அடையும் நோக்கத்தில் சிங்களவர்களின் புதிய குடியேற்றங்கள் தொழிற்பட்டிருக்க வேண்டும் என்றுகூட விவாதிக்கப்பட்டது. இத்தகைய புள்ளி விவர அடிப்படையிலான மறுகட்டமைப்பான பூர்வீகத் தமிழ்த் தாயகம் என்ற கருத்துப் படிவத்தை முனைப்புடன் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மூன்றாவதாக, இந்த மோதலானது அரசு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் - சிங்களவர் களின் குடியேற்றத்தை நிகழ்த்துவதற்கு வசதி செய்து கொடுத்தது; அதன் விளைவாக, முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையோராகவும் பொருளாதார நிலையில் வளமாகவும் இருந்த அம்பாறை மாவட்டத்தில் அந்த முஸ்லிம்கள் அவற்றையெல்லாம் இழந்து கையறு நிலையை அடைந்தனர்.

நான்காவதாக, சர்வதேச உறவுகளின் நோக்கு நிலையில் பார்க்கும்போது இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இலங்கை அரசு இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் உளவுப்பணி ஆலோசகர் களுக்கும் தம் மண்ணில் இடம்கொடுத்திருந்ததால் அரபு நாடுகளுடனான நல்லுறவில் அதற்கு ஏற்பட்டிருந்த பாதிப்பைப் போக்கி, மீண்டும் நல்லுறவு ஏற்பட இந்த மோதல்கள் வசதி செய்து கொடுத்தன. கிழக்கு மாகாணத்தில் ஹெலி காப்டர்கள் மூலம் வீசிப் பரப்பப்பட்ட ஒரு துண்டறிக்கையின் 3-ஆம் பக்கத்தில் பின்வரும் முக்கியமான வரிகள் இடம் பெற்றிருந்தன.

“பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்றால் என்ன? இந்த (நாடுகள்) லெபனான், லிபியா என்பவை யாவை? இவையெல்லாம் உலகின் முஸ்லிம் நாடுகள். வடக்கிலிருந்து பயங்கர வாதிகள் தங்கள் கைகளில் பிச்சைப் பாத்திரங் களை ஏந்திக் கொண்டு இந்த நாடுகளுக்குச் சென்று, அங்கு நிதியுதவியும், ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். அதே தமிழ்ப் பயங்கரவாதிகள் முஸ்லிம் நாடுகளிலிருந்து பெற்றுவந்தவற்றை இப்போது இலங்கைவாழ் முஸ்லிம்களை அழிப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.”

இந்தத் தமிழர் - முஸ்லிம் மோதல் முதன் மையாக மத மோதல் என்று மெய்ப்பிக்க அரசாங்க அளவிலான முஸ்லிம் தலைவர்களால் - குறிப்பாக, முஸ்லிம் சமய நலத்துறை மூலமாகக் கூட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மசூதிகளிலும், முஸ்லிம் புனிதத் தலங்களிலும் ஏற்பட்ட சேதாரங் களைப் பற்றிய ஒரு கணக்கெடுப்பு உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் சமய நலத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு செய்த பரிந்துரை மிக முக்கியமானது:

“இயல்பு நிலைமை திரும்பாத வரையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். மக்களே கேட்டுக் கொண்டும்கூட, நிரந்தர சிறப்புக் காவற் படை முகாமிட்டிருப்பது தெரிவிக்கப்பட வில்லை.”

இவ்வகைக் கருத்து, அரசு தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு ஆயுதங் களை வழங்கவும், முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் பாட்டிகாலோ பகுதிகளுக்கு ஊர்க் காவல் படையை அளிக்கிற அளவுக்கும் இட மளித்தது; இந்த நடவடிக்கைகள் அறிமுகமான பிறகு உள்ளூர் முஸ்லிம் தலைவர்களே கண்டனம் செய்கிற அளவுக்கு வன்முறை அதிகமானது. அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பொருத்தமான சூழ்நிலை ஏற்பட்டது.

உண்மையில், பாட்டிகாலோவில் நடைபெற்ற இந்த முஸ்லிம் - தமிழர்கள் மோதலுக்குப் பின்னால் இருக்கிற அடிப்படைப் பிரச்சினையை உருவாக்குவது எது?

இந்தப் பகுதிகளில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகளே இதற்கான நேரடியான காரணம் என்று கூறப்படுகிறது. தமிழ்ப் போராளிகள் 1982 முதல் வடக்கில் ஆதிக்கம் கொள்ளத் தொடங் கினர். அங்குதான் அவர்கள் முனைப்பான படை யாக உருவெடுத்தனர். வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களைத் தாக்குதல், அரசு நிறுவனங்களின் வாகனங்களையும், தனிநபர் வாகனங்களையும் கைப்பற்றுதல் போன்ற முன்மாதிரிகளை முதன் முறையாகத் துவங்கினர். தலைமறைவு இயக்கம் என்ற வகையில், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத் துக்காக அந்தப் பகுதியின் வாய்ப்பு வளங்களையே சார்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததானது; என்றாலும், இந்தச் சார்புநிலை உருவாக்கக்கூடிய அகவயப்பட்ட சமூக நெருக்கடிகள், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அரசுப் பாதுகாப்புப் படைகளின் கொடிய அடக்குமுறைகளின் காரணமாக, காத்திரமான ஒரு முரண் இயக்க நிலையாகக் கருதவில்லை. ஒன்றை மற்றொன்று பாதிக்கிற இந்த முன்மாதிரி ஓர் ஒன்றுபட்ட பண்பாட்டுச் (தமிழ்) சூழலுக்குள் வளர்ச்சியுற்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அரசாங்கப் பாதுகாப்புப் படைகள் அடக்கு முறை நடவடிக்கைகளை விரிவாக்கியதற்கு எதிர் வினையாக, பாட்டிகாலோ மாவட்டத்துக்குள்ளே திரிகோணமலைக்குத் தெற்குத் திசையை நோக்கிப் போர் உணர்ச்சி பரவத் தொடங்கியபோது, போராளிக் குழுக்கள் வேறொரு சமுதாயப் பண்பாட்டு அமைவில் வளர்த்தெடுத்த அதே வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கின. ஆனால், பாட்டிகாலோவில் வேறுபட்டதொரு சமய - இனக்குழுவினர் - முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். திடீரென அங்கே பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கின. குறிப்பாக, முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்குப் பாதிப்பு ஏற்பட்ட போது சிக்கல்கள் உருவெடுத்தன. அரசு அதிகாரிகளுக்கு இலங்கை முஸ்லிம் லீக் அமைப் பால் அனுப்பப்பட்ட சில கடிதங்கள் முஸ்லிம் களிடையே கருத்துரைப்பதற்கென்றே இருந்த தலைவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலைப் பாட்டினை விளக்குகின்றன. 1985, மே, 8-ஆம் தேதி அன்று - அதாவது, அக்கறைப்பட்டில் மோதல் நடந்த சில வாரங்களுக்குள் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தின் இந்தச் சில வாசகங்களைச் சான்றாகக் கூறலாம்:

“வெளிப்புறப் படைகள் இங்குள்ள முஸ்லிம்களைத் தூண்டிவிடுகின்றன என்று நாங்கள் தினமும் செய்தித்தாள்களிலிருந்து தகவல் அறிகிறோம். வெளிப்புறப் படைகள் முஸ்லிம்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக ஓர் அமைச்சர் கூட கருத்து தெரிவித்திருக்கிறார். அகதிகளுள் பெரும்பான்மையோர் தமிழர்களே என்று எடுத்துரைத்து, மெய்ப்பிப் பதற்கு தமிழர் அமைச்சர்கள் அரும்பாடு பட்டு வருகின்றனர். இந்தக் குரலெடுப்பால் தமிழர்களிடையே கிளர்ச்சி ஏற்படுகிற சூழல் ஏற்படுகிறது. முஸ்லிம்களின் நிலைப்பாடு, தமிழர்களின் முன்பும், முழுத் தேசத்தின் முன்பும் திட்டவட்டமாக எடுத்து வைக்கப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இலங்கை தான் எங்களின் கோரிக்கை. இதுவரை தமிழர்களின் சார்பில் எங்களை எந்தத் தமிழர்களும் (பயங்கரவாதிகள் அல்லது விடுதலைப் போராளிகள்) அணுகவில்லை. முஸ்லிம்களைச் சம்பந்தப்படுத்தாமலே தமிழர்கள் தங்கள் போரை நடத்தியிருக்க முடியும்.

ஆயினும், கடந்த ஆறு மாதங்களாக, தமிழர்கள் விடுதலைப் போருக்கு முஸ்லிம்கள் நிதியுதவி செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் துணிவுடன் முஸ்லிம் வீடுகளில் நுழைந்து பணம் கொடுக்கும்படி கேட்டனர். முஸ்லிம் களின் வசமிருந்த துப்பாக்கிகளை அரசு திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில் பயங்கரவாதிகளை எதிர்த்து நின்று தடுக்க முஸ்லிம்களால் முடியவில்லை. இது ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே போனது. ஒரு முஸ்லிம் வீட்டுக்கு இரண்டாவது தடவை பணம் கேட்டுச் சென்ற பயங்கரவாதிகள், அவர் தம்மால் பணம் கொடுக்க இயலாத நிலையை எடுத்துச் சொன்னபோது, அவருடைய மகளைக் கடத்திச் சென்று விடுவதாகக் கூறி மிரட்டினர். இதைப் போன்ற நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் அனைத்துக் கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்றன. அக்கறைப்பட்டு முஸ்லிம்கள் ‘முஸ்லிம்களை விட்டு விடுங்கள்’ என்று பயங்கரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்து துண்டறிக்கைகளையும் சுவரொட்டி களையும் அச்சிட்டு வெளியிட்டதற்கு இது தான் காரணம்!”

ஆயினும், உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் தெளிவான மனோபாவத்துக்கு மாறினர். தங்களை ஒதுக்கிவிட்டதாகக் குற்றம் சாட்ட முனையாமல் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தனர். இந்தச் சூழல் பாதிக்கப்பட்டவர் களையும், பாதிப்பை ஏற்படுத்திய பாதகர்களையும் அடையாளப்படுத்துகிற ஒன்றல்ல, இரண்டு தரப்புகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிப்பிடுகிற நிலைக்குச் சென்றனர்; பாதிக்கப் பட்ட பகுதியில் பாதுகாப்பு உணர்வை உருவாக்குவது அவசியம் என்று கருதினர். இந்தப் பாரபட்சமற்ற நோக்கத்துடன்தான் 1970-1977-இல் கல்வித்துறை அமைச்சராக இருந்த பதியுதின் மஹமது உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் போராளிகளின் தலை மையைத் தொடர்புகொள்ளத் திட்டமிட்டு, சென்னைக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினர்.

தமிழர்களின் போராட்டப் போக்கில் முஸ்லிம்கள் சந்திக்கக்கூடிய குறிப்பிட்ட சிக்கல் களுக்கு இந்த மோதல் ஓர் அறிகுறியாகும். எனினும், கணிசமான அளவில் வசித்துக் கொண்டிருந்த ஒரே பிராந்தியத்தில் - அதாவது, கிழக்கு மாகாணத்தில் தங்கள் அரசியல் வலிமையை இழந்துவிடுவோமோ என்ற முஸ்லிம் சமூகத்தின் இயல்பான அச்சமே இது என்பது வெளிப்படையானது. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்று கருதப்பட்ட வேளையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள எல்லாப் பகுதிகளையும் விட்டு விட்டு, அம்பாறை மாவட்டத்தை மட்டும் பிரிப்பதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய போது அம்பாறை மாவட்டத்தை விலக்கி விட்டனர். அவர்கள் கிழக்கு மாகாணத்தில் பாட்டிகாலோ, திரிகோண மலை மாவட்டங்களைப் பற்றி மட்டுமே பேசினர்.

டிசம்பர், 12-ஆம் தேதி அன்று அனைத்து - இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் அம்பாறை மாவட்ட ஒன்றியத்திலிருந்து பதியுதின் மஹமதுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கை களைப் பின்வருமாறு தொகுத்துரைக்கிறது:

“மாகாண சட்ட மன்றங்களை நிறுவும் பொருட்டு மேன்மைமிகு ஜனாதிபதி முன் வைத்துள்ள வரைவை வரவேற்கிற அதே வேளையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்தின் மற்ற பகுதிகளை விட்டுவிட்டு, அம்பாறை மாவட்டத்தை மட்டும் பிரிக்கவும், பாட்டி காலோ, திரிகோணமலை மாவட்டங்களை வடக்கு மாகாணத்துடன் இணைக்கவும் கோரியுள்ளதைக் கடுமையாக மறுதலிக் கின்றனர்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இந்தக் கோரிக்கை கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதான சமூகங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக் கிடை யேயான இனத்துக்குரிய சமநிலையைப் (ethnic balance) பாதிப்பது மட்டுமல்லாமல், இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் வலிமையையும் தீவிரமாகப் பாதிக்கும்.

அம்பாறை மாவட்டம் கிழக்கு மாகாணத்தி லிருந்து பிரிக்கப்பட்டால், கிழக்கு மாகாணத்தி லுள்ள 3,75,355 நபர்களுக்கு - அதாவது, இந்த நாட்டின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமா னோருக்கு, தகுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். சுருங்கக்கூறின், இந்த நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் முக்கியத்துவம் அற்ற ஒரு சிறுபான்மை இனமாக முஸ்லிம் சமூகம் குறைக்கப்பட்டு விடும்; இலங்கையில் அது தனது அரசியல் வலிமையை முற்றிலும் இழந்துவிடும்.”

இது, அம்பாறை மாவட்டத்தில் சிங்கள ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான முனைவு என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

தமிழில் : சா.ஜெயராஜ்

சேரி நாய்களும் சிம்பொனி ராஜாக்களும்



ஏப்ரல் - ஜூன் 2009 ,புதுவிசை,  
சேரி நாய்களும் சிம்பொனி ராஜாக்களும்
சார்லி
2000 ஆகஸ்டில் சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்த பண்பாடு மக்கள் தொடர்பகம் இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தியது. (மறைந்த) அறந்தை நாராயணன் தனது உரையில் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனைப் பற்றி கூறியது இப்போதும் நினைவில் இருக் கின்றது. "பாதை தெரியுது பார்" ('காலம் மாறிப்போச்சு' என்று முதலில் பெயர் வைக்கப்பட்டது) என்ற திரைப்படம் 1961,62இல் வெளிவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தவர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எம்.ஆர்.வெங்கட்ராமன். இந்தப் படப்பிடிப்பு நடந்த தினங்களில் அதே தளத்தின் மற்றொரு பகுதியில் அன்றைய பிரபல நடிகர் மூன்று எழுத்து இனிசியல் பெயர்க்காரர் (வசன உச்சரிப்பில் புகழ் பெற்றவர்) சக நண்பர்களிடம் இவ்வாறு சொன்னார்: 'கம்யூனிஸ்ட்டுக்கள் படம் எடுக்குறாங்க, ஜாக்கிரதை. படம் எப்டி ஓடுதுன்னு பார்க்கலாம்'. சொன்னபடியே அந்தப் படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார்கள்."

அந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் ஆர்.கே.கண்ணன், அவர் மார்க்சிஸ்ட் விமர்சகர். அந்தப் படத்தை இயக்கியவர் வங்காளியான நிமாய்கோஷ். அவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர். அவரை அழைத்து வந்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அந்தப்படத்தின் கதா நாயகனாக நடித்தவர் திருச்சி பொன்மலை கோல்டன் ராக் ரயில்வே தொழிலாளியான கே.எம்.விஜயன் என்பவர். படத்துக்கு இசை அமைத்தவர் எம்.பி.சீனிவாசன். பாடல் எழுதியவர்கள் கே.சி.எஸ்.அருணாச்சலம் (சின்னச்சின்ன மூக்குத்தியாம்...), ஜெயகாந்தன் (தென்னங்கீற்று ஊஞ்சலிலே...). பட்டுக்கோட்டையாரும் ஒரு பாடல் எழுதினார். அனைவரும் கம்யூனிஸ்டுகள்.

தமிழ்ச்சினிமா தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கத்தை உருவாக்க விதைபோட்டவர்களில் நிமாய்கோஷ் முக்கியமானவர். சினி டெக்னீசியன்ஸ் கில்ட் ஆஃப் சௌத் இந்தியாவின் முதல் தலைவர் அவரே. அதேபோல் இன்னொருவர் எம்.பி.சீனிவாசன். இந்தியா விடுதலை பெற்ற காலைப்பொழுதில் 'விடுதலைப்போரில் வீழ்ந்த மலரே! தோழா! தோழா!' எனும் பாடலை மணவாளன், சங்கரராஜ் ஆகியோருடன் இணைந்து பல மேடைகளில் பாடினார் (தகவல்: அம்ஷன் குமார், உயிர்மை அக்.2007).

'என்னோடு பாட்டுப்பாடுங்கள்' என்ற பாடகர் தேர்வுக்கான ஒரு போட்டி ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பா கின்றது. இதில் நடுவராக இருக்கின்ற எஸ்.பி.பாலசுப்ர மணியம் ஒரு முக்கிய தகவலைக் கூறினார்: "நாங்கள்லாம் இப்போ பாடின உடனே 'டாண்'ணு கையிலே பணம் வருதுன்னா அதுக்குக் காரணம் எம்.பி.சீனிவாசன்தான்". அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அன்றைய காலத் தில் பம்பாய் தவிர தென்னிந்தியப்பகுதியின் சினிமா என்றால் அது கோடம்பாக்கம்தான். ஆனால் சினிமாக் கலைஞர்களுக்கோ, உதிரிக்கலைஞர்களுக்கோ, கூலி களுக்கோ உரிமையும் கிடையாது, சங்கமும் கிடையாது, எனவே உழைத்ததற்கான கூலியும் உடனடியாக வராது, சொன்னபடியும் வராது. இவர்களுக்கான 'தென்னிந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சங்க'த்தை உருவாக்கியவர் எம்.பி.சீனிவாசனே. வெறுமனே 'நான் இசைக்குப் பிறந்த வன், இசை தூய்மையானது, புனிதமானது, எனவே நானும் புனிதமானவன்' என்று அவர் ஒதுங்கியிருந்தால் இன்று அந்த சங்கம் இல்லை. 'பாட்டும் சங்கீதமும் யாருக்கும் சொந்தம் அல்ல, பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானா லும் பாடலாம்' என்பதை மெய்ப்பித்தவர். மெட்ராஸ் யூத் கொயர் என்ற இசைக்குழுவை 1970இல் தொடங்கினார். சாதாரணத் தொழிலாளிகள், வங்கி ஊழியர்கள், மாணவர் கள், ஆசிரியர்கள் ஆகியோர்தான் பாடகர்கள்! 5000 பேர் பாட ஒரு சேர்ந்திசை நிகழ்ச்சியை 1984ஆம் ஆண்டு சென்னை குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் நடத்திக் காட்டினார்! இளையராஜா இன்று புலம்புகின்ற 'இசை ஒரு புனிதம், ஆன்மிகம், தவம்' போன்ற மேல்த்தட்டு கற்பிதங் களை உடைத்துக்காட்டியவர். இத்தனைக்கும் அவர் மலை யாளத்திரைப்பட உலகில் வெற்றி பெற்ற பல படங்களின் இசையமைப்பாளர். தேசவிடுதலைக்கான போராட்டத்தில் மும்முரமாக தங்களை இணைத்துக்கொண்ட எழுத்தாளர் களும் கலைஞர்களும் ஒன்றுக்கூடி ஏற்படுத்திய அமைப்பு தான் இந்திய மக்கள் நாடக மன்றம் (மிஸீபீவீணீஸீ றிமீஷீஜீறீமீs ஜிலீமீணீtக்ஷீமீ கிssஷீநீவீணீtவீஷீஸீ மிறிஜிகி). அதில் அவர் உறுப்பினர். எல்லாவற் றுக்கும் மேலாக அவர் மக்களுடன், தொழிலாளிகளுடன் தெருவில் நின்று பாடியவர்.

தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் மகிழ்ச்சிகரமான தருணங்களில் மட்டுமே பங்கு கொள்பவன் கலைஞனோ விஞ்ஞானியோ அல்லன். மக்களால் அங்கீகரிக்கப்படு கின்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளுக்கு சமூகக்கடமை உண்டு. தன்னைச் சுற்றி மனிதர்கள் குடல் உருவப்பட்டு செத்து விழும்போதும் பெண்கள் நடுவீதி யில் கும்பலாக வன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற போதும் குழந்தைகள் வாணலியில் வறுக்கப்படுகின்ற போதும் கண்டும் காணாமல் இருப்பதும், "எல்லாம் நல்லபடியே நடக்கின்றது" என்று வசனம் பேசுவதும், "எல்லாரும் கனவு காணுங்கப்பா" என்று குஷிப்படுத்துவதும், "இந்தியா 2020இல் வல்லரசாகி விடும்" என்று உடுக்கை அடித்துக் குறி சொல்வதும், 'எல்லாம் இறைவன் செயல்' என்று அள்ளி விடுவதும், சமூகத்துக்கு செய்கின்ற துரோகம். சாமானிய மக்கள் துன்புறுத்தப்படுகின்றபோது, அவமானப்படுத்தப்படும்போது, உரிமைகள் மறுக்கப்படு கின்றபோது, கலைஞனும் விஞ்ஞானியும் தமது அடை யாளத்தையும் மதிப்பையும் அங்கீகாரத்தையும் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டவும் ஒரு சலசலப்பை உரு வாக்குவதற்கான, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதுதான் நியாயம். எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து உலகின் கவனத்தை ஈர்ப்பதுதான் நியாயம். சக மனிதன் கொடுத்த காசுகளால் வயிறு நிரப்பி, அதே சமூகம் பற்றி எரிகின்றபோது கண்டு கொள்ளாமல் இருப்பவனும் வாயைத் திறக்காமல் மவுனம் காப்பவனும் சுயநலமி, பச்சைத்துரோகி இல்லாமல் வேறு யார்?

தொடக்கத்தில் குறிப்பிட்ட எம்.பி.சீனிவாசனும், மறைந்த எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோ ரும், மூத்த எழுத்தாளர்கள் ப்ரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், விஜய் தெண்டுல்கர், அமர்த்தியா சென், ஜெயகாந்தன், மஹேஷ் பட், இவர்களோடு சபானா ஆஷ்மி யும், ஜாவேத் அக்தரும், எம்.எஃப்.ஹ§சேனும், ஓவியர்கள் விஷ்வமும், ட்ராட்ஸ்கி மருதுவும், வீர.சந்தனமும், கூத்துப் பட்டறை முத்துசாமி போன்ற பலரும் தமது சமூகக் கடமையை சரியாகவே செய்தார்கள், செய்து வருகிறார்கள். கலைஞர்களும் மேதைகளும் விஞ்ஞானிகளும், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் தமது கருத்துக்களைப் பதிவு செய்வ திலும், உழைப்பாளி மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக் கும் தலித்துக்களுக்கும் எதிராக எப்போதெல்லாம் அராஜகங் கள் நிகழ்த்தப்படுகின்றனவோ அப்போதெல்லாம் தமது எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்வதிலும், சாமானிய மனி தனை ஒரு ஜடப்பொருளாகவும் வியாபாரப்பொருளாகவும் அரைத்து சாற்றை விழுங்கி சக்கையைத் துப்புகின்ற உலகமயம்+தாராளமயத்துக்கு எதிராக குரல் எழுப்புவதி லும் ஒரு அரசியல் இருக்கவே செய்கின்றது. அது அடக்கு முறைக்கு எதிராகவும் நியாயத்துக்கு ஆதரவாகவும் நிற்கின்ற அரசியல். இன்றைய உலகமய, தனியார்மய, தாராளமய சூழலில் கலைஞர்கள், அறிவாளிகளின் குரல் அதிகமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்லது.

நம் ஊரில் அப்துல் கலாம் என்று ஒருவர் இருக்கின் றார். மீன்பிடித்தொழில் செய்கின்ற கடற்கரையோர கிராமத்தைச் சேர்ந்த, மீன், கருவாடு, மாமிசம், உப்புக் கண்டம் உண்கின்ற ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்தவர். இந்திய சமூகத்தில் பொ£ய்ய விஞ்ஞானியாக அடையாளம் காணப்படுபவர். தான் தயிர்சாதம் சாப்பிடுவதாகவும், மாமிசம் சாப்பிடுவதில்லை என்று கூறுவதன் மூலமும், வீணை வாசிப்பது, ராகங்களின் பெயர்களைச் சொல்வதன் மூலமும், 'எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்வ தற்கு; நடந்ததெல்லாம் நல்லதற்கே, நடக்கப் போவதும் நல்லதற்கே' என்ற பகவத்கீதை வசனங்களைப் பேசுவதன் மூலமும் தன்னை பார்ப்பனீய கும்பலுடன் அடையாளப் படுத்திக்கொண்டார்.

குஜராத்திலும் ஒரிசாவிலும் சிறுபான்மை முஸ்லிம் கள், கிறித்துவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கும்பல் படுகொலை நடத்திக் கொண்டிருக்கும்போது விஞ்ஞானி என்ற மேதைமையோடு அடையாளம் காணப்படும் தனது முஸ்லிம் அடை யாளத்தை ஜனாதிபதி பதவிக்காக ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கும்பலுக்கு விற்றவர்தான் அப்துல் கலாம். இதன் மூலம் இந்திய சிறுபான்மைச் சமூகத்துக்கு நெருக்கடியான நேரத்தில் துரோகம் செய்தவர். அவர் ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் தன்னை விற்ற பின், அரசு அலுவலகங்களில் மேசையில், மூன்று சங்கராச்சாரியார்கள் படத்துக்கு அருகே இவரது படத்தையும் வைத்து பார்ப்பன அடையாளம் கொடுத்து கொண்டாடியது மேல்சாதிக் கூட்டம். ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதாவின் அணுகுண்டு அரசியலின் மென்மையான முகமூடியாக, வக்கீலாக கலாம் இருந்ததால், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர் களும் பேருந்து, ரயில், போஜனசாலை, கக்கூஸ் போன்ற பொது இடங்களில் அவரது சாத்வீக குணங்கள் பற்றி தீவிர விளம்பரம் செய்தார்கள்.

அப்துல் கலாம் மட்டுமல்ல, இந்திய சமூகத்தின் அறிவுஜீவிகள் என்று அறியப்படுகின்றவர்களில் பெரும் பாலோரின் மூளைகளில் உயர்சாதி பார்ப்பனீய சிந்தனை களும், தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துக் களும்தான் பாசிபிடித்து அப்பிக்கிடக்கின்றன என்பதை யும், விஞ்ஞானிகள் என்று அறியப்படும் பலர் உண்மை யில் விஞ்ஞானத்துக்கு சற்றும் தொடர்பில்லாத மாதச்சம்பள பழைமைவாத பத்தாம்பசலிகளே என்பதையும் நானே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன்.

2ம் உலகப்போர் தீவிரநிலையை எட்டியிருந்த நேரம் அது. புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட், நீல்ஸ்போர், வானெவர் புஸ், ஜேம்ஸ் கானன்ட், பொருளாதார நிபுணர் அலெக்சாண்டர் சாக் ஆகி யோர் 1945 காலகட்டத்தில் அமெரிக்காவோ ஜெர்மனியோ அணுகுண்டு வீசக்கூடும் என்ற ஐயத்தில் அணுகுண்டுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். நீல்ஸ்போர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டையும், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சி லையும் நேரில் சந்தித்து "புதிய ஆயுத"த்தை மக்கள் மத்தி யில் வெட்டவெளிச்சமாக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், ஜெர்மனியை சரணடையுமாறும் வேண்டிக் கொண்டார்.

2003ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்து, மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டார்கள். இத்துயர சம்பவம் நடந்த ஒரு சிலநாட்களுக்குப் பிறகு அதே குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் பெரிய்ய அறிவாளியான கலா முக்கு விருது வழங்கப்பட்டது. கோத்ரா சம்பவம் பற்றியோ தொடர்ந்த கொலைகள் பற்றியோ எள்முனை அளவுகூடக் கவலை இல்லாதவராக, இவை பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் விருதை வாங்கிக்கொண்டு வந்த வர்தான் கலாம். அடுத்த ஜனாதிபதியாக இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஐயர் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று குதூகலத்துடன் சொன்னபோது இவருக்குள் இருந்த முதலாளித்துவவாதி யும் வெளியே வந்தான். இந்திய சட்டம் சொல்கின்ற எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு போன்ற அடிப் படை உரிமைகளை மதிக்காத, தனது தொழிலாளிகளின் உண்மையான சம்பளம் எவ்வளவு என்பதைக்கூட தைரிய மாக வெளியே சொல்லாத மோசடி நாராயணர்களின் வக்கீ லாக கலாம் அம்பலமானார். ஒரு பானை நாராயண மூர்த்தி களுக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்கராஜூ என்ற ஒரு சோறுதான் பதம். கலாமுக்கு இந்த சாதம்தான் பிடிக்கின்றது.

எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதி. அப்போதெல் லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை ஒலிபரப்பு தென்மாவட்ட மக்களின் ரத்தத்தோடு கலந்த ஒன்று. அதிகாலை ஐந்தரை தொடங்கி காலை பத்து மணிவரையும், மீண்டும் பன்னிரண்டு தொடங்கி மாலை ஆறு வரையும் வங்கக்கடல் தாண்டி பாட்டோடு தமிழும் காற்றோடு எமது காதுகள் வழியே இதயத்தில் நிரம்பி வழிந்த காலம். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா, தண்டபாணி தேசிகர், டி.ஆர்.மஹாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள், பி.லீலா, வசந்தகோகிலம், கண்ட சாலா,எம்.எல்.வசந்தகுமாரி, ஏ.எம்.ராஜா, ஜிக்கி என்ற கிருஷ்ணவேணி...என்று இவர்களின் குரலில் பள்ளி செல் லும் அந்த வயதிலேயே லயிப்பு வர இலங்கை வானொலி மட்டுமே காரணம். ஜி.ராமனாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சீ.ராமச்சந்திரா, தட்சிணாமூர்த்தி சுவாமிகள், சுதர்சனம், ஏ.எம்.ராஜா, இந்த வரிசையில் எம்.எஸ்.விஸ்வ நாதன், ராமமூர்த்தி, மஹாதேவன் ஆகியோரின் கொடி உயரப்பறந்து கொண்டிருந்த காலம். தென்றல், சாரல், மழை, அடைமழை...என்று போய்க்கொண்டிருந்த தமிழ்த் திரையின் வானிலையில் திடீர் என ஒரு மாற்றம் ஏற்பட்டு, சூறாவளி அடித்து அது பெரும் புயலாக உருமாறி "மச்சானப் பாத்தீங்களா.." என்று ஒவ்வொரு வீட்டுக்குள் ளும் நுழைந்து விசாரிக்க ஆரம்பித்தது... தமிழ்நாட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அதன்பின் இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஒன்பது முறை அந்தப் பெண் எஸ்.ஜானகியின் குரலில் மச்சானத் தேடிக் கொண்டிருந்தாள்... ஒரு பக்கம் மச்சானை இவள் தேடிக் கொண்டிருக்க, மறுபுறம் "சுத்தச்சம்பா பச்சநெல்லு குத்தத் தான் வேணும்.." என்று ராக்காயி, மூக்காயி போன்ற பொண்ணுக தெருவுக்குத்தெரு உலக்கை சத்தத்துடன் நெல்லுக்குத்த ஆரம்பித்தார்கள். கால் மாத்திரை, அரை மாத்திரை, மில்லிமீட்டர், சென்டிமீட்டர் ... என எந்த நேரமும் ஒரு கையில் இன்ச் டேப்புடனும், இன்னொரு கையில் வெட்டரிவாளுடனும் வலம் வந்துகொண்டிருந்த சுப்புடு போன்ற "மஹாமேதை"களால் அதுவரை வரை யறுக்கப் பட்டிருந்த வாய்ப்பாடு, சூத்ரங்கள், ஆரோகணம், அவரோகணம் போன்ற கட்டுப்பாடுகள், எல்லைகள் எதற்கும் அடங்காமல் சிறகு விரித்துப் புறப்பட்ட இந்தப் பாடல்கள் சாமானிய மக்களின் இதயத்தில் சாணம் போட்டு மெழுகி சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டன. இளையராஜா என்ற கலைஞன் இந்தப்புயலை ஏவி விட்டி ருந்தான். கோடம்பாக்கம் கதி கலங்கியது. சுப்புடுக்கள் சபாக்களில் கூட்டம் போட்டுப் பேச ஆரம்பித்தார்கள். "ஏற்கனவே கொடிகட்டி ஆண்டுண்டிருக்கிற நம்மவா கதி என்னாறது?" என்று பதட்டப்பட ஆரம்பித்தார்கள். கோடம்பாக்கத்தில் அன்னக்கிளியும் இளையராஜாவும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்கள். அன்று கொடி கட்டிப் பரந்த குறிப்பிட்ட ஒரு ஆண் பாடகர் இளைய ராஜாவிடம் பாட மறுத்ததும் உண்மை. அந்த இடத்தை மலேசியா வாசுதேவன் என்ற இளைஞன் பிடித்தான்.

யார் இந்த இளையராஜா? அன்றைய மதுரை மாவட்டத்தின் பண்ணைப்புரத்தில் தலித் சமூகத்தில் பிறந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பாடகராக இருந்த பாவலர் வரதராசனின் இளையசகோதரர். கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் வரதராசனும் அவரது சகோதரர்களான பாஸ்கர், ராசையா, அமர்சிங் (கங்கை அமரன்) ஆகியோரும் பாடாத கிராமங்களும் நகரங்களும் தமிழ்நாட்டில் இல்லை.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மூத்த தோழரான டி.செல்வராஜ் தீக்கதிர் வண்ணக்கதிரில் (2.10.2005) கூறி யிருப்பதை அப்படியே தருகின்றேன்: "பாவலர் வரதராசன் இசைக்குழு அமைப்பதற்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். 1958ஆம் ஆண்டில் கேரள மாநிலம் தேவிகுளம் தாலுகாவில் (இப்போதைய இடுக்கி மாவட்டம்), தேயிலைத்தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கப் பணிக்காக தமிழகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழுவால் முழுநேர ஊழியராக அனுப்பப்பட்டவர் அவர். அப்படிப்பட்ட சூழலில்தான் கேரள மாநிலத்தில் இருந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிப் பாடு தலைமையிலான கம்யூனிஸ்ட் மந்திரிசபையைக் காப் பாற்றும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தேவிகுளம் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள அமைச்சரவையைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது சக்தி முழுவதையும் திரட்டித் தேர்தல் களத்தில் குதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி.பொன்னூசின் துணைவியார் தோழர் ரோசம்மா பொன்னூஸ்.

"அப்போது முழுநேர ஊழியராக இருந்த தோழர் வரதராசனின் பிரச்சார ஆயுதம் அவரது இசைஞானமும் கவிதையாக்கும் திறமையும்தான். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று 'மைக்' கில் அவர் பாட ஆரம்பித்தார் என்றால் மக்கள் சாரை சாரை யாக பாட்டின் நாதம் கேட்டு கூடுவதே பெரும் காட்சியாக இருக்கும். நடுநிசியில் கூட மக்கள் அந்தப்பாடல்களைக் கேட்கக் கூடுவார்கள்.... இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போனது. அதற்குப் பிறகுதான் பாவலர் வரத ராசன், தோழர் ஐ.மாயாண்டி பாரதியின் ஆலோசனை அடிப்படையில் தனது சகோதரர்களை இணைத்து இசைக் குழு அமைத்து தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்".

28 வருடங்களுக்கு முன் பாவலர் பாடல் தொகுப்புக்கு இளையராஜாவே எழுதிய முன்னுரை இது: "இப்பொழுது கூட நான் வேடிக்கையாகச் சொல்வது உண்டு. மாட்டுவண்டி போகாத ஊருக்குக்கூட எங்கள் பாட்டுவண்டி போயிருக்கு. இது வெறும் வார்த்தையல்ல. பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம். இன்று கூட நான் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆர்மோனியப் பெட்டியைப் பலமைல்கள் தலையில் தூக்கி நடந்து சென்று கிராமம் கிராமமாகப் பாடியிருக்கின்றோம்".

பாவலரின் அரவணைப்பில், அவரது அறிவொளி யில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோள்களில் நின்று உலகைப் பார்த்து வளர்ந்தவர், தமிழ் மக்களின் இசை ரசனையை நேருக்குநேர் அறிந்தவர் ராசையா என்ற இளையராஜா. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டு மெனில் தமிழ்த்திரைப்பட உலகம் ஒரு மாற்றுத்திசையில் பயணப்பட்ட நேரம். எம்.ஜி.ஆர்., "பாவம் சினிமா, விட்டு விடுவோம்" என்று ஒதுங்கி அரசியலைச் சீரழிக்க சென்று விட்ட காலம். பாரதிராஜா, பாக்கியராஜ், ஆர்.செல்வராஜ், துரை, எம்.ஏ.காஜா, பாலுமஹேந்திரா, மகேந்திரன், அசோக்குமார் போன்ற புதியவர்கள் புதிய கதைகளுடன், புதிய காமிராக் கோணங்களுடன் சினிமா எடுக்க, நல்ல காலம் பிறந்தது. சாதாரண முகங்களுடன், குறிப்பாக கறுப்பு மனிதர்களை கதாநாயகர்களாக பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டு தியேட்டர்களின் திரைச்சீலைகள், தங்கள் மேல் வருடக்கணக்கில் அப்பிக்கிடந்த ஜிகினாக்களையும் டோப்பா மயிர்களையும் உதிர்த்துவிட்டு குளித்து நிம்மதிப் பெருமூச்சு விடத்தொடங்கிய நேரம். பொதுவாக அது வரை 'இதுதான் கதை', 'இவன்தான் கதாநாயகன், நாயகி' என்று அறியப்பட்ட பெரும்பான்மை சினிமாக்களில் இருந்து இவர்களின் கதைகள் வேறுபட்டு நின்றன என்பது உண்மை. கதைகள் தங்களை ஈர்த்ததனால்தான் அன்று கொடிகட்டிப்பறந்த கமலஹாசன் கொவணத்துடன் நடித் தார்; ரஜினிகாந்த் ஆன்டிஹீரோத்தனமான பாத்திரங்களை யும் ஏற்று நடித்தார். புதிய இயக்குனர்கள், கதையாளிகளின் சிந்தனைகள், விளிம்பு நிலை மக்களின் கதைகளையும் சொன்னதால், திரையிசையின் வடிவமும் போக்கும் கூட வேறு பரிமாணங்களைக் காட்ட வேண்டியிருந்தது.

இந்த புதிய கதைசொல்லும் போக்குக்கு இளையராஜாவின் இசைவடிவம் பொருந்தி, அதுவரை என்போன்ற பயல்கள் கேட்டுக்கொண்டிருந்த இசைவடிவத்தில் இருந்து இளைய ராஜாவின் வடிவம் வித்தியாசமாக இருந்ததாக மனசுக்குப் பட்டதற்கு காரணம் புதிய கதையோடும் கதை சொல்லலோடும் இசைந்த அவரது இசைதான்.

நாட்டார் பாடல்களின் பாரம்பரிய வளமும் மக்கள் வாழ்வோடு இசைந்த தன்மையும் இசை வடிவமும் அவர் இசையின் மையமாக இருந்தன, மண்ணின் இசை. எனவே மக்கள்திரளில் பெரும்பாலாக இருக்கின்ற உழைக் கும் மக்களின் ரசனையைக் கைப்பற்ற முடிந்தது, சாமானிய மக்களின் இசையமைப்பாளர் என்ற பெயரைக் கைக் கொள்ள முடிந்தது. எங்கிருந்து கற்றீர்கள் இந்த இசையை இளையராஜா? "பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம்". 1975ல் அன்னக்கிளியில் தொடங்கிய இளைய ராஜாவின் பயணம் திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் தொடர்ந்தது. தமிழ்ச்சினிமாவின் இசைப்பாதை இவருக்கு என்றே திறந்து கிடந்தது.

ஆனால் அவரது பயணத்தின் பாதையில் இரண்டு புறங்களிலும் இருந்த மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த பார்ப்பனீயப்பேய்கள் பல்லை இளித்து பயங்காட்டி அவரை விரட்டப் பார்த்தன என்பது வரலாறு. இன்றைக்கு அவரை ஒரு மேதை என்று பேசுகின்ற பல மேல்சாதி 'சங்கீத தெர்மாமீட்டர்'கள் அன்று அவரை ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே பார்த்தவர்கள். சுப்புடு போன்ற 'சங்கீத பாராமீட்டர்'கள் எப்படியாவது அவரை திரையுல கிலிருந்து துரத்திவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சதிகளும் சாகசங்களும் ஏராளம். ஆனால் இளையராஜாவின் பெயர் தமிழ்மக்களின் வீடுகளில் தண்ணீரைப் போல் சாதாரணமாக புழங்க ஆரம்பித்தது கண்டு, கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்த பார்ப்பனர்கள், பொழைக்கிற வழியைப் பார்த்தார்கள். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே வண்டுமுருகன் (வடிவேலு) கட்சி மாறி சைக்கிளில் உட்கார்ந்து டாட்டா காமிக்கிறது மாதிரி, இவர்களும் இளையராஜாவை சடுதியில் இசைஞானி என் றும், இசைத்துறவி, இசைச்சாமியார், இசைப்பூசாரி, சக்ர வர்த்தி, மெழுகுவர்த்தி என்று தலையில் தூக்கி ஆட ஆரம் பித்தார்கள். ஒரே காரணம் - போஸ்டரில் இளையராஜா பேர் இருந்தால் படம் கண்டிப்பாக நூறு நாள் ஓடும், கல்லாப் பெட்டி நிரம்பி வழியும். இங்கேதான் சனியன் பிடித்தது.

இளையராஜா பார்ப்பனீய துதிபாடிகளின் வலை யில் விழுந்தார். சாமானிய மக்களிடமிருந்து விலக ஆரம் பித்தார். 'ஜனனி ஜனனி, அகம் நீ', 'முதலே முடிவே, மூகாம்பிகையே', 'என் பாவக்கணக்குக்கு பட்டியல் போட் டால் சொல்ல நடுங்குதம்மா' என மேல் சாதி கடவுள்களின் அருள்வேண்டி கீதவழிபாடு கேசட் போட்டார்; அவர்களை இறைஞ்சி மனம் உருகி எழுதிய பாடல்களுக்குத் தானே இசை அமைத்து கச்சேரி செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட கோடிக்கணக்கில் நிதி, மூகாம்பிகை கோவில் யாத்திரை என மேல்சாதி வேடம் போட ஆரம்பித் தார். 'ரமணமணிமாலை' பாடினார். மறந்தும்கூட சிறு தெய் வங்கள், தனது கிராமம், உழைக்கும்மக்கள் பற்றி பேசியது இல்லை. முக்கியமாக, மக்கள் பிரச்னைகளைப் பேசி உரிமைக்குரல் எழுப்புகிற,ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பேசுகின்ற தனது அண்ணன் பாவலர் வரதராசனின் பாடல் களையும், அதேபோல் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் முழங்குகின்ற பாப் டில்லான் போன்ற மக்கள் பாடகர்களின் இசையையும் "அந்தக் குப்பைகளை ஏன் கிளறுகின்றீர் கள்?" என்று எடுத்தெறிந்து இழிவாகப்பேச ஆரம்பித்தார். நாட்டார் இசை வடிவங்கள்தான் தனக்கு வழியை காண்பித் தன, மக்களின் ஆதரவைக் கொடுத்தன, கேசட்டுகளாக லட்சக்கணக்கில் விற்று தனது வயிற்றை நிறைத்தன என் பதை மறக்க ஆரம்பித்தார். "தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை சோப்பு போட்டுக் குளித்தாலும் சுத்தம் ஆகமாட்டார்கள்" என்று கொழுப்பெடுத்துப்பேசிய கோவணாண்டிகளின் படங்களை தினமும் பூஜை செய்ய ஆரம்பித்தார், ஆதிசங்கரரை கும்பிடுவதாக எழுதினார். கோடம்பாக்கத் தின் மேல்சாதி வட்டாரமும் சபாக்கச்சேரி வட்டாரமும் இப்போது அவரை ஆஹா ஓஹோ என்று கொண்டாடத் தொடங்கின. சுஜாதா போன்ற 'அறிவாளி' விஞ்ஞானிகள் இவரது புகழ் பாடினார்கள்.

தலித்துகளை ஏற்கனவே நாயினும் கீழாக வைத்தி ருக்கின்ற பார்ப்பனக்கூட்டத்தின் முகத்தில் காறி உமிழ் வதை விட்டுவிட்டு, 'திருவாசகம்' என்ற தனி ஆல்பத்தில் தன்னை 'நாயினும் கீழோன்', 'கடையோன்' (நாயிற் கடை யாய்க் கிடந்த அடியேற்கு..என்ற திருவாசகப்பாடல்) என்று இளையராஜா தன்னை அழைத்துக் கொண்டார். இவ்வாறு தன்னை நாயினும் கீழோன் என்று தாழ்த்திக்கொண்ட தால்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான (நவரத்தினங்களில் ஒன்று) எண்ணெய் இயற்கை எரிவாயுக் கமிஷன் (ளிவீறீ ணீஸீபீ ழிணீtuக்ஷீணீறீ நிணீs சிஷீனீனீவீssவீஷீஸீ) இந்த பாடல் தகட்டின் ஸ்பான்சராக இருந்தது.அதாவது மக்கள் பணத்தை சூறையாடியது! பொதுத்துறை வங்கிகளும் நிறுவனங் களும் கடந்த சில வருடங்களாக கூச்சநாச்சம் ஏதுமின்றி இந்த வேலையை தந்திரமாக செய்து வருகின்றன. இதே போல் இஸ்லாமிய, கிறித்துவ, தலித் சமூகத்தினரின் பாடல் களோடு, தந்தை பெரியார், அம்பேத்கரின் போதனைகளை யும் கேசட்டுக்களாக, குறுந்தகடுகளாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் மத்தியரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்! 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, ஐயனே' என்று பிச்சைப்பாத்திரமும் ஏந்தினார். 35 வருடங் களுக்கு முன் 'ஆதி பராசக்தி' என்ற படத்தில் வந்த 'ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா, ஆழாக்கு அரிசிய பாழாக்க வேண்டாம், தின்னுப்புட்டு போடியம்மா' என்று சோறு ஆக்கி வைத்து 'ஏய், வந்து தின்னுட்டுப் போறியா இல்லியா?' என்று சாமியையே அதிகாரம் பண்ணுகிற அந்தப்பாட்டு எத்தனையோ மேல் அல்லவா!

உச்சகட்டமாக, ஞான.ராஜசேகரன் இயக்கிய 'பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்ததன் மூலம் தன்னை சனாதனக்கூட்டத்தின் விசுவாசி என்று உறுதி செய்தார். வேட்டியும் செருப்பும் அணிய முடியாமல் குறைந்தபட்ச மானமுள்ள மனிதனாகக் கூடவாழ முடி யாமல் கிடந்த தமிழக தலித் சமூகம் தலைநிமிர வழிசெய்த பெரியாருக்கு ஒரு தலித்தே துரோகம் செய்தது கண்டு பார்ப்பனக் கூட்டம் குஷியானது. இளையராஜா தலித் சமூகத்தின் துரோகியானார்.

திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் மனித மலத்தை திணித்தபோதும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துக்களில் தலித்து கள் தலைவராவதற்கு ஆதிக்கசாதி வெறியர்கள் மறுத்து அவமதித்தபோதும், தான் பிறந்த அதே மாவட்டத்தில் உத்தப்புரம் என்ற ஊரில் சுவர் கட்டி தலித்துகளை ஆதிக்க சாதிக் கூட்டம் கேவலப்படுத்தியபோதும் இளையராஜா போன்ற தலித் சமூகத்தவர்கள் வாய் திறக்க மறுப்பது துரோகம் எனில், பார்ப்பன வேசம் போடுவது அதனினும் துரோகம்.

ஏற்கனவே தாழ்ந்த குலத்தில் பிறந்தவரென நந்தனாரை நாயை விடவும் கேவலமாக நடத்திய பார்ப் பனக்கூட்டம் தந்திரம் செய்து நந்தனை தீயில் தள்ளி 'அவன் ஜோதியில் கலந்துவிட்டான்' என்பதாக கதை திரித்தது. மேல்சாதியை மறுத்த, பிள்ளைமார் வகுப்பில் பிறந்த வள்ள லாருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. அவரும் ஒரு நாள் 'ஜோதியில் கலந்தார்'. இது இன்று நேற்று கதை அல்ல, ஏகலைவன், கர்ணன், சம்பூகன், குகன், ராவணன் என்று காலங்காலமாக 'ஜோதியில்' கலந்தவர்கள் ஏராளம். ராசையாவின் கதை இப்படிப் போனது.

இளையராஜாவும் அப்துல் கலாமும் மறந்துவிட்ட அல்லது தெரியாததுபோல் நடிக்கின்ற ஒரு உண்மை உண்டு - என்னதான் திருவாசகம், மூகாம்பிகை, தயிர்ச்சாதம், பகவத் கீதை என்று வேசம் போட்டாலும், ராசைய்யாவும் கலாமும் கருவறைக்கு உள்ளே போக முடியாது. பூணூல் போட்டாலும் பார்ப்பனக்கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. தனது குலத்தில் பிறந்தாலும் பாரதியாரையே ஒதுக்கி வைக்கத் தயங்காத கூட்டம்தான் அது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் அல்லா ரக்கா ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 'லட்சாதிபதி யான சேரிநாய்' என்ற பொருள்படும் 'ஸ்லம்டாக் மில்லிய னேர்' (ஷிறீuனீபீஷீரீ விவீறீறீவீஷீஸீணீவீக்ஷீமீ) என்ற இந்திய ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்ததற்காகவும், அதே படத்தில் 'ஜெய் ஹோ!' (ஜெயிப்போம்) என்ற பாடலைப் பாடியதற் காகவும் அவருக்கு இரண்டு விருதுகள். அவர் விருது பெற்ற பின் தமிழில் பேசிய "எல்லாப்புகழும் இறைவனுக்கே!" என்ற சொற்றொடர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது 26.2.2009 நள்ளிரவு 2.30 மணிக்கும் மேல். ஆனால் வெளியே அவரை வரவேற்கும் கூட்டம் அலை மோதுகின் றது. சிவமணி என்ற தோல்கருவி இசைக்கலைஞர் தன்னை விடவும் பெரிதான ஒரு மேளத்தை உடலில் கட்டிக் கொண்டு அடித்து ஆடுகின்றார். பக்கத்தில் கேரள மக்களின் பாரம்பரிய செண்டைமேளக் கலைஞர்கள் வாசித்து தூள் கிளப்புகின்றார்கள். ரஹ்மான் வசிக்கின்ற கோடம்பாக்கம் சுப்புராயன் தெரு மக்கள் மதபேதங்கள் ஏதுமின்றி "அவர் இருக்கின்ற தெருவில் நாங்கள் இருப்பது எங்களுக் கெல்லாம் பெருமை" என்று பெருமை கொள்கின்றார்கள்.

சர்வதேச அளவில் வழங்கப்படும் விருதுகள், அங்கீ காரங்கள் அனைத்துக்கும் பின்னால் 'சர்வதேச வியாபார அரசியல்' இல்லை என்று யாராவது நம்பினால் அவர்கள் அப்பாவிகளே. 120 கோடி மக்கள் கொண்ட இந்தியாவுக்குள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், குறிப்பாக அழகு சாதனப்பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்தவும் "இந்தியப் பெண்கள்தான் உலகின் மிகச் சிறந்த அழகிகள்" என்று கண்டுபிடித்து தொடர்ந்து இந்தியப் பெண்களுக்கு உலக அழகி, பிரபஞ்ச அழகி, பாதாள அழகி, ஈரேழுலோக அழகி போன்ற பட்டங்களை சர்வதேச முதலாளிகள் அள்ளி அள்ளி வழங்கியதை இப்போது நினைக்கத் தோன்றுகின்றது. பொருள்+குறைந்த பட்ச லாபம்= சில்லரை வணிகம். பொருள்+ விளம்பரம்+ இங்கிலீஸ்+பகல் கொள்ளை லாபம்=கார்ப்பொரேட் வணிகம். காங்கிரசும் பாரதீய ஜனதாவும் இரண்டாவது வகை கடைக்காரர்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சர்வதேச இசையமைப்பாள ராக ஏற்கனவே அடையாளம் பெற்றுள்ளார். இந்த நிலை யில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதன் பின்னணி யில் 'சர்வதேச வியாபார அரசியல்' இருப்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். 'அதெல்லாம் முடியாது, நீ உடன டியாக நிரூபிக்கணும்' என்று கேட்கின்றீர்களா? 'ஜெய் ஹோ' பாட்டை இந்திரா காங்கிரஸ் கட்சி தனது தேர்தலுக் கான பிரச்சாரப் பாடலாக இப்போது வாங்கி இருக்கின்றது. 'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற பழைய சரக்கை விடவும் 'ஜெய் ஹோ' என்ற புதிய சரக்கு நல்ல லாபத்தை அள்ளிக்கொடுக்கும் என்பதை காங்கிரஸ் கடைக்காரர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். வாய்மை யாவது மண்ணாவது! இதில் ரஹ்மானுக்கு நேரடியாக ஏதாவது தொடர்பு உண்டு என்பதாக இதுவரை செய்தி இல்லை. 'அடடா, நழுவ விட்டுட்டோமே' என்று பாரத மாதாவின் நேரடி வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா தீவிரவாதிகள் கவலைப்பட்டு அழுவதாகவும், உடனடி போர்க்கால நடவடிக்கையாக 'ஜனங்க ஏமார்ற மாதிரி அதிரடியா ஒரு பாட்டுப்போட்டுக் குடுங்க' என்று பிரபல திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு டெண்டர் விட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

உண்மையில் 'ஜெய் ஹோ!' என்ற இந்தப்பாடல், ரஹ்மான் பத்து வருடங்களுக்கு முன் தமிழில் இந்திரா என்ற படத்தில் செய்த "இனி அச்சம் என்பதில்லை" என்ற பாடலின் சாயலே. இதை விடவும் நல்ல பாடல்களை அவரே தந்தி ருக்கின்றார் என்பதும் உண்மை. தவிர, தரத்தின் அடிப்படை யில் ஒப்பிட்டால், இதுவரை தமிழில் இளையராஜா செய்த பல பாடல்களின் பக்கத்தில்கூட இந்த 'ஜெய் ஹோ' வர வில்லை. பலர் விமர்சிப்பதுபோல் ரஹ்மானின் பாடல் களில் மேற்கத்திய சாயல் அதிகம் இருப்பதும் உண்மையாக இருக்கலாம். இசையின் தகுதி குறித்தோ அதன் நீள, ஆழ, அகலங்கள் குறித்தோ இங்கு நான் பேச முற்படவில்லை, நான் இசை விற்பன்னனும் அல்லன். ஆனால் விருது பெற்ற ரஹ்மான் அதன் பின் பேசிய பேச்சு, ரஹ்மான் என்ற கலைஞனுக்குள் இருக்கின்ற இசை குறித்த அரசியலையும் அவருக்குள்ளான அரசியல் பார்வையையும் இன்றைய சூழ்நிலையில் முக்கியத்துவப்படுத்துகின்றது.

ஆர்.கே.சேகர் என்ற இசையமைப்பாளரின் மகனே திலீப். மலையாளத்தில் 60 படங்களுக்கும் மேலாக செய்த வர் சேகர். திலீப் மிகச் சிறிய வயதிலேயே இசைஞானம் பெறுகின்றார். தந்தை இறந்துவிட, குடும்பம் சிரமத்தில் ஆழ்ந்துவிட, திலீப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மாறு கின்றார். கூடவே அவரது மூன்று சகோதரிகளும் தாயாரும் இஸ்லாமைத் தழுவுகின்றனர், சூஃபி பிரிவின் மீது பற்று கொள்கின்றார். ஒருநிமிட, அரைநிமிட விளம்பரப்படங் களுக்கான இசை அமைத்து வாழ்க்கையைத் தொடங்குகின் றார். பின்னாட்களில் இளையராஜா போன்ற இசையமைப் பாளர்களிடம் இசைக்கோர்ப்பாளராக (நீஷீனீஜீஷீsமீக்ஷீ) பணி செய்கின்றார். ரஹ்மான் 'ரோஜா' படத்தின் மூலம் திரையில் நுழைந்தார். 'இஸ்லாமும் சூஃபி தத்துவ நம்பிக்கையும் எனக்கு அமைதியையும் மனஉறுதியையும் அளித்தன' என் கிறார் ரஹ்மான். இறைவனை மட்டுமே மதங்கள் பிரதா னப்படுத்தும்போது, சூஃபி பிரிவினர் மனித வாழ்க்கை யையும் மனித உறவுகளையும் மேம்படுத்தப் பேசுகின் றன. மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தத்தம் மதம் தமக்கு அமைதியும் மன உறுதியும் அளிப்பதாகக் கூறுவது வழக்கமே. அது அவர்களது உரிமையும் கூட.

ரஹ்மானின் திரைப்படப்பாடல்கள் யாரோ எழுதித் தர ஏதோ ஒரு இடத்தில் படத்தில் இடம் பெறலாம். ஆனால் ரஹ்மான் என்ற கலைஞனுக்குள் இருக்கின்ற சமூகம் குறித்தான பார்வையும், அவன் தனது கலைத் திறனை எதற்கு பயன்படுத்த விரும்புகின்றான் என்பது வுமே மிக முக்கியமானதாக நான் கருதுகின்றேன். அவரே வெளியிட்ட 'சகோதரனே, எனக்காக பிரார்த்தனை செய்' (றிக்ஷீணீஹ் யீஷீக்ஷீ னீமீ, தீக்ஷீஷீtலீமீக்ஷீ) என்ற தனிப்பாடல்களின் மையக் கருத்து இப்படி இருக்கின்றது: "உலகில் சக மனிதர்கள் பட்டினியாலும், நோயினாலும், தேசம், தேசியம், மதம் போன்றவற்றின் பெயரால் அடித்துக்கொண்டு சாகின்றார் கள். மனிதனுக்கு மனிதனே எதிரியா? பார், மனிதர்களுக் குள் அன்பு இல்லை, வெறுப்பு கூடிவிட்டது. என்ன நியாயம் இது? மனித வாழ்வை துக்கமும் வெறுமையும் சூழ்ந்து கொண்டிருக்கும்போது நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?".

ஆஸ்கர் விருது பெற்ற பின் அவர் பேசிய பேச்சி லும் இதுதான் எதிரொலிக்கிறது: "எனது வாழ்க்கை நெடுகி லும் அன்பு, வெறுப்பு என்ற இரண்டும் எப்போதும் என் முன் சேர்ந்தே வந்திருக்கின்றன. நான் எப்போதும் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். மதத்தாலும் சாதியாலும் பிரதேச அடையாளத்தாலும் மட்டுமே பிரித்து அடையாளம் காணப்படுகின்ற இந்த உலகில், அன்பு செலுத்துங்கள் என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது. இசை மனிதர்களை இணைக்க வேண் டும். விருதுகளை நான் எதிர்பார்ப்பதில்லை". இங்கே தான் ரஹ்மான் என்ற கலைஞன் மகத்தான மனிதனாக நிற்கின் றான். இந்திய சமூகம் மத ரீதியாக சாதிரீதியாகப் பிளவு பட்டிருப்பதையும் இதன் பின்னணியில் உள்ள 'ஒரே மதம், ஒரே இனம், தேசியம்' என்று பேசுகின்ற ஆர்.எஸ்.எஸ். மதவெறி சக்தி களையும் பெயர் சொல்லாமல் அடையாளம் காட்டுகின் றான். தனது இசையின் அரசியல் இதுதான் என்று அழுத்தமாகப் பதிவு செய்கின்றான்.

விமானநிலையத்தில், நள்ளிரவில் தனது உடலை விடவும் பெரிய ஒரு மேளத்தை கட்டிக்கொண்டு ஆடிய சிவமணி, வடசென்னையில் ஒரு சுடுகாட்டின் ஓரம் பிறந்த வர், தனது பிள்ளைப்பிராயத்தை சுடுகாட்டு ஆட்டத்துக்கும் மேளச்சத்தத்துக்கும் நடுவில் கழித்தவர். இந்த ஆட்டமும் இசையும்தான் அவருக்கு இசை ஞானத்தை கற்றுத்தந் தது. இன்றைக்கு சென்னையிலே மரண கானா விஜி மக்களி டையே பிரபலம் அடைந்து வருகின் றார். மரண வீடுகளில் விடிய விடிய காப்பித் தண்ணி குடித்துக் கொண்டு யாருக் காகப் பாடுகின்றார் விஜி? செத்துப் போன வன் எழுந்து கேட்கப் போகின்றானா? இல்லை. செத்துப் போனவரின் நல்ல, கெட்ட குணங்கள், மனிதஉறவுகள், ஆசாபாசங்கள் இவற்றோடு கூடவே இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை, விஜியின் தோல் இசைக்கருவியான 'டேப்' வழியே வந்து விழுகின்றது.

ரஹ்மானும் சிவமணியும் விஜியும் அவர்களைப் போன்ற எண்ணற்ற கலைஞர்களும் தமது இசை வடிவில் மக்களின் அரசியலைப் பேசுகின்றார்கள். தமது மேதை மையை மக்களின் குரலை எதிரொலிக்கப் பயன்படுத்து கின்றார்கள். இசைஞானியாக வானத்தில் சஞ்சரிப்பதை விடவும் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, எம்.பி.சீனி வாசன் போன்ற மனிதநேயம் மிக்கதெருப்பாடகனாக இருப்பதே மனிதனாக இருப்பதற்கு அழகு என்பதையும் கலைஞனுக்குள் இருக்க வேண்டிய அரசியலையும் நமக்கு சொல்லாமல் சொல்கின்றார்கள்.

FM

FM





Popular Post

Powered by Blogger.

- Copyright © நிழலின் தடம் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -